புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக புர்ஜ் கலிஃபாவிற்குச் செல்கிறீர்களா? டிசம்பர் 31 அன்று கூட்டத்தையும் போக்குவரத்தையும் நிர்வகிக்க, துபாய் அதிகாரிகள் விரிவான சாலை மூடல்கள், மெட்ரோ மாற்றங்கள் மற்றும் வாகன நிறுத்துமிட ஏற்பாடுகளை அறிவித்துள்ளனர்.
புத்தாண்டை வரவேற்க ஆயிரக்கணக்கானோர் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் அமலுக்கு வரவிருக்கிறது. எனவே, இடையூறுகளைத் தவிர்க்க, குடியிருப்பாளர்களும் பார்வையாளர்களும் திட்டமிட்டு, தங்கள் இலக்குகளை முன்கூட்டியே அடையுமாறு சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) வலியுறுத்தியுள்ளது.
மாலை 4 மணி முதல் சாலை மூடல்கள்
சாலை மூடல்களின் முதல் கட்டம் மாலை 4 மணிக்குத் தொடங்கும். கொண்டாட்டப் பகுதியிலிருந்து போக்குவரத்தை எளிதாக்கும் வகையில், டவுன்டவுன் துபாயைச் சுற்றியுள்ள முக்கிய சாலைகள் படிப்படியாக மூடப்படும். இதில் பின்வருவன அடங்கும்:
- அல் அசாயல் ஸ்ட்ரீட்
- ஷேக் முகமது பின் ரஷீத் பவுல்வர்டு
- புர்ஜ் கலிஃபா ஸ்ட்ரீட்
- லோயர் ஃபைனான்சியல் சென்டர் ஸ்ட்ரீட்
- அல் முஸ்தக்பல் ஸ்ட்ரீட் (ஃபைனான்சியல் சென்டர் இண்டர்செக்ஷன் மற்றும் கமர்ஷியல் சென்டர் ஸ்ட்ரீட்டுக்கு இடையில்)
இரவில் கூடுதல் சாலை மூடல்கள்
மாலை நேரம் செல்லச் செல்ல, கூடுதல் சாலைகள் மூடப்படும்:
- இரவு 8 மணி: அல் சுகூக் ஸ்ட்ரீட்
- இரவு 9 மணி: அப்பர் ஃபைனான்சியல் சென்டர் ஸ்ட்ரீட்
- இரவு 11 மணி: அல் மேதான் இண்டர்செக்ஷன் மற்றும் கமர்ஷியல் சென்டர் ரவுண்டானாவுக்கு இடையில் ஷேக் சையத் சாலை படிப்படியாக மூடப்படும்.
மெட்ரோ மற்றும் டிராம் சேவைகள்
புர்ஜ் கலிஃபா/துபாய் மால் மெட்ரோ நிலையத்திற்கான நுழைவு மாலை 5 மணி முதல் மூடப்படும், அல்லது முழு கொள்ளளவை எட்டினால் அதற்கு முன்னதாகவே மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் அருகிலுள்ள நிலையங்களைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
புத்தாண்டை முன்னிட்டு பொதுப் போக்குவரத்துக்கான தேவையில் எதிர்பார்க்கப்படும் அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, ரெட் மற்றும் க்ரீன் மெட்ரோ வழித்தடங்கள் டிசம்பர் 31 அன்று காலை 5 மணி முதல் ஜனவரி 2, 2026 அன்று நள்ளிரவு வரை 43 மணி நேரம் தொடர்ச்சியாக இயங்கும் என்று RTA அறிவித்துள்ளது. அதேபோல், துபாய் டிராம் சேவைகளும் டிசம்பர் 31 அன்று காலை 6 மணி முதல் ஜனவரி 2 அன்று அதிகாலை 1 மணி வரை இடைவிடாமல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்க்கிங் வசதியுள்ள மெட்ரோ நிலையங்கள்
பயணிகள் பின்வரும் நிலையங்களில் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு, மெட்ரோ மூலம் தங்கள் பயணத்தைத் தொடரலாம்:
- சென்டர்பாயிண்ட் நிலையம்
- e& நிலையம்
- நேஷனல் பெயிண்ட்ஸ் நிலையம் (ஜெபல் அலி)
- ஜுமைரா கோல்ஃப் எஸ்டேட்ஸ் நிலையம்
பயணம் செய்வதற்கு முன் தங்கள் நோல் அட்டைகளில் போதுமான இருப்பு உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு பயணிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பாதசாரிகள் அணுகல் கட்டுப்பாடுகள்
பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், துபாய் க்ரீக் முழுவதும் உள்ள அனைத்து பாதசாரி பாலங்கள் மற்றும் லிஃப்ட்கள் மாலை 4 மணி முதல் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாற்று வாகன நிறுத்தம் மற்றும் ஷட்டில் பேருந்துகள்
வாகன ஓட்டிகள் கொண்டாட்டப் பகுதிக்குச் செல்ல இலவச ஷட்டில் பேருந்து சேவைகளுடன் கூடிய பிரத்யேக பார்க்கிங் இடங்களைப் பயன்படுத்தலாம்:
- அல் வாசல் கிளப் பார்க்கிங்
- அல் கிஃபாஃப் பார்க்கிங்
நிகழ்வு முழுவதும் ஷட்டில் பேருந்துகள் தொடர்ச்சியாக இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
Emaar பகுதி (Emaar Zones) பார்க்கிங்
முன்கூட்டியே வரும் பார்வையாளர்கள் Emaar பகுதியில் தங்கள் வாகனங்களை நிறுத்தலாம். இது துபாய் மால், ஜபீல் துபாய் மால், பாயிண்ட்வியூ பார்க்கிங் மற்றும் பவுல்வர்டு-நிலை பார்க்கிங் ஆகிய இடங்களில் 20,000-க்கும் மேற்பட்ட பார்க்கிங் இடங்களை வழங்குகிறது.
அதேசமயம், அல் கைல் ஸ்ட்ரீட், ஷேக் சையத் சாலை, துபாய் ஐ ஸ்ட்ரீட் மற்றும் ஓத் மேத்தா ஸ்ட்ரீட் உட்பட சுற்றியுள்ள முக்கிய சாலைகளிலும், நிகழ்விடம் அருகே உள்ள மற்ற முக்கிய சாலைகளிலும் வாகனங்களை நிறுத்துவதற்கும் நிறுத்தி வைப்பதற்கும் தடை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வானவேடிக்கை நிகழ்ச்சிக்குப் பிறகு, இலவச ஷட்டில் பேருந்துகள் பார்வையாளர்களை மெட்ரோ நிலையங்கள், டாக்ஸி நிறுத்தங்கள் மற்றும் வாகன நிறுத்துமிடங்களுக்கு அழைத்துச் செல்லும் என்று RTA தெரிவித்துள்ளது. அல் வாஸ்ல் கிளப் பார்க்கிங் மற்றும் அல் கிஃபாஃப் பார்க்கிங் ஆகிய இடங்களில் டாக்ஸி ஏறும் இடங்கள் கிடைக்கும்.
முன்கூட்டியே வெளியேறும் வசதி
அதுமட்டுமல்லாமல், அதிக நெரிசல் ஏற்படுவதற்கு முன்பு வெளியேற விரும்புபவர்களுக்காக, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை ஸ்விஸ்ஹோட்டல் அல் முரூஜ் துபாயிலிருந்து அல் வாஸ்ல் கிளப் பார்க்கிங் மற்றும் அல் கிஃபாஃப் பார்க்கிங் ஆகிய இடங்களுக்கு இலவச ஷட்டில் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel