துபாய் வெளியிட்ட புதிய தீர்மானம்: ஃப்ரீ சோன் வணிகங்கள் இப்போது பிரதான நிலப்பகுதியிலும் செயல்படலாம்!!

அமீரகத்தில் மெயின் லேண்ட், ஃப்ரீ ஸோன் என இரு பிரிவுகளில் வணிகங்கள் செயல்படு வருகின்றன. இந்த இரு பிரிவுகளில் வேலை பார்ப்பவர்களுக்கு வேலை முறையில் ஒரு சில வித்தியாசங்கள் இருக்கும். இந்த நிலையில் துபாய் அரசானது ஒரு புதிய தீர்மானத்தை அறிவித்துள்ளது. இது ஃப்ரீ சோன் நிறுவனங்கள் (free zone business) துபாயின் பிரதான நிலப்பகுதிக்குள் செயல்பட அனுமதிக்கிறது. இது வணிக வளர்ச்சி மற்றும் முதலீட்டிற்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கும் என்று கூறப்படுகிறது.
துபாயின் பட்டத்து இளவரசரும் நிர்வாகக் குழுவின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களால் வெளியிடப்பட்ட புதிய விதியானது, துபாய் சர்வதேச நிதி மையத்தின் (DIFC) கீழ் உரிமம் பெற்ற நிதி நிறுவனங்கள் தவிர, ஃப்ரீ சோன் வணிகங்கள் துபாய் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறையின் (DET) ஒப்புதலைப் பெற்றால் அவற்றின் மண்டலங்களுக்கு (outside of zones) வெளியே விரிவடைய அனுமதிக்கப்படும் என கூறப்படுகிறது.
இந்த முக்கிய முடிவு, 2033 ஆம் ஆண்டுக்குள் துபாயின் பொருளாதாரத்தை இரட்டிப்பாக்கி, உலகளவில் முதல் மூன்று பொருளாதார மையங்களில் ஒன்றாக எமிரேட்டை மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட துபாய் பொருளாதார நிகழ்ச்சி நிரலை (D33) ஆதரிக்கிறது.
வணிகங்களுக்கு என்ன பயன்?
இந்த புதிய தீர்மானத்தால் ஃப்ரீ சோன் நிறுவனங்கள் இப்போது துபாயின் பிரதான நில சந்தையை அணுகலாம், இதனால் வாடிக்கையாளர்களை அவர்கள் எளிதாக அடைய முடியும் மற்றும் அவர்களுக்கு ஒரு பெரிய வியாபார சந்தை கிடைக்கும். மேலும், இந்த நடவடிக்கை துபாய் முழுவதும் புதுமை, வேலை உருவாக்கம் மற்றும் அதிக வணிக நடவடிக்கைகளை ஊக்குவிக்கிறது.
இந்த புதிய தீர்மானத்தின் மூலம் துபாயில் ஒரு கிளையைத் திறக்க ஃப்ரீஸோன் நிறுவனங்கள் DET உரிமத்திற்கு விண்ணப்பிக்கலாம் அல்லது குறிப்பிட்ட செயல்பாடுகளுக்கு அனுமதிகளைப் பெறலாம். இந்த உரிமங்கள் ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும் மற்றும் புதுப்பிக்கத்தக்கதாக இருக்கும். நிறுவனங்கள் பிரதான நிலப்பகுதி மற்றும் ஃப்ரீ சோன் செயல்பாடுகளுக்கு என தனி நிதி பதிவுகளை வைத்திருக்க வேண்டும் மற்றும் அனைத்து அமீரக சட்டங்கள் மற்றும் விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.
செயல்பாடு
- DET இன்னும் ஆறு மாதங்களுக்குள் அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளின் பட்டியலை வெளியிடும்.
- அதனடிப்படையில், ஃப்ரீ சோன்களுக்கு வெளியே செயல்படும் தற்போதைய வணிகங்கள் இந்த விதிகளை ஒரு வருடத்திற்குள் புதிய விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும், DET ஒப்புதல் அளித்தால் ஒரு வருட நீட்டிப்புக்கான விருப்பமும் இருக்கும்.
இந்த நடவடிக்கை துபாயை இன்னும் வணிகத்திற்கு சிறந்த நகரமாக மாற்ற உதவுகிறது. இதனால் நிறுவனங்களை விரிவாக்கம் செய்ய, முதலீடு மற்றும் வளர எளிதாக்குகிறது. அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் இப்போது அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel