துபாய் ஏர்போர்ட்ஸ் வேகமான, மென்மையான பயண அனுபவத்தை வழங்குவதற்கான பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வரும் நிலையில் அதில் ஒன்றாக ஹேண்ட் லக்கேஜ் மட்டுமே எடுத்துச் செல்லும் பயணிகளுக்கான செக்-இன் முறையை நீக்குவது குறித்த முயற்சிகள் மேற்கொள்ளப்படவிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனை அதன் தலைமை நிர்வாக அதிகாரி பால் கிரிஃபித்ஸ் அறிவித்துள்ளார்.
கிரிஃபித்ஸ் துபாய் ஏர்போர்ட்டில் வரவிருக்கும் மாற்றங்கள் குறித்துப் பேசுகையில், நேரம் என்பது பயணிகளுக்கு மிகவும் மதிப்புமிக்க சொத்து என்றும், விமான நிலையங்கள் பயணிகளை செக்-இன் பகுதிகளில் வரிசையில் நிற்க கட்டாயப்படுத்துவதை நிறுத்த வேண்டும், பைகளை பேக்கேஜ் அமைப்பில் வைப்பதற்கு முன்பு லேபிள்களை ஒட்டுவது, இமிக்ரேஷன் கவுண்டர்களில் காத்திருப்பது போன்றவற்றை நிறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
“தொழில்நுட்பம் பயணத்தை எளிதாக்கும் ஒரு அற்புதமான யுகத்தில் நாம் வாழ்கிறோம். எங்கள் நோக்கம் செயல்முறைகளை அகற்றுவதே ஆகும். அதில் வரிசைகள் இல்லை, முற்றிலும் தடையற்ற அனுபவத்தை பெறலாம்” என்று கிரிஃபித்ஸ் வலியுறுத்தியுள்ளார்.
துபாய் ஏர்போர்ட்ஸ் ஏற்கனவே முக அங்கீகார கேமராக்கள் மூலம் பாரம்பரிய இமிக்ரேஷன் செயல்முறையை நீக்கிவிட்டன என்பதை எடுத்துரைத்த கிரிஃபித்ஸ், அடுத்த கட்டமாக, பாதுகாப்பு நிறுவனங்களுடன் இணைந்து, சோதனை பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதாகவும், பயணிகள் தங்கள் பொருட்களைத் திறக்கவோ அல்லது தனிப்பட்ட பொருட்களை அகற்றவோ தேவையில்லாமல், விரைவான செயல்முறையாக மாற்றவிருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதனிடையே, ஹேண்ட் லக்கேஜ் மட்டுமே எடுத்துச் செல்லும் பயணிகளுக்கான செக்-இன்-ஐ முற்றிலுமாக நீக்கும் திட்டங்களை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். அத்தகைய பயணிகள் செக்-இன் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதுபோன்று செயல்முறைகளை ஒழுங்குபடுத்துவதன் மூலம், துபாய் விமான நிலையங்கள் பல முக்கிய நன்மைகளை அடையும் என்றும் கிரிஃபித்ஸ் கூறியுள்ளார். அவை
- பயணிகளின் நேரத்தை மதிப்பது
- விமான நிலையம் வழியாக இயக்கத்தை துரிதப்படுத்துதல்
- புதிய கட்டிடங்களைக் கட்டாமல் திறனை நான்கு மடங்காக உயர்த்துதல்
DXB இரண்டு ஆண்டுகளுக்குள் 100 மில்லியன் பயணிகளை தாண்டி, 2031 ஆம் ஆண்டில் 114 மில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார். மேலும், 2032 ஆம் ஆண்டில் துபாய் சர்வதேச விமான நிலையத்தை (DXB) அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்திற்கு மாற்றுவது குறித்தும் கிரிஃபித்ஸ் விவாதித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய விமான நிலையமாக மாறவுள்ள அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் 2032 ஆம் ஆண்டில் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்போது, அது ஆரம்பத்தில் 150 மில்லியன் பயணிகளை கையாளும் என்றும், பின்னர் 2057 வாக்கில், திறன் 260 மில்லியன் பயணிகளை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel