துபாயில் போக்குவரத்து விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்டு வந்தாலும் ஒரு சில வாகன ஓட்டிகள் சில நேரங்களில் விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டுகையில் காவல்துறையால் பிடிபட்டுள்ளனர். அந்தவகையில் மணிக்கு 304 கிமீ வேகத்தில் பைக் ஓட்டிச் சென்ற இளைஞர் ஒருவரை துபாய் காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. அந்த நபர் சாலையில் பொறுப்பற்ற முறையில், சொந்த உயிருக்கும் மற்றவர்களின் பாதுகாப்பையும் அச்சுறுத்தும் விதமாக வாகனத்தை ஓட்டிச் சென்றதையடுத்து அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக காவல்துறையால் பகிரப்பட்ட வீடியோவில், அந்த நபர் கார்களுக்கும் லாரிகளுக்கும் இடையில் பொறுப்பற்ற முறையில் பைக்கில் சாகசம் செய்வதையும், அவசர நிலைகளுக்கென நியமிக்கப்பட்ட பாதையில் அதிவேகத்தில் சீறிப் பாய்வதையும் காணமுடிகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தின் வாகனத் தண்டனைச் சட்டத்தின் கீழ் (2023 ஆம் ஆண்டின் ஆணை எண் 30), பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுவது கடுமையான அபராதங்களுக்கு வழிவகுக்கும், இதில் பறிமுதல் செய்த வாகனத்தை விடுவிக்க 50,000 திர்ஹம்ஸ் அபராதம் செலுத்துவது அடங்கும்.
இந்த நடவடிக்கைகள் பொது பாதுகாப்புக்கு கடுமையான ஆபத்து என்று வலியுறுத்திய அதிகாரிகள், அனைத்து ஓட்டுனர்களையும் வேக வரம்புகளைப் பின்பற்றவும், சாலைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க பொறுப்புடன் வாகனம் ஓட்டுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர். துபாயில், அதிவேகத்தில் சென்றால் 2,000 திர்ஹம்ஸ் மற்றும் 12 ப்ளாக் பாயிண்ட்கள் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.
ஐக்கிய அரபு அமீரகம் குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இருவரையும் பாதுகாக்க கடுமையான போக்குவரத்து விதிகளைக் கொண்டுள்ளது. இதில் ஆபத்தான வாகனம் ஓட்டுவதற்கு அதிக அபராதம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#News | Dubai Police Summons Young Reckless Motorists for Over Speeding at 300 km/h
Details:https://t.co/t5IkQb94dH#RoadSafety pic.twitter.com/q38bSpGLxJ
— Dubai Policeشرطة دبي (@DubaiPoliceHQ) February 21, 2025
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel