UAE: விசிட் விசாவில் வேலை செய்து வெறும் கையோடு திரும்பும் வேலைதேடும் நபர்கள்.. நிபுணர்கள் எச்சரிக்கை!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை தேடுபவர்கள், வேலை கிடைத்தாலும் கூட, விசிட் விசாக்களில் இருக்கும்போது வேலையைத் தொடங்குவதைத் தவிர்க்குமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். வாய்மொழி வாக்குறுதிகள் அல்லது முறைசாரா ஆஃபர் லெட்டர்களால் தவறாக வழிநடத்தப்பட்ட தனிநபர்கள், செல்லுபடியாகும் பெர்மிட் இல்லாமல் வேலை செய்யத் தொடங்கிய பல சம்பவங்களைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சட்டவிரோதமாக பணியமர்த்தப்படுபவர்கள் இறுதியில் வேலையில்லாமல், ஊதியம் இல்லாமல், நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவதாகவும் ஆட்சேர்ப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அவர்களின் கூற்றுப்படி, விசிட் விசாவில் யாரையும் பணியமர்த்துவது அல்லது வேலை செய்ய அனுமதிப்பது நெறிமுறையற்றது மட்டுமல்ல, சட்டவிரோதமானது ஆகும். எனவே, அமீரகத்தில் உள்ள முதலாளிகள் முதலில் தொழிலாளர் ஒப்புதலைப் பெற்று செல்லுபடியாகும் பணி அனுமதிகளை (work permit) வழங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றனர்.
வேலை தேடுபவர்கள் எதிர்கொள்ளும் விளைவுகள்
அபுதாபியில் உள்ள ஒரு நிறுவனத்தால் பணியமர்த்தப்பட்ட ஒரு இந்தியரை, அவரது விசா காலாவதியாகி வருவதால், இந்தியாவுக்குத் திரும்பி, வேலைவாய்ப்பு விசா செயல்முறையைத் தொடங்க புதிய விசிட் விசாவில் மீண்டும் நாட்டிற்குள் நுழையுமாறு முதலாளி அவரைக் கூறியிருக்கிறார். அதன்படி, அந்த நபரும் பயணத்திற்காக 2,500 திர்ஹம் செலவிட்டு, மீண்டும் அமீரகத்திற்கு திரும்பி இருக்கிறார். பின்னர் 40 நாட்கள் நிறுவனத்தில் வேலை செய்த நிலையில், ஜூன் தொடக்கத்தில் செயல்முறை முடிவடையும் என்று நிறுவனம் அவருக்கு உறுதியளித்திருக்கின்றது. ஆனால் ஜூன் மாதத்தில் நிறுவனம் தனது முடிவை மாற்றிக்கொண்டதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. தற்போது, அவரது விசிட் விசாவும் காலாவதியாகிவிட்டதால், அவர் வேலை இல்லாமல் வீடு திரும்பும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
இதேபோல், 29 வயதான ஒரு நபருக்கு, ஒரு வேலை போர்டல் மூலம் ஒரு event management நிறுவனத்தில் வேலை கிடைத்து அவருக்கு ஒரு ஆஃபர் லெட்டர் வந்திருக்கின்றது. பின், விசா விண்ணப்பம் செயல்பாட்டில் இருப்பதாகக் கூறப்பட்டிருக்கின்றது. அங்கு கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் பணிபுரிந்த போது விசா பற்றி அவர் கேட்கும் ஒவ்வொரு முறையும், அது நிலுவையில் இருப்பதாக அவருக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. பின் மார்ச் மாத தொடக்கத்தில், நிறுவனம் பட்ஜெட் கட்டுப்பாடுகளை மேற்கோள் காட்டி, பணியமர்த்தல் திட்டத்தை கைவிட்டது. பின்னர் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லாமல், வாக்குறுதியளிக்கப்பட்ட சம்பளத்தில் பாதியை மட்டும் பெற்றுக் கொண்டு வெளியேறிஇருக்கிறார். அவரது விசிட் விசா காலாவதியானதால், அவரும் ஐக்கிய அரபு அமீரகத்தை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. இது போன்ற பல சம்பவங்கள் அமீரகத்தில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது.
சட்டம் என்ன சொல்கிறது?
UAE தொழிலாளர் சட்டங்களின்படி, விசிட் விசாவில் பணிபுரிவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டின் கூட்டாட்சி ஆணை சட்டங்கள் எண். 33 மற்றும் எண். 29, ஊழியர்கள் எந்த வேலையிலும் சேருவதற்கு முன்பு செல்லுபடியாகும் பணி அனுமதி மற்றும் ரெசிடென்ஸ் விசாவை வைத்திருக்க வேண்டும் என்று கட்டளையிடுகின்றன. 2024 ஆம் ஆண்டின் கூட்டாட்சி ஆணை சட்டம் எண். 9 இன் பிரிவு 60(1)(a) இன் கீழ் இந்த விதியை மீறும் முதலாளிகளுக்கு 100,000 திர்ஹம் முதல் 1 மில்லியன் திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.
நெறிமுறையற்ற பணியமர்த்தலுக்கான எச்சரிக்கை அறிகுறிகள்
வேலை தேடுபவர்கள் பின்வருவனவற்றைப் பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
- வேலை அல்லது விசாவிற்கு பணம் செலுத்துமாறு கேட்கப்படுதல்
- வேலைவாய்ப்பு விசாவைப் பெறுவதற்கு முன்பு வேலையைத் தொடங்குதல்
- எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் இல்லாமல் வாய்மொழி சலுகைகள் (verbal offers)
- வேலை விதிமுறைகளில் திடீர் மாற்றங்கள்
“நெறிமுறையான பணியமர்த்தலில் முறையான ஆஃபர் லெட்டர், சேருவதற்கு முன்பு விசா நடைமுறைகளை நிறைவு செய்தல் மற்றும் சம்பளம் மற்றும் பொறுப்புகள் குறித்த தெளிவு ஆகியவை அடங்கும்” என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
தவறான வாக்குறுதிகளால் ஏற்படும் மன உளைச்சல்
இவ்வாறு பொய்யான வேலை வாக்குறுதிகளை நம்பி, பல கனவுகளுடன் அமீரகத்திற்கு வந்து பின்னர் வேலையில்லாமல் வெறும்கையுடன் வீட்டுக்குத் திரும்புபவர்கள் மனதளவில் முற்றிலும் உடைந்து போவதாகவம், துரோகம், பாதுகாப்பின்மை மற்றும் அவர்களின் நம்பிக்கைகள் மற்றும் கனவுகள் சிதைவதால் கடுமையான மனநலப் பிரச்சினைகளைத் தூண்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுகின்றனர். எனவே, முதலாளிகள் பொறுப்புடன் செயல்பட்டு வேலை தேடுபவர்களை ஆதரிக்க வேண்டும் என்றும், நிறுவனங்கள் தெளிவான தகவல்தொடர்புகளை உறுதி செய்ய வேண்டும், தவறாக வழிநடத்தும் வாக்குறுதிகளைத் தவிர்க்க வேண்டும், மேலும் சாத்தியமான பணியமர்த்துபவர்களின் மன நலனைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
அதேசமயம், வேலை தேடுபவர்கள் வேலை வாய்ப்புகளின் சட்டபூர்வமான தன்மையை சரிபார்க்கவும், சரியான விசா இல்லாமல் வேலையைத் தொடங்குவதைத் தவிர்க்கவும், எந்தவொரு சந்தேகத்திற்கிடமான நடைமுறைகளையும் அதிகாரிகளிடம் புகாரளிக்கவும் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel