அமீரக செய்திகள்

கோடையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு குறைந்த வேலை நேரங்களை அறிவித்த துபாய்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், துபாய் எமிரேட் அரசு ஊழியர்களுக்கு கோடை காலத்தில் நெகிழ்வான வேலை நேரங்களை மீண்டும் அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த முயற்சி வருகின்ற ஜூலை 1 முதல் செப்டம்பர் 12, 2025 வரை நீடிக்கும் என்று துபாய் அரசாங்க மனிதவளத் துறை (DGHR-Dubai Government Human Resources Department) ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் ஒவ்வொரு அரசு நிறுவனத்திற்கும் விருப்பமான முறையில் வேலை மாதிரியானது, ஊழியர்களை இரண்டு குழுக்களாகப் பிரிக்கிறது. அவை:

  • குழு 1: திங்கள் முதல் வியாழன் வரை 8 மணிநேரம் வேலை மற்றும் வெள்ளிக்கிழமை முழுமையாக விடுமுறை அளிக்கப்படுகிறது.
  • குழு 2: திங்கள் முதல் வியாழன் வரை 7 மணிநேரம் மற்றும் வெள்ளிக்கிழமை 4.5 மணிநேரம் வேலை செய்ய வேண்டும்.

வெப்பமான கோடை காலத்தில் ஊழியர்களின் வேலை-வாழ்க்கை சமநிலையை மேம்படுத்துவதையும் நிறுவனங்களின் உற்பத்தித்திறனைப் பராமரிப்பதையும் இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதேபோன்ற முயற்சி கடந்த ஆண்டு 21 அரசுத் துறைகளில் சோதனை செய்யப்பட்டது, இதன் விளைவாக ஊழியர் திருப்தி அதிகரித்தது மற்றும் பணியிட செயல்திறன் மேம்பட்டது என கூறப்பட்டுள்ளது. அதே போல் இந்த முயற்சியின் கீழ் 98% ஊழியர்கள் மகிழ்ச்சியாக இருந்ததாக ஒரு கணக்கெடுப்பு காட்டுகிறது.

பொதுவாக, துபாய் அரசு ஊழியர்கள் 2.5 நாள் வார இறுதியை (வெள்ளிக்கிழமை அரை நாள், சனி மற்றும் ஞாயிறு) அனுபவிப்பார்கள். இந்த அமைப்பின் மூலம், பங்கேற்கும் துறைகள் இன்னும் நீண்ட வார விடுமுறை நாட்களை அனுபவிக்கலாம்.

வெளிப்புற தொழிலாளர்களுக்கு மதிய நேர வேலை தடை

இதற்கிடையில், ஐக்கிய அரபு அமீரகம் ஜூன் 15 முதல் செப்டம்பர் 15 வரை அதன் வருடாந்திர மதிய வேலை தடையை அமல்படுத்தியுள்ளது, இது தினமும் மதியம் 12:30 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரை நேரடி சூரிய ஒளியில் வெளிப்புற வேலை செய்வதைத் தடை செய்கிறது. மனிதவளம் மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சகம் (MoHRE) இந்த விதிகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக ஏற்கனவே தளங்களை ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளது. விதியை மீறும் நிறுவனங்கள் ஒரு தொழிலாளிக்கு 5,000 திர்ஹம் வீதம், பல மீறல்களுக்கு 50,000 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படும்.

அதுமட்டுமில்லாமல், ஐக்கிய அரபு அமீரகம் இந்த கடும் வெயில் காலத்தில் தொழிலாளர்களை ஆதரிப்பதற்காக,  நாடு முழுவதும் 10,000 க்கும் மேற்பட்ட குளிரூட்டப்பட்ட ஓய்வு நிலையங்களை நிறுவியுள்ளது, குறிப்பாக கோடை காலங்களில் பணிபுரியும் டெலிவரி ஊழியர்களுக்கு பயனளிக்கும் வகையில் நிலையங்களில் பல்வேறு வசதிகள் பொருத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!