கடந்த ஆண்டான 2024இல் ஐக்கிய அரபு அமீரக அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட புதிய போக்குவரத்து மற்றும் சாலை விதிமுறைகள் சென்ற மார்ச் 29 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. அமீரகத்தில் இன்றுடன் ஈத் விடுமுறை முடிவடையவிருப்பதால் நாளை முதல் குடியிருப்பாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்பவுள்ளனர். எனவே அமீரக குடியிருப்பாளர்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் அமீரகத்தில் அமலுக்கு வந்துள்ள மாற்றங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். எனவே அது பற்றிய விபரங்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவதற்கு அபராதம்:
>> அமீரகத்தில் அங்கீகரிக்கப்படாத வெளிநாட்டு உரிமத்துடன் வாகனம் ஓட்டுவதற்கு முதல் முறையாக பிடிக்கப்படும் குற்றவாளிகளுக்கு 2,000 முதல் 10,000 திர்ஹம்ஸ் வரை அபராதம். ஆனால் அதே தவறை மீண்டும் செய்யும் குற்றவாளிகளுக்கு 5,000 முதல் 50,000 திர்ஹம்ஸ் வரை அபராதம் அல்லது மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
>> உரிமம் இல்லாமல் அல்லது வாகன வகைக்கு (vehicle category) செல்லுபடியாகாத டிரைவிங் லைசென்ஸ் உரிமத்துடன் வாகனம் ஓட்டினால் 50,000 திர்ஹம்ஸ் அபராதம் அல்லது மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும். அதாவது இலகுரக வாகன உரிமம் உள்ளவர் கனரக வாகனம் போன்ற மாறுபட்ட வகையை சார்ந்த வாகனத்தை ஓட்டினால் இந்த அபராதம் விதிக்கப்படும். இந்த குற்றத்தை மீண்டும் செய்தால் 20,000 மற்றும் 100,000 திர்ஹம்ஸ்க்கும் இடையில் அபராதமும், குறைந்தபட்சம் மூன்று மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.
ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவதிலிருந்து விலக்குகள்:
1. வெளிநாட்டு ஓட்டுநர்கள்: பிற நாடுகளைச் சேர்ந்த செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் கொண்டவர்கள், அவர்களின் உரிமம் அங்கீகரிக்கப்படும் வரை தங்கள் வாகனங்களை பதிவு செய்யாமல் ஐக்கிய அரபு அமீரகத்தில் வாகனம் ஓட்டலாம்.
2. சர்வதேச ஓட்டுநர் உரிமங்கள்: செல்லுபடியாகும் சர்வதேச ஓட்டுநர் உரிமங்களைக் கொண்டவர்கள் அல்லது செல்லுபடியாகும் சர்வதேச ஓட்டுநர் உரிமங்களை வைத்திருப்பவர்கள், போக்குவரத்து அல்லது வருகை நோக்கங்களுக்காக அமீரகத்தில் தங்கியிருந்த காலத்தில் வாகனம் ஓட்ட அனுமதிக்கிறது.
3. தற்காலிக ஓட்டுநர் அனுமதிகள்: குடியிருப்பு அல்லாத நோக்கங்களுக்காக தற்காலிக ஓட்டுநர் அனுமதி உள்ளவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்ட முடியும்.
அமீரகத்தில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தேவைகள்:
1. குறைந்தது 17 வயது இருக்க வேண்டும்.
2. உரிமம் வழங்கும் ஆணையத்தின் தேவைக்கேற்ப மருத்துவ பரிசோதனையை முடிக்கவும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
3. ஓட்டுநர் பரிசோதனையில் தேர்ச்சி பெற வேண்டும்.
உரிமம் இடைநீக்கம் அல்லது திரும்பப்பெறுதல்:
போக்குவரத்துச் சட்டம் கட்டுரை 12இன் படி, நீங்கள் வாகனம் ஓட்ட தகுதியற்றவராக இருந்தால், அல்லது அங்கீகரிக்கப்பட்ட வாகனங்களை ஓட்டுவதற்கு தேவையான மருத்துவ தகுதி இல்லாததால் சாலை பாதுகாப்புக் கவலைகள் இருந்தால் ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் உங்கள் உரிமத்தை இடைநிறுத்தலாம் அல்லது ரத்து செய்யலாம்.
ஓட்டுநர் தடுப்புக்காவலுக்கு வழிவகுக்கும் ஆறு குற்றங்கள்:
புதிய சட்ட அமலாக்கம் பின்வரும் விதிமீறல்களுக்கு ஓட்டுநர்களை கைது செய்யலாம்: அவை,
1. பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுவதால் மரணம் அல்லது காயம் ஏற்படுத்துதல்.
2. வாகனம் ஓட்டும்போது மற்றொரு நபரின் சொத்துக்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்துதல்.
3. பொறுப்பற்ற முறையில் அல்லது பொதுமக்களுக்கு ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல்.
4. போதை மருந்து மற்றும் ஆல்கஹால் போன்றவற்றை உட்கொண்டு வாகனம் ஓட்டுதல்.
5. போலீஸ் அதிகாரிகளிடம் எமிரேட்ஸ் ஐடி வழங்க மறுத்தல் அல்லது மேற்கூறிய குற்றத்திற்குப் பிறகு தவறான விவரங்களை வழங்குதல்.
6. விபத்து நடந்த இடத்திலிருந்து தப்பி ஓட முயற்சித்தல் அல்லது வாகனத்தை நிறுத்த போலீஸ் அதிகாரிகள் பிறப்பிக்கும் உத்தரவுகளை புறக்கணித்தல்.
வாகனப் பறிமுதல்:
கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த நிகழ்வுகளில் போக்குவரத்து அதிகாரிகள் வாகனங்களை பறிமுதல் செய்ய முடியும்:
1. பிரேக்குகள் அல்லது விளக்குகள் போன்ற கோளாறுகளுடன் வாகனம் ஓட்டுவதற்கு பாதுகாப்பற்றதாக இருந்தால் அல்லது சரியான எண் தகடுகள் போன்ற தேவையான பதிவு விவரங்கள் இல்லை என்றால் குறைபாடுகள் சரிசெய்யப்படும் வரை வாகனம் பறிமுதல் செய்யப்படலாம்.
2. ஓட்டுநருக்கு சரியான உரிமம் இல்லை என்றால் அவர் சரியான உரிமம் பெறும் வரை வாகனம் பறிமுதல் செய்யப்படலாம்.
3. அங்கீகரிக்கப்படாத வாகன மாற்றங்கள் செய்யப்படும் போது வாகனம் பறிமுதல் செய்யப்படும்.
4. வாகனம் ஒரு கிரிமினல் வழக்குடன் இணைக்கப்பட்டுள்ளது என்றால் அந்த வழக்கு முடியும் வரையிலும் வாகனம் பறிமுதல் செய்யப்படலாம்.
பாதசாரி விதிகள்:
பாதசாரிகள் சாலைகளைக் கடக்கவோ அல்லது நியமிக்கப்பட்ட பகுதிகளுக்கு வெளியே நிற்கவோ முடியாது. குறிப்பாக மணிக்கு 80 கிமீ வேகத்தில் வேக வரம்புகளைக் கொண்ட சாலைகளைக் கடப்பது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் இதனால் ஏற்படும் காயம் மற்றும் உயிரிழப்பு போன்ற எந்தவொரு மீறல்களுக்கும் அவர்களே முழு பொறுப்பு.
படுகொலை அபராதங்கள்:
சாலையில் ஒரு அபாயகரமான விபத்தை ஏற்படுத்தினால், குறைந்தது 50,000 திர்ஹம்ஸ் அபராதம் மற்றும் சிறைவாசம் விதிக்கப்படும். அதேபோன்று சிவப்பு விளக்கை மீறி வாகனம் ஓட்டுதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், இடைநிறுத்தப்பட்ட அல்லது ரத்து செய்யப்பட்ட உரிமத்துடன் வாகனம் ஓட்டுதல் அல்லது வெள்ளம் சூழ்ந்த பள்ளத்தாக்கில் வாகனம் ஓட்டுதல் போன்ற பிற கடுமையான மீறல்கள் இருந்தால், அபராதம் குறைந்தபட்சம் 100,000 திர்ஹம்ஸ் ஆகும். அத்துடன் குறைந்தபட்சம் ஒரு வருடம் சிறைத்தண்டனையும் அனுபவிக்க நேரும்.
ஒட்டுமொத்தத்தில், ஐக்கிய அரபு அமீரக அரசால் கடந்த மார்ச் 29 முதல் நாடு முழுவதும் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ள இந்த புதிய போக்குவரத்து சட்டம், அமீரகத்தின் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மீறல்களுக்கான அபராதங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதுடன், வாகன ஒட்டிகள் மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்பையும் உறுதிசெய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel