அமீரகத்தில் ‘ஜம்ஜம் தண்ணீர்’ என்ற பெயரில் மிகப்பெரிய மோசடி.. அதிரடி நடவடிக்கையை மேற்கொண்ட அதிகாரிகள்…

அமீரகத்தில் குடியிருப்பு இடத்தை சட்டவிரோதமாக தண்ணீர் பாட்டில் அடைக்கும் மையமாக மாற்றி, சாதாரண குழாய் தண்ணீரை ஜம்ஜம் தண்ணீர் என்று மோசடியாக விற்பனை செய்த ஒருவரை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்த சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷார்ஜாவின் நகராட்சி கட்டுப்பாடு மற்றும் ஆய்வுத் துறை மற்றும் சுகாதாரக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்புத் துறையுடன் இணைந்து நடத்திய வழக்கமான ஆய்வுகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை கண்டுபிடிக்கப்படுள்ளது.
அத்துடன் சமூக ஊடக தளங்கள் மூலம் போலி தண்ணீர் விளம்பரப்படுத்தப்பட்டு அதிக விலைக்கு விற்கப்பட்டதும் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட தகவலில் ஷார்ஜாவில் இருக்கக்கூடிய ஒரு வீட்டிலிருந்து பாட்டில் தண்ணீரை ஏற்றும் வாகனங்கள் உட்பட சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளை கவனித்ததைத் தொடர்ந்து, அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தினர் என கூறப்பட்டுள்ளது.
அந்த நபர் வளாகத்திற்குள் சுகாதாரமற்ற நிலையில் தண்ணீரை பாட்டில்களில் அடைத்து ஜம்ஜம் என்று லேபிளிட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில் அதிகாரிகளிடம் சிக்கியதாகக் கூறப்படுகின்றது. அதையடுத்து, போலி ஜம்ஜம் லேபிள்களைக் கொண்ட அட்டைப்பெட்டிகள் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள் அந்த இடத்திலேயே அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குற்றவாளிக்கு எதிராக ஷார்ஜா நகராட்சி சட்ட மற்றும் நிர்வாக நடைமுறைகளைத் தொடங்கியுள்ள நிலையில், ஷார்ஜா நகர நகராட்சியின் இயக்குநர் ஜெனரல் ஒபைத் அல் டெனிஜி, பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் சமூகத்தை ஏமாற்றவோ அல்லது தீங்கு செய்யவோ முயற்சிக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் நகராட்சியின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை வலியுறுத்தியுள்ளார்.
மேலும் விசாரணையில், அந்த நபர் உரிமம் பெற்ற நிறுவனமான ‘ RT Mineral Water Trading Company’யை வைத்திருப்பதும், அதைப் பயன்படுத்தி போலி ஜம்ஜம் தண்ணீருக்கான மோசடி விலைப்பட்டியல்களை தயாரித்து, நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பெயரைப் பயன்படுத்தி நுகர்வோரை தவறாக வழிநடத்துவதும் தெரியவந்துள்ளது. பின்னர் அந்த நிறுவனத்தை பொருளாதார மேம்பாட்டுத் துறை மூடியது, அதே நேரத்தில் ஷார்ஜா காவல்துறை அந்த நபரை மேலும் விசாரணைக்காகக் காவலில் எடுத்தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, உரிமம் பெறாத உணவு நிறுவனங்களிடமிருந்தும் அல்லது சமூக ஊடகங்களில் தெரியாத மூலங்களிலிருந்தும் பொருட்களை வாங்குவதைத் தவிர்க்குமாறும் நகராட்சி குடியிருப்பாளர்களை வலியுறுத்தியுள்ளது. குறைபாடுகள் மற்றும் புகார்களை 993 என்ற அழைப்பு மையத்திற்கு அனுப்பலாம் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel