அமீரகக் குடியிருப்பாளர்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக ஆவலுடன் தயாராகி வரும் நிலையில், அபுதாபியில் உள்ள அதிகாரிகள் புத்தாண்டு தினத்திற்கான போக்குவரத்து மேலாண்மைத் திட்டங்களின் ஒரு பகுதியாக, கனரக வாகனங்கள் மற்றும் தொழிலாளர் பேருந்துகளுக்கு தற்காலிகப் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளனர்.
இந்தக் கட்டுப்பாடுகள் டிசம்பர் 31, 2025, புதன்கிழமை மதியம் 12 மணி முதல் ஜனவரி 1, 2026, வியாழக்கிழமை காலை 6 மணி வரை நடைமுறையில் இருக்கும் என்றும், மேலும் இது அபுதாபி ஐலேண்ட் முழுவதும் பொருந்தும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, இந்தக் காலகட்டத்தில், சரக்கு லாரிகள், கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் தொழிலாளர் போக்குவரத்துப் பேருந்துகள் தீவின் முக்கியப் போக்குவரத்து மண்டலங்களுக்குள் நுழையவோ அல்லது பயணிக்கவோ அனுமதிக்கப்படாது.
கூடுதலாக, இதே காலகட்டத்தில் அபுதாபி–அல் அய்ன் சாலையில் (E22) தொழிலாளர் பேருந்துகளின் இயக்கத்திற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அல் அய்ன் சாலைக் கட்டுப்பாடுகள்
அதிகாரிகள் அல் அய்னில் உள்ள ஹஸ்ஸா பின் சுல்தான் ஸ்ட்ரீட்டிலும் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளனர். இந்தச் சாலை டிசம்பர் 31, 2025, மதியம் 12 மணி முதல் ஜனவரி 1, 2026, அதிகாலை 1 மணி வரை சில குறிப்பிட்ட வாகனங்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பொதுவாக முக்கிய பொது நிகழ்வுகளின் போது நெரிசலைக் குறைக்கவும் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும் இதுபோன்ற நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
ஆகவே, வாகன ஓட்டிகள் மற்றும் வணிகப் போக்குவரத்து நிறுவனங்கள் தங்கள் பயணங்களைத் திட்டமிட்டுக்கொள்ளவும், தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்கு வெளியே மாற்று வழிகளைப் பயன்படுத்தவும், தாமதங்களையும் அபராதங்களையும் தவிர்க்க போக்குவரத்து அதிகாரிகளால் வழங்கப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அபுதாபி முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள்
2026 புத்தாண்டை வரவேற்க அபுதாபி ஒரு விரிவான கொண்டாட்டங்கள் மற்றும் பொதுப் பாதுகாப்பு நடவடிக்கைத் திட்டங்களைத் தயாரித்து வருகிறது. அமீரகம் முழுவதும் பல அதிகாரப்பூர்வ நிகழ்வுகளும் திட்டமிடப்பட்டுள்ளன.
இதன் முக்கிய அம்சங்களில் ஒன்று அல் வத்பாவில் உள்ள ஷேக் சையத் ஃபெஸ்டிவல் ஆகும். அங்கு அமீரக பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் வகையிலும் புத்தாண்டின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையிலும், ஒருங்கிணைக்கப்பட்ட ட்ரோன் அணிவகுப்புகள் மற்றும் வானவேடிக்கைகளுடன் கூடிய ஒரு நீண்ட வானவேடிக்கைக் காட்சிக்குத் திட்டமிட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பொது விடுமுறை அறிவிப்பு
ஐக்கிய அரபு அமீரகத்தின் மத்திய அரசு ஜனவரி 1, 2026, வியாழக்கிழமையை பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. கூடுதலாக, அரசு ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை தொலைதூரப் பணி நாளாக அனுசரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல தனியார் துறை ஊழியர்களும் இந்த தொடர் விடுமுறை மற்றும் வார இறுதி ஏற்பாடுகளால் பயனடைவார்கள்.
2026 ஆம் ஆண்டின் தொடக்கம் சீராகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதை உறுதிசெய்ய, பொதுமக்கள் பொறுப்புடன் கொண்டாடுமாறும், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்குமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel