ADVERTISEMENT

துபாயில் அதிகரித்து வரும் போலி டிக்கெட் மோசடிகள்.. எச்சரிக்கை விடுத்த காவல்துறை..!!

Published: 25 Dec 2025, 9:57 AM |
Updated: 25 Dec 2025, 9:58 AM |
Posted By: Menaka

துபாயில் ஒரு பிரபலமான இசை நிகழ்ச்சி, நேரலை நிகழ்ச்சி அல்லது விளையாட்டு நிகழ்விற்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் வாங்கத் திட்டமிடுகிறீர்களா? நீங்கள் “pay” என்பதைக் கிளிக் செய்வதற்கு முன் நன்றாக சிந்தித்து செயல்பட வேண்டியது கட்டாயமாகும். ஏனெனில் சமீப நாட்களில், அதிக தேவை உள்ள டிக்கெட்டுகளைத் தேடும் குடியிருப்பாளர்களை மோசடியாளர்கள் தீவிரமாக குறிவைத்து வருகின்றனர்.

ADVERTISEMENT

போலியான இணையதளங்கள், சமூக ஊடக விளம்பரங்கள் மற்றும் நம்ப முடியாத தள்ளுபடிகளைப் பயன்படுத்தி, ஆர்வமுள்ளவர்களை மோசடிக்காரர்கள் ஏமாற்றி வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முக்கிய நிகழ்வுகளைச் சுற்றி உற்சாகம் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், இணையதளங்களை சரிபார்க்குமாறும், ஆன்லைன் டிக்கெட் மோசடிகளுக்கு பலியாகாமல் இருக்குமாறும் துபாய் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

தற்போதைய துபாய் காவல்துறையின் மோசடி குறித்து பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, குற்றப் புலனாய்வுத் துறையின் மோசடி எதிர்ப்பு மையத்தால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மோசடி செய்பவர்கள் போலி வலைத்தளங்கள் மற்றும் சரிபார்க்கப்படாத சமூக ஊடகப் பக்கங்களைப் பயன்படுத்தி இல்லாத டிக்கெட்டுகளை விற்பனை செய்வதை அதிகளவில் மேற்கொள்வதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த தளங்கள் பெரும்பாலும் நன்கு அறியப்பட்ட ஏற்பாட்டாளர்கள் அல்லது டிக்கெட் வழங்கும் நிறுவனங்களின் பெயர்கள், லோகோக்கள் மற்றும் பிராண்டிங்கைப் போன்ற போலியானவற்றைக் கொண்டிருக்கும் என்பதால் பார்ப்பதற்கு உண்மையானதாகத் தோன்றும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

ADVERTISEMENT

பல சந்தர்ப்பங்களில், பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை மாற்றவோ அல்லது அவர்களின் வங்கி அட்டை விவரங்களை உள்ளிடவோ கேட்கப்படுகிறார்கள். பின்னர் டிக்கெட் வழங்கப்படவில்லை அல்லது அங்கீகரிக்கப்படாத தொகைகள் அவர்களின் கணக்குகளில் இருந்து கழிக்கப்பட்டதை அறிந்த பின்னரே ஏமாற்றப்பட்டதை உணர்கின்றனர்.

ஆகையால், துபாய் காவல்துறை பொதுமக்களுக்கு எப்போதும் அதிகாரப்பூர்வ ஏற்பாட்டாளர் வலைத்தளங்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட டிக்கெட் தளங்கள் மூலம் டிக்கெட்டுகளை வாங்கவும், வலைத்தள இணைப்புகளை கவனமாக சரிபார்க்கவும், சாதாரண விலைகளை விட மிகவும் மலிவானதாகத் தோன்றும் புரோமோஷன்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்தியுள்ளது. மேலும், சந்தேகத்திற்கிடமான எந்தவொரு செயலையும் துபாய் காவல்துறையின் ஸ்மார்ட் செயலி வழியாகவோ, அவசரமற்ற காரணங்களுக்காக 901 என்ற எண்ணை அழைப்பதன் மூலமாகவோ அல்லது ‘eCrime’ தளம் மூலமாகவோ தெரிவிக்குமாறு வலியுறுத்தப்படுகிறார்கள்.

ADVERTISEMENT

மத்திய கிழக்கை தளமாகக் கொண்ட டிக்கெட் தளமான பிளாட்டினம்லிஸ்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரி காஸ்மின் இவான், மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் டிக்கெட் முன் விற்பனை அல்லது பெரிய அறிவிப்புகளுக்கு சற்று முன்பு ஒரே மாதிரியான வலைத்தள டொமைன்களைப் பதிவு செய்கிறார்கள் என்றும், இன்னும் விற்பனைக்கு வராத அல்லது ஏற்கனவே விற்றுத் தீர்ந்த நிகழ்வுகளுக்கு 50 முதல் 70 சதவீதம் வரை நம்பத்தகாத தள்ளுபடிகளை வழங்குகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற பல மோசடிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வெளியில் இருந்து நடத்தப்படுகின்றன என்றும் குறுகிய காலத்திற்கு மட்டுமே செயல்படுகின்றன என்றும், போலி வலைத்தளங்கள் விரைவாக மூடப்பட்டு மாற்றப்படுகின்றன என்றும் சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் முன்னதாக கூறியுள்ளனர். மேலும், விரைவான நடவடிக்கை மற்றும் முன்கூட்டியே புகாரளிப்பது மிக முக்கியமானது என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். எனவே பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel