UAE: தனியார் துறை ஊழியர்களுக்கு இஸ்லாமிய புத்தாண்டிற்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அறிவிப்பு!!

இஸ்லாமிய புத்தாண்டான ஹிஜ்ரி 1447 ஆம் ஆண்டின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் உள்ள தனியார் துறை ஊழியர்கள் ஜூன் 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஊதியத்துடன் கூடிய விடுமுறையை அனுபவிக்கவுள்ளனர். ஐக்கிய அரபு அமீரக அமைச்சரவையால் வெளியிடப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ விடுமுறை பட்டியலுடன் ஒத்துப்போகும் இந்த அறிவிப்பை மனிதவளம் மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சகம் (MoHRE) உறுதிப்படுத்தியுள்ளது.
எனவே, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை வார இறுதி நாட்களில் ஒரு பகுதியாகக் கொண்ட ஊழியர்கள் மூன்று நாள் விடுமுறையை அனுபவிக்கலாம், வழக்கமான வேலை நேரம் ஜூன் 30 திங்கட்கிழமை மீண்டும் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு சமமான பொது விடுமுறையை உறுதி செய்யும் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒருங்கிணைந்த விடுமுறைக் கொள்கையின் காரணமாக, பொதுத்துறை ஊழியர்களும் அதே விடுமுறையை பெறுவார்கள். இருப்பினும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் விடுமுறை உள்ள ஊழியர்களுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிறை பார்ப்பதை அடிப்படையாகக் கொண்ட ஹிஜ்ரி புத்தாண்டு, நாட்காட்டியின் முதல் மாதமான முஹர்ரம் முதல் நாளில் தொடங்குகிறது. ஜூன் மாத தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட ஈத் அல் அதா விடுமுறைக்குப் பிறகு அமீரக குடியிருப்பாளர்களுக்கு இந்த விடுமுறை வருவது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel