அபுதாபியில் சிட்டி பகுதியை தவிர்த்து அதிகளவு குடும்பங்கள் தங்கியிருக்கும் பகுதியான முகமது பின் சையத் சிட்டியின் கமர்ஷியல் பகுதிகளில் வருகின்ற திங்கட்கிழமை, டிசம்பர் 15, 2025 முதல் ஒழுங்கமைக்கப்பட்ட பார்க்கிங் விதிமுறைகள் அமலுக்கு வரும் என்று பார்க்கிங்கை நிர்வகிக்கும் Q மொபிலிட்டி (Q Mobility) நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த முயற்சி, எமிரேட்டின் நகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத் துறையின் ஒரு பகுதியான ஒருங்கிணைந்த போக்குவரத்து மையத்தின் (ITC) மேற்பார்வையின் கீழ் செயல்படுத்தப்படுகிறது எனவும் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியான அறிக்கைகளின் படி, இந்த நடவடிக்கை, சட்டவிரோத மற்றும் ஒழுங்கற்ற வாகன நிறுத்தங்களைக் குறைத்தல், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துதல் மற்றும் பரபரப்பான வர்த்தகப் பகுதிகள் முழுவதும் உள்ள வாகன நிறுத்துமிடங்களைச் சிறப்பாகப் பயன்படுத்துவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
முதல் கட்டத்தில், முஸாஃபா ஷாபியா பகுதிகளான ME9, ME10, ME11 மற்றும் ME12 ஆகிய பகுதிகளில் பார்க்கிங் விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆரம்பக் கட்டத்தில் வாகன நிறுத்தம் இலவசமாகவே இருக்கும் என்றும், இது குடியிருப்பாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் புதிய அமைப்புக்கு ஏற்ப தங்களைத் தயார்படுத்திக்கொள்ள அவகாசம் அளிக்கும் என்றும் Q மொபிலிட்டி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த முயற்சி, முகமது பின் சையத் சிட்டியின் கமர்ஷியல் மாவட்டங்களில் மிகவும் கட்டமைக்கப்பட்ட மற்றும் எளிதில் அணுகக்கூடிய பார்க்கிங் வசதிகள் மூலம், சமூகத்தின் வசதி, பாதுகாப்பு மற்றும் ஒழுங்கமைப்பை மேம்படுத்துவதோடு, ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel