போர் எதிரொலி: ஆன்லைன் வகுப்புகள் மற்றும் தொலைதூர வேலைகளுக்கு மாறும் பஹ்ரைன்!! தேவைக்கு மட்டுமே முக்கிய சாலையை பயன்படுத்த அறிவுறுத்தல்..

சமீபத்திய ஊடக அறிக்கைகளின் படி, பிராந்திய பதட்டங்கள் அதிகரித்து வருவதால், ஜூன் 22 ஞாயிற்றுக்கிழமை முதல் பஹ்ரைன் அனைத்து பொது மற்றும் தனியார் பள்ளிகள், மழலையர் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு ஆன்லைன் கற்றலை செயல்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்க வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, பஹ்ரைனின் கல்வி அமைச்சகம் பாதுகாப்பு நடவடிக்கையாக வகுப்புகளை டிஜிட்டல் தளங்களுக்கு மாற்ற அறிவுறுத்தியுள்ளது.
மேலும், இத்தகைய மோசமான சூழலில் குடிமக்களும் குடியிருப்பாளர்களும் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், அவசரநிலைகளுக்கு மட்டும் பிரதான சாலைகளைப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளது. கூடுதலாக, 70% அரசு ஊழியர்கள் வரை இப்போது வீட்டிலிருந்து வேலை செய்வார்கள் என்று பஹ்ரைனின் சிவில் சர்வீஸ் பீரோ (CSB) தெரிவித்துள்ளது. ஆனால், அலுவலகத்தில் இருந்து வேலை செய்ய வேண்டிய குறிப்பிட்ட வேலைகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
பஹ்ரைன் ஈரானில் இருந்து கடலுக்கு அப்பால் 200 கி.மீ தொலைவில் அமைந்துள்ளதால் இந்த நடவடிக்கைகள் முன்னெச்சரிக்கையாகும். இதற்கிடையில், சவுதி அரேபியா மற்றும் குவைத் ஆகியவை ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய பின்னர், தங்கள் பிராந்தியங்களில் எந்த தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சு அளவுகளும் கண்டறியப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. சர்வதேச அணுசக்தி நிறுவனமும் கதிர்வீச்சு அதிகரிப்பு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel