அமீரகத்தில் நாளை மாலை ஷவ்வால் பிறையைப் பார்க்குமாறு குடியிருப்பாளர்களுக்கு அழைப்பு..!!

உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய நாடுகளும் இஸ்லாமியப் பெருமக்களும் மார்ச் 29, 2025 சனிக்கிழமை ஈத் அல் ஃபித்ர் பிறையை பார்ப்பதற்கு தயாராகி வரும் நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபத்வா கவுன்சில் நாளை சனிக்கிழமையன்று மாலை வானில் ஷவ்வால் பிறையை பார்க்குமாறு நாட்டில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இது புனித ரமலான் மாதத்தின் முடிவையும், ஈத் அல் பித்ர் பண்டிகையின் தொடக்கத்தையும் குறிக்கும் நிகழ்வாகும். எனவே நாளை மார்ச் 29 அன்று, யாராவது பிறையைக் கண்டால் அவர்கள் தங்கள் சாட்சியங்களைச் சமர்ப்பிக்க அமீரகத்தின் பிறை பார்க்கும் குழுவைத் தொடர்பு கொள்ளுமாறும் ஃபத்வா கவுன்சில் குடியிருப்பாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது.
இருப்பினும், மார்ச் 29 அன்று பிறையைக் காண வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருப்பதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் வானியல் மையம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. ஒரு வரைபடத்தையும் சந்திரனை பெரும்பாலும் காணக்கூடிய பொதுவான பகுதியையும் வெளியிட்ட மையம், பெரும்பாலான அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் உட்பட உலகின் பல பகுதிகளில் நாளை பிறையை பார்ப்பது கடினமாக இருக்கும் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது.
எனவே வானியல் கணக்கீடுகளின் அடிப்படையில், இந்த வருட ரமலான் மாதம் 30 நாட்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ரமலானின் கடைசி நாள் மார்ச் 30 ஆக இருக்கும், மேலும் ஈத் பண்டிகையானது அமீரகத்தில் மார்ச் 31, திங்கள்கிழமை அன்று தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமீரகத்தை பொருத்த வரையில், ஈத் அல் ஃபித்ர் பண்டிகைக்கு மூன்று நாட்கள் அதிகாரப்பூர்வ விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை பிறை பார்ப்பதை பொருத்து அமீரக குடியிருப்பாளர்கள், சனிக்கிழமை வார விடுமுறையையும் சேர்த்து நான்கு முதல் ஐந்து நாட்கள் வரை ஈத் அல் ஃபித்ர் விடுமுறையை அனுபவிப்பார்கள். அதுவே சனிக்கிழமை வேலை நாளாக இருப்பவர்களுக்கு மூன்று முதல் நான்கு நாட்கள் மட்டுமே விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel