UAE ரமலான் 2025: தொடக்க தேதி, நோன்பு நேரம், சாலிக், பார்க்கிங் கட்டணம் உள்ளிட்ட முழு விபரங்களும் வெளியீடு…

இன்னும் ஓரிரு வாரங்களில் ரமலான் 2025 தொடங்கவுள்ள நிலையில், அமீரகக் குடியிருப்பாளர்களின் தினசரி நடைமுறைகளும் அதற்கேற்றாற்போல் மாறவுள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் இலவச பார்க்கிங், பள்ளி மற்றும் வேலை நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டு குறைக்கப்படுவது வழக்கம். பொதுவாக, இஸ்லாமிய மக்கள் ரமலான் மாதத்தில் விடியற்காலையில் இருந்து சூரியன் மறையும் வரை சாப்பிடாமல் நோன்பு கடைபிடிப்பார்கள். எனவே, தினசரி நடை முறையை அத்தகைய மக்களின் தேவைகளுடன் சமநிலைப்படுத்த ரமலானின் போது இந்த மாற்றங்கள் செய்யப்படுகிறது.
மேலும், இந்த மாதத்தில் தாராவீஹ் என்று அழைக்கப்படும் சிறப்பு இரவு பிரார்த்தனைகள் நாடு முழுவதும் உள்ள மசூதிகளில் நிகழ்த்தப்படும். குறிப்பாக, மாதத்தின் கடைசி பத்து நாட்களில், சிறப்பு கியாம் உல் லேல் (Qiyam ul layl) பிரார்த்தனைகள் இரவு முழுவதும் நீடிக்கும்.
ரமலான் 2025
ரமலானுக்கு முந்தைய மாதமான ஷாபான் கடந்த ஜனவரி 31, வியாழக்கிழமை தொடங்கியது. இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் நன்கொடைகளின் பொது ஆணையம் (Awqf) வெளியிட்டுள்ள ஹிஜ்ரி நாட்காட்டியின்படி, இந்த ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி ரமலான் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், சரியான தொடக்க தேதி பிறை தென்படுவதைப் பொருத்து அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வருடத்தை பொறுத்தவரை மக்கள் நோன்பு கடைபிடிக்க குளிரான வெப்பநிலை காரணமாக எளிதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது அமீரகத்தில் மார்ச் மாதத்தில் வெப்பநிலை வழக்கமாக 21 ° செல்சியஸ் முதல் 28 ° செல்சியஸ் வரை பதிவாகும். இதன்மூலம் சராசரியாக 24 ° செல்சியஸ் வெப்பநிலை இருக்கும் என கூறப்படுகின்றது.
நோன்பு நேரம்
ரமலானின் முதல் நாளில், நோன்பு நேரம் 12 மணி 58 நிமிடங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து ரமலானின் 11 வது நாளுக்குள், ஃபஜர் தொழுகை நேரம் அதிகாலை 5.16 மணிக்கு இருக்கும் என்றும், இதனால் மாலை 6.29 மணிக்கு மக்ரிப் தொழுகை இருக்கும் போது, நோன்பு நேரம் 13 மணி நேரம் 13 நிமிடங்களாக அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
பின்னர் மாதத்தின் கடைசி நாளில், 13 மணி 41 நிமிடங்கள் நோன்பு இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டான 2024 உடன் ஒப்பிடும்போது 2025 இன் நோன்பு நேரம் குறைவாக உள்ளது. கடந்த ஆண்டு, நோன்பு நேரம் 13 மணி நேரம் 16 நிமிடங்கள் முதல் கிட்டத்தட்ட 14 மணி நேரம் வரை இருந்தது குறிப்பிடத்தக்கது.
ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பை அன்றைய நாள் முடிக்கும்போது, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ரமலான் கனான் ஃபயரிங் (cannon fire) நடத்தப்படும். அத்துடன் குடியிருப்பாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் ஒரே மாதிரியான உணவு அனுபவத்தை வழங்கும் பல்வேறு இடங்களில் சிறப்பு இஃப்தார் மற்றும் சுஹூர் கூடாரங்கள் அமைக்கப்படும்.
