இந்திய செய்திகள்

கிளம்பிய 3 நிமிடங்களில் 242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்து.. பலர் உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் தகவல்..!! அகமதாபாத்தில் நடந்த துயர சம்பவம்…

இன்று (ஜூன் 12, வியாழக்கிழமை) பிற்பகல் இந்தியாவின் மேற்கு நகரமான அகமதாபாத்தில் இருந்து சுமார் 242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சில நிமிடங்களில் விபத்துக்குள்ளாகி அருகிலுள்ள குடியிருப்பு பகுதியில் தீப்பிடித்து எரிந்தததாக செய்தி ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளன. இன்று (வியாழன்) அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிச் சென்ற போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் AI171, பிற்பகல் 1:38 மணிக்கு புறப்பட்டு ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு மேகனி நகர் பகுதியில் விபத்துக்குள்ளானதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) தெரிவித்துள்ளது.

இந்த விமானத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 232 பயணிகள் மற்றும் 10 கேபின் பணியாளர்கள் மற்றும் விமானிகள் இருந்ததாகவும், கேப்டன் சுமித் சபர்வால் தலைமை தாங்கினார் என்றும், துணை விமானி கிளைவ் குந்தர் உதவி செய்ததாகவும் ஏர் இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது. அதிகாரிகள் பலர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர். மேலும் விபத்து நடந்த இடத்திலிருந்து வந்த காட்சிகள் பெரிய அளவில் புகை மற்றும் குப்பைகள் தீப்பிடித்து எரிவதைக் காட்டுகின்றன.

ஊடக அறிக்கைகளின் படி, விமான நிலைய மீட்புக் குழுக்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்புப் படைகள் உள்ளிட்ட அவசர சேவைகள் விரைவாக செயல்பட்டு வருகின்றன. பலர் ஸ்ட்ரெச்சர்களில் ஏற்றிச் செல்லப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவசரகால குழுக்களுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ அவசர மையத்தை இயக்கியுள்ளதாகவும் ஏர் இந்தியா ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது. “இந்த நேரத்தில், நாங்கள் விவரங்களை உறுதிசெய்து வருகிறோம், மேலும் airindia.com மற்றும் எங்கள் அதிகாரப்பூர்வ X பக்கத்தில் மேலும் புதுப்பிப்புகளைப் பகிர்ந்து கொள்வோம்” என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஏர் இந்தியா தலைவர் என். சந்திரசேகரன் வெளியிட்ட அறிக்கையில், இது ஒரு துயரமான விபத்து என்று கூறியதுடன், “பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எங்கள் எண்ணங்களும் ஆழ்ந்த அனுதாபங்களும் உள்ளன” என்று ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், “அவசரகால மீட்புப் பணியாளர்கள் மற்றும் தேவைப்படுபவர்களை ஆதரிக்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்” என்றும் அவர் கூறியுள்ளார். இதற்கிடையில், இந்தியாவின் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களும் குஜராத் முதல்வருடன் பேசியதை உறுதிப்படுத்தினார், மேலும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு முழு மத்திய அரசின் ஆதரவையும் உறுதியளித்ததாகக் கூறப்படுகின்றது.

தற்பொழுது, விபத்துக்கான காரணம் விசாரணையில் உள்ளது. மற்றொரு பணிக்காக அகமதாபாத்தில் ஏற்கனவே இருந்த DGCA அதிகாரிகள் ஆரம்ப விசாரணையை வழிநடத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. விபத்து நடந்த இடத்தில் அதிகாரிகள் தேடல் மற்றும் மீட்பு முயற்சிகளைத் தொடர்வதால் மேலும் சரிபார்க்கப்பட்ட தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!