ஈத் விடுமுறையை முன்னிட்டு எமிரேட் முழுவதும் ஆய்வு பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ள துபாய் முனிசிபாலிட்டி!!

அமீரகம் முழுவதும் ஈத் அல் அதா பண்டிகைக் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், துபாய் முனிசிபாலிட்டி விடுமுறையின் போது பொது சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எமிரேட் முழுவதும் ஆய்வு பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக முனிசிபாலிட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, உணவு பாதுகாப்பு, சுற்றுச்சூழல் சுகாதாரம் மற்றும் பொது பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்குவதை மேற்பார்வையிட சுமார் 150 ஆய்வாளர்கள் மற்றும் கள கண்காணிப்பாளர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.
அமீரக அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பின் படி, இந்தாண்டு, அமீரகவாசிகள் ஜூன் 5 வியாழக்கிழமை முதல் நான்கு நாள் வார விடுமுறையை அனுபவிக்க உள்ளனர். அதற்கு முன்னதாக, சந்தைகள், இறைச்சி கடைகள், சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் ஷாப்பிங் மையங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் உணவு நிறுவனங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை ஆய்வுகளை நடத்தி வருகிறது. பண்டிகைக் காலத்தில் உணவு சேமிப்பு, தயாரிப்பு மற்றும் கடுமையான பாதுகாப்புத் தரங்களை பூர்த்தி செய்வதை உறுதி செய்வதில் இந்த சோதனைகள் கவனம் செலுத்துவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈத் விடுமுறையின் போது, அதிகரித்த கூட்டங்கள் மற்றும் செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு, முஹைஸ்னா 2 மற்றும் அல் கூஸ் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உணவகங்கள், சலூன்கள், ஷிஷா கஃபேக்கள், சினிமாக்கள், பொழுதுபோக்கு இடங்கள் மற்றும் தொழிலாளர் தங்குமிடங்களையும் ஆய்வுக் குழுக்கள் கண்காணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வாளர்கள் காற்று மற்றும் நீர் தர அமைப்புகள், கிருமி நீக்கம் நடைமுறைகள், பூச்சி கட்டுப்பாடு மற்றும் ஒட்டுமொத்த தூய்மை ஆகியவற்றைச் சரிபார்ப்பார்கள் என்பதையும் துபாய் முனிசிபாலிட்டி தெரிவித்துள்ளது. குறிப்பாக அதிக விற்பனை நடைபெறும் இந்த காலத்தில், சில்லறை விற்பனை நிலையங்களில் நுகர்வோர் பொருட்கள் பாதுகாப்பு தரங்களை பூர்த்தி செய்வதை உறுதி செய்வதற்காக அதிகாரசபை ஆய்வு செய்து வருகிறது.
கூடுதலாக, துபாயின் இறைச்சிக் கூடங்கள் உயர் பொது சுகாதாரத் தரங்களை பூர்த்தி செய்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. துபாய் முனிசிபாலிட்டி, உணவுப் பாதுகாப்பு குறித்த புகார்களுக்கு ‘துபாய் 24/7’ செயலி மூலமாகவோ அல்லது 800 900 என்ற ஹாட்லைனை அழைப்பதன் மூலமாகவோ பொதுமக்களைப் புகாரளிக்க ஊக்குவிக்கிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel