ADVERTISEMENT

வளர்ச்சி பாதையில் UAE மற்றும் சவுதி அரேபியா.!! 50% நிறுவனங்கள் அதிக ஊழியர்களை பணியமர்த்த திட்டம்..!!

Published: 5 Dec 2025, 9:07 AM |
Updated: 5 Dec 2025, 9:35 AM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள கிட்டத்தட்ட பாதி நிறுவனங்கள் 2026 ஆம் ஆண்டில் அதிக ஊழியர்களை நியமிக்க எதிர்பார்க்கின்றன என சமீபத்திய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மூன்றில் ஒரