அமீரக சட்டங்கள்அமீரக செய்திகள்

UAE: ஒர்க் பெர்மிட் இல்லாமல் தொழிலாளர்களை பணியமர்த்தினால் ஒரு வருட சிறைதண்டனை, 1 மில்லியன் திர்ஹம்ஸ் அபராதம்… எச்சரிக்கும் அமைச்சகம்…!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் மனிதவள மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சகம் (MOHRE), செல்லுபடியாகும் பணி அனுமதி (work permit) இல்லாமல் தனிநபர்களை, சோதனை அடிப்படையில் (trial basis) கூட, பணியமர்த்த வேண்டாம் என்று தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் முதலாளிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது வணிகங்கள் மற்றும் வீட்டுப் பணியாளர்கள் இருவருக்கும் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. முறையான ஆவணங்கள் இல்லாமல் ஒருவரை பணியமர்த்துவது சட்டவிரோதமானது மற்றும் அமீரக தொழிலாளர் சட்டங்களை மீறுவதாகும்.

நாடு முழுவதும் சட்டவிரோத பணியமர்த்தலைக் கண்டறிய MOHRE அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்புக்கான கூட்டாட்சி ஆணையத்துடன் (ICP) இணைந்து  தொடர்ந்து வணிகங்களை ஆய்வு செய்கிறது. இதன் அடிப்படையில் பணி அனுமதி இல்லாத தொழிலாளர்களை பணியமர்த்துவதில் முதலாளிகள் பிடிபட்டால், அவர்கள் பின்வரும் கடுமையான தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும் என கூறப்பட்டுள்ளது. அவை:

  • முதலாளியின் தொழிலாளர் கோப்பை (labor file) இடைநீக்கம் செய்தல்.
  • வீட்டுப் பணியாளர்களுக்கான புதிய பணி அனுமதிகள் முதலாளிகளுக்கு வழங்கப்படுவதை நிறுத்தி வைத்தல்.
  • அபராதம் மற்றும் சிறைத்தண்டனை உட்பட சட்ட நடவடிக்கை.

வீட்டுப் பணியாளர்களைப் பொறுத்தவரை, செல்லுபடியாகும் அனுமதி இல்லாமல் பணியமர்த்துவது மிகவும் கடுமையான சட்ட நடவடிக்கைக்கு வழிவகுக்கும். இதற்கு, குறைந்தபட்சம் ஒரு வருடம் சிறைத்தண்டனை மற்றும் 200,000 திர்ஹம்ஸ் முதல் 1 மில்லியன் திர்ஹம்ஸ் வரை அபராதம் உள்ளிட்ட தண்டனைகள் விதிக்கப்படும் என்று அமைச்சகம் எச்சரித்துள்ளது.

MOHRE ஆல் வழங்கப்பட்ட டிஜிட்டல் அணுகல் சலுகைகளை தவறாகப் பயன்படுத்துபவர்களுக்கும் இதே தண்டனை பொருந்தும், இது தொழிலாளர் நடைமுறைகள், வேலைவாய்ப்பு உறவுகள் அல்லது அமைச்சக விதிமுறைகளில் மீறல்களுக்கு வழிவகுக்கும். மேலும், MOHREயின் வலைத்தளம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் சரிபார்க்கக்கூடிய உரிமம் பெற்ற ஆட்சேர்ப்பு நிறுவனங்களை மட்டுமே பயன்படுத்துமாறு முதலாளிகளுக்கு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

தொழிலாளர் சட்டங்களில் புதிய மாற்றங்களையும் MOHRE எடுத்துரைத்தது, அவற்றில் பின்வருவன அடங்கும்:

  • வீட்டுப் பணியாளர்களுக்கான தகுதிகாண் காலத்தை (probation period) மூன்று மாதங்களிலிருந்து ஆறு மாதங்களாக நீட்டித்தல்.
  • ஆட்சேர்ப்பு முகவர் நிறுவனங்கள் (recruitment agency), முதலாளிகளுக்கு இரண்டு ஆண்டு நிதி உத்தரவாதங்களை வழங்க வேண்டும்.
  • சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் ஆட்சேர்ப்பு மற்றும் வேலைவாய்ப்பு கட்டணங்களுக்கான தெளிவான பணத்தைத் திரும்பப் பெறும் கொள்கைகள் (Clear refund policies).

அத்துடன் அமைச்சகம் நிறுவனங்களுக்கு சில நெகழ்வுத்தன்மையையும் வழங்குகின்றது. இதில் பகுதிநேர வேலை அனுமதி மற்றும் 15-18 வயதுடைய தொழிலாளர்களுக்கு பகுதிநேர சிறார் வேலை அனுமதிகளை வழங்குதல் போன்றவை அடங்கும். இந்த சட்ட நடவடிக்கைகளின் மூலம் தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகள் இருவரையும் பாதுகாக்க தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்துவதில் MOHRE அதன் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!