பள்ளி மற்றும் வேலை நேரங்கள்
ரமலானை முன்னிட்டு அமீரகம் முழுவதும் பள்ளி மற்றும் வேலை இரண்டிற்கும் நேரங்கள் சுருக்கப்படுகின்றன. பொதுவாக, பள்ளி நேரம் இரண்டு மணிநேரம் சுருக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களும் தங்கள் வேலை நேரங்களை மாற்றுகின்றன.
இந்த ஆண்டு, ரமலான் பல பள்ளிகளுக்கு இடைக்கால இடைவெளிக்கு (mid-term break) சில வாரங்களுக்குப் பிறகு தொடங்குகிறது. மேலும், இந்த மாதம் சர்வதேச பாடத்திட்ட பள்ளிகளுக்கான கால-இறுதி தேர்வுகள் மற்றும் இந்திய பாடத்திட்ட பள்ளிகளுக்கான இறுதித் தேர்வுகளுடன் ஒத்துப்போகிறது, அவை வழக்கமாக பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் திட்டமிடப்படுகின்றன. எனவே, சில பள்ளிகள் தேர்வுகளை மாற்றியமைத்துள்ளன, மற்றவை அவற்றை ரத்து செய்துள்ளன என்பது தெரிய வந்துள்ளது.
சாலிக் கட்டணங்கள்
சாலிக் நிறுவனம், புனித ரமலான் மாதத்திற்கான அதன் மாறக்கூடிய விலை நேரங்களையும் கட்டணங்களையும் பட்டியலிட்டுள்ளது. அதன்படி, சாதாரண நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சாலிக் கட்டணம் 6 திர்ஹம்களாக இருக்கும். நெரிசல் இல்லாத நேரங்களில் காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் அதிகாலை 2 மணி வரையிலும் 4 திர்ஹம்ஸ் ஆகக் குறையும் என்பது தெரிய வந்துள்ளது.
மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில், பொது விடுமுறைகள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளின் போது, பீக் ஹவர் கட்டணங்கள் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை) 4 திர்ஹம்ஸ் ஆகவும், நெரிசல் இல்லாத நேரங்கள் (காலை 7 முதல் 9 மணி வரை மற்றும் காலை 2 மணி முதல் 7 மணி வரை) 4 திர்ஹம்ஸ் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, வார விடுமுறை நாட்கள் மற்றும் வார நாட்களில் நள்ளிரவுக்கு மேல் அதிகாலை 2 மணி முதல் காலை 7 மணி வரை கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டண பார்க்கிங்
கட்டண பார்க்கிங் நேரங்களும் புனித மாதத்தில் மாற்றப்படும். மார்ச் 2025 இன் இறுதிக்குள் மாறுபட்ட பார்க்கிங் கட்டணக் கொள்கையை தொடங்கவுள்ளதாக RTA அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி, பிரீமியம் பார்க்கிங் இடங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 6 திர்ஹம் என்றும், காலை 8 மணி முதல் 10 மணி வரை பீக் ஹவர்ஸ் மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை பீக் ஹவர்ஸ் ஆகியவற்றில் மற்ற பொது கட்டண பார்க்கிங் இடங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 4 திர்ஹம் என்றும் பார்க்கிங் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இரவு, 10 மணி முதல் காலை 8 மணி வரை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாள் முழுவதும் பார்க்கிங் இலவசம் என்று கூறப்பட்டுள்ளது.
ஈத் விடுமுறை
ரமலானின் தொடக்கத்தையும் அது எத்தனை நாட்கள் நீடிக்கும் என்பதையும் பொறுத்து, ஈத் அல் பித்ர் மார்ச் 30, மார்ச் 31 அல்லது ஏப்ரல் 1 ஆம் தேதிகளில் கொண்டாடப்படும். ஏப்ரல் 1 ஆம் தேதி ஈத் இருந்தால், இது ஐக்கிய அரபு அமீரகக் குடியிருப்பாளர்களுக்கு வார இறுதியுடன் சேர்த்து ஆறு நாட்கள் விடுமுறை நாட்களை வழங்கக்கூடும். ஈத் விடுமுறைகள் பொதுவாக ரமலான் 30 முதல் ஷவ்வால் 3 வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel