ஐக்கிய அரபு அமீரகம் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும், புத்திசாலித்தனமான, மாற்று போக்குவரத்து அமைப்புகளை உருவாக்குவதற்கும் விமான டாக்சிகள் மற்றும் மேம்பட்ட ரயில் நெட்வொர்க்குகள் முதல் தானியங்கி வாகனங்கள் வரை பல்வேறு புதிய போக்குவரத்து முயற்சிகளை முடுக்கிவிட்டிருக்கும் நிலையில், தலைநகர் அபுதாபியில் தலாபத் செயலி மூலம் செய்யப்படும் உணவு ஆர்டர்களை ட்ரோன் மூலம் டெலிவரி செய்யும் சேவை விரைவில் தொடங்கப்படவுள்ளது, இது நாட்டின் எதிர்கால, தொழில்நுட்பம் சார்ந்த இயக்கத்தை நோக்கிய பயணத்தில் ஒரு புதிய மைல்கல்லைக் குறிக்கிறது.

ஏற்கனவே, சோதனை ஓட்டம் நடந்து வருவதால், இன்னும் சில வாரங்களில் இதற்கான வாடிக்கையாளர் ஆர்டர்கள் எதிர்பார்க்கப்படுவதாக அறிக்கைகள் கூறுகின்றன. இந்த திட்டத்தை Talabat உடன் இணைந்து, அபுதாபி அரசுக்கு சொந்தமான மேம்பட்ட தொழில்நுட்ப நிறுவனமான K2 உருவாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து K2 இன் ஸ்ட்ரேட்டஜியின் துணைத் தலைவர் வலீத் அல் ப்ளூஷி அவர்கள் விவரிக்கையில், “தலாபத் செயலி மூலம், உங்கள் மளிகைப் பொருட்கள் அல்லது உணவை ஆர்டர் செய்யலாம், ட்ரோன் அதை தலாபத் சமையலறை அல்லது உணவகத்திலிருந்து எடுத்து ஒரு டிராப்-ஆஃப் நிலையத்திற்கு டெலிவரி செய்யும்” என்று தெரிவித்துள்ளார்.
யாஸ் மெரினா சர்க்யூட்டில் சோதனை
தற்போது, யாஸ் மெரினா சர்க்யூட்டில் ‘Abu Dhabi Autonomous Week’-இன் ஒரு பகுதியாக இருக்கும் DriftX நிகழ்வில் இரண்டு ட்ரோன்கள் சோதிக்கப்படுகின்றன, இது ஸ்மார்ட் மற்றும் நிலையான நகர்ப்புற இயக்கத்தை வெளிப்படுத்துகிறது.

மேலும், தலபாத் உடனான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் DriftX-ன் போது கையெழுத்திடப்படும் என்றும், செயல்பாடுகள் 45 நாட்களுக்குள் தொடங்கப்படலாம் என்றும் அல் ப்ளூஷி உறுதிப்படுத்தியுள்ளார்.
இது எப்படி வேலை செய்கிறது?
சேவை தொடங்கப்பட்டதும், வாடிக்கையாளர்கள் தலபாத் செயலி வழியாக ஆர்டர் செய்யலாம், மேலும் அபுதாபி முழுவதும் நியமிக்கப்பட்ட டிராப்-ஆஃப் நிலையங்களுக்கு ட்ரோன்கள் டெலிவரி செய்யும். ஒவ்வொரு வாடிக்கையாளரும் தங்கள் ஆர்டரைப் பாதுகாப்பாக சேகரிக்க QR குறியீடு அல்லது கடவுச்சொல்லை பயன்படுத்த வேண்டும்.

“இது பாதுகாப்பானது, மேலும் பேக்கேஜிங் உணவை சேதத்திலிருந்து பாதுகாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது,” என்று அல் ப்ளூஷி விளக்கமளித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, ட்ரோன்கள் மற்றும் பேக்கேஜிங் அமீரகத்தின் வெப்பம் மற்றும் ஈரப்பதத்தை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு ட்ரோனும் 10–20 கிலோகிராம் வரை சுமை திறன் கொண்டவை மற்றும் 5–10 கிலோமீட்டர் பறக்க முடியும் என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
மேலும், சோதனைக்குப் பிறகு வரம்பு மற்றும் திறனை அதிகரிக்க இன்னும் திட்டமிட வேண்டும் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
K2 ஏற்கனவே ‘Noon’ மூலம் தானியங்கி தரைவழி டெலிவரிகளை சோதனை செய்துள்ளது, இது KEZAD மற்றும் அல் ரஹா கடற்கரைக்கு இடையில் பொருட்களை கொண்டு செல்கிறது. தலாபத் கூட்டாண்மை K2 இன் முதல் வான்வழி டெலிவரி திட்டத்தை குறிக்கிறது.
DriftX இல் சோதனை செய்த பிறகு, நிறுவனம் அபுதாபி மொபிலிட்டி மற்றும் பொது சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (GCAA) உடன் இணைந்து ஒப்புதல்கள் மற்றும் விதிமுறைகளுக்காக செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்கால டெலிவரி சேவை
ட்ரோன் டெலிவரி விரைவில் நகர வாழ்க்கையின் ஒரு சாதாரண பகுதியாக மாறும் என்றும், “வான்வழி, நிலம் அல்லது கடல் வழியாக தானியங்கி வாகனம் என்பது எதிர்காலமாக இருக்கும். ரோபாட்டிக்ஸ் எல்லா இடங்களிலும் நடக்கும், எல்லோரும் அதற்குப் பழகிவிடுவார்கள்” என்றும் அல் ப்ளூஷி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தானியங்கு உணவு விநியோக ரோபோக்களை வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel