வெளிநாடுகளில் இருந்து தனிப்பட்ட தங்க நகைகளுடன் இந்தியாவுக்குச் செல்லும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் சமீப காலமாக இந்திய விமான நிலையங்களில் சுங்க அதிகாரிகளால் கடுமையான கெடுபிடிக்கு ஆளாகி வரும் நிலையில் அவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் விதமாக விரைவில் நல்ல செய்தி வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்திய அரசாங்கம் சுங்க விதிகளில் பெரிய மறுசீரமைப்பை கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளார். இது பயணிகளுக்கு சுங்க விதிகள் தொடர்பான செயல்முறையை எளிதாகவும், வேகமாகவும் மாற்றுவதுடன் மன அழுத்தத்தைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என கூறப்படுகின்றது.
சமீபத்திய தலைமைத்துவ உச்சி மாநாட்டில் பேசிய அவர், விதிகளால் மக்கள் சுமையாகவோ அல்லது குழப்பமாகவோ உணராமல் இருக்க சுங்க நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
குறிப்பாக, இந்தியாவின் தற்போதைய வரி இல்லாத தங்க வரம்புகள் 2016 இல் நிர்ணயிக்கப்பட்டதாகவும், இன்றைய தங்க விலைகளுடன் இது பொருந்தவில்லை என்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் கூறுகிறார்கள். தங்கம் இந்தியாவில் ஒரு கிராமுக்கு ரூ.13,000 மற்றும் குறிப்பாக அமீரகத்தில் ஒரு கிராமுக்கு 500 திர்ஹம்சுக்கும் மேல் வரை தொட்டதால், 2016 இல் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகள் இப்போது பொருந்தாது என்று வெளிநாட்டினர் வாதிடுகின்றனர்.
தற்போதைய விதிகளின் படி அனுமதிக்கும் வரம்பு:
- ஆண்கள்: ரூ.50,000 மதிப்புள்ள 20 கிராம் நகைகள்
- பெண்கள்: ரூ.1 லட்சம் மதிப்புள்ள 40 கிராம் நகை
ஆனால் தங்கத்தின் விலை இப்போது மிக அதிகமாக இருப்பதால், இந்த வரம்புகள் மக்கள் சிறிய, அடிப்படை நகைகளைக் கூட எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகின்றது. குறிப்பாக, அமீரகத்தைத் தளமாகக் கொண்ட இந்தியர்கள், மன அழுத்தம் மற்றும் தேவையற்ற விமான நிலைய சோதனைகள் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டி, தெளிவான, புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை முறையாக கடைபிடிக்க இந்திய அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
அடிக்கடி சோதனை செய்வதால் மன அழுத்தத்திற்கு ஆளாகும் பயணிகள்
இந்தியாவிற்கு பயணிக்கும் பல ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்கள், அடிக்கடி மற்றும் சில நேரங்களில் எதிர்பாராத சுங்க சோதனைகள் காரணமாக, தனிப்பட்ட நகைகளை எடுத்துச் செல்வதில் இப்போது பதட்டமாக இருப்பதாகக் கூறுகிறார்கள். அதிகாரிகள் சில நேரங்களில் அவர்கள் அணிந்திருக்கும் அல்லது எடுத்துச் செல்லும் நகைகள் தங்களுடையவை என்பதை நிரூபிக்கச் சொல்வதாகவும், பழைய புகைப்படங்கள் அல்லது ரசீதுகளைக் கூட கேட்பதாகவும் பல பயணிகள் கூறுகிறார்கள்.
சில சந்தர்ப்பங்களில், பைகள் விரிவான சோதனைக்காக எடுத்துச் செல்லப்படுவதுடன், பயணிகள் ஒவ்வொரு நகையையும் எடைபோட்டு சரிபார்க்க தனி அறைகளில் தங்கள் நகைகளைத் திறந்து காண்பிக்கச் சொல்வதாகவும் குறிப்பிடுகின்றனர். அதுமட்டுமின்றி, தங்கம் போல் காணப்படும் அலங்கார நகைகள் கூட நீண்ட கேள்விகளுக்கு வழிவகுத்ததாக சில பயணிகள் தெரிவித்தனர்.
மேலும், சிறிய விமான நிலையங்களில் இது போன்ற ஆய்வுகள் இன்னும் கடுமையாக இருக்கும் எனவும், ரசீது இல்லாமல் பழைய தங்கச் சங்கிலியை அணிந்ததற்காக ஒரு பயணி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டதாகவும் இந்திய வெளிநாட்டவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், இந்தியாவில் திருமணத்திற்காக, பல அமீரக NRIகள் குடும்ப கொண்டாட்டங்களுக்கு பயணிக்கத் தயாராகி வருகின்றனர். இருப்பினும், சுங்கச்சாவடிகளில் நிறுத்தப்படுவது அல்லது விசாரிக்கப்படுவது என்ற பதட்டம், அவர்களின் தினசரி அணியும் நகைகளை எடுத்துச் செல்வதற்கு கூட இருமுறை யோசிக்க வைப்பதாக தெரிவிக்கின்றனர்.
இந்தியர்கள் பலருக்கு, நகைகள் பாரம்பரியம் மற்றும் சிறப்பு நிகழ்வுகளின் ஒரு முக்கிய பகுதியாகும். ஆனால், திருமணங்களில் கலந்துகொள்வதில் உள்ள உற்சாகத்தை விட, விசாரணையினால் ஏற்படும் மன அழுத்தம் அதிகமாக இருப்பதாக பயணிகள் கூறுகின்றனர். விமான நிலையத்தில் தாமதமாகிவிடுமோ என்ற கவலையால், குறிப்பாக குழந்தைகளுடன் தனியாக பயணம் செய்யும் போது, தனது தங்கப் நகைகளை ஒரு குடும்பத் திருமணத்திற்கு எடுத்துச் செல்லக்கூட தயங்குவதாக அமீரகத்தைச் சேர்ந்த பயணிகள் கூறுகின்றனர்.
இவ்வாறு பெரும்பாலான வெளிநாடு வாழ் இந்தியர்கள் சொந்த நாட்டிற்கு செல்லும் போது விமான நிலையங்களில் தொடர் சிரமத்திற்கு ஆளாகி வருவதால், இந்திய அரசால் கொண்டுவரப்படவுள்ள புதிய தளர்த்தப்பட்ட சுங்க விதிகள் அனைவருக்கும் சிறிது நிவாரணம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link:Khaleej Tamil Whatsapp Channel