மில்லியன் கணக்கான மக்கள் வசிக்கும் துபாய் நகரில், நோல் கார்டு (nol card) என்பது ஒரு அன்றாட அத்தியாவசியப் பொருளாகிவிட்டது. இந்த ஒற்றை அட்டை மெட்ரோ, பேருந்துகள், டிராம்கள் மற்றும் டாக்சிகள் உட்பட பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கும், அத்துடன் பார்க்கிங் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை வணிகக் கொள்முதல்கள் என நகரம் முழுவதும் பல சேவைகளை அணுக உதவுகிறது. எனவே, ஒரு சிறிய மறதி கூட உங்கள் பயணத் திட்டங்களை சீர்குலைத்துவிடும்.
இதற்கு தீர்வளிக்கும் வகையில், துபாய் மிகவும் வசதியான மற்றும் டிஜிட்டல் விருப்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆம், துபாய் பயணிகள் இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களில் டிஜிட்டல் பதிப்பைப் பயன்படுத்தி பயணிக்கலாம். சாம்சங் மற்றும் ஹூவாய் பயனர்களுக்கு கிடைக்கும், டிஜிட்டல் நோல் கார்டு பொது போக்குவரத்து மற்றும் நகரத்தில் உள்ள பிற சேவைகளில் தடையற்ற, தொடர்பு இல்லாத கட்டணங்களை அனுமதிக்கிறது. இது குடியிருப்பாளர்கள் ஒரு அசல் நோல் கார்டை மட்டுமே நம்பியிருக்காமல் நோல் சேவைகளைப் பயன்படுத்துவதை எளிதாக்குகிறது.
RTAவின் அதிகாரப்பூர்வ நோல் பே (nol pay) செயலி மூலம், பயனர்கள் மெட்ரோ, பேருந்துகள், டிராம்கள், டாக்சிகள், பார்க்கிங் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை கொள்முதல்களுக்கு கூட பணம் செலுத்தலாம். மேலும், தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான அனுபவத்திற்காக டிஜிட்டல் கார்டை எமிரேட்ஸ் ஐடி உடன் இணைக்கலாம்.
சாம்சங் பயனர்களுக்கு இது எவ்வாறு செயல்படுகிறது?
சாம்சங் சாதனங்கள் 2023 முதல் டிஜிட்டல் நோல் கார்டுகளை ஆதரிக்கின்றன. ஆனால், சில்வர் மற்றும் கோல்ட் நோல் கார்டுகள் மட்டுமே தகுதியுடையவை ஆகும். அதே நேரத்தில் அட்டை டிஜிட்டல் மயமாக்கப்பட்டதும், அசல் அட்டை தானாகவே செயலிழக்கப்படும்.
இதற்கான டிஜிட்டல் நோல் கார்டை செயல்படுத்த பின்வரும் படிகளைப் பின்பற்றவும்:
- உங்கள் மொபைலில் ‘Samsung Wallet’ செயலியைத் திறக்கவும்
- அதில் ‘Transport Card’ என்பதைக் கிளிக் செய்யவும்.
- அதன் பிறகு, ‘Add Nol Card’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
- பின்னர், திரையில் உள்ள படிகளைப் பின்பற்றவும், இது செயல்முறையை முடிக்க உங்களை nol Pay அப்ளிகேஷனிற்கு திருப்பிவிடும்
Huawei பயனர்களுக்கு இது எவ்வாறு செயல்படுகிறது?
Huawei சாதனங்கள் 2020 இல் ‘Huawei Wallet’ அப்ளிகேஷன் மற்றும் ‘Huawei Watch 3’ மாடல்கள் மூலம் டிஜிட்டல் நோல் அட்டைகளை அறிமுகப்படுத்தியது. பயனர்கள் சில்வர் மற்றும் கோல்டு கார்டுகளை டிஜிட்டல் மயமாக்கலாம்.
செயல்படுத்துவதற்கான படிகள்:
- உங்கள் மொபைலில் ‘Huawei Wallet’ அப்ளிகேஷனை திறந்து போக்குவரத்து அட்டைகளுக்கு அருகிலுள்ள “+” ஐகானைத் தட்டவும்
- பின்னர், ‘“Digitise an existing physical card” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
- அடுத்தபடியாக, அறிவுறுத்தல்களைப் பின்பற்றி செயல்படுத்த சில நிமிடங்கள் காத்திருக்கவும்
- இறுதியில் உங்கள் அசல் நோல் அட்டை செயலிழக்கும்
ஐஃபோன் பயனர்களுக்கு கிடைக்குமா?
தற்போது, ஆப்பிள் வாலட் டிஜிட்டல் நோல் கார்டுகளை ஆதரிக்காது. இருப்பினும், துபாயில் உள்ள ஐஃபோன் பயனர்கள் டிஜிட்டல் ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் வாகனப் பதிவு அட்டைகளை தங்கள் சாதனங்களில் சேமிக்கலாம்.
டிஜிட்டல் நோல் கார்டு மூலம், பயணிகள் தங்கள் கார்டை எடுத்துச் செல்வது அல்லது தொலைப்பது பற்றி கவலைப்படாமல் விரைவான, தொந்தரவு இல்லாத பயணத்தை அனுபவிக்க முடியும். இந்த நடவடிக்கை துபாயின் முழுமையான டிஜிட்டல் பொது சேவைகள் மற்றும் மென்மையான தினசரி பயணத்தை நோக்கிய முன்னேற்றத்தை ஆதரிக்கிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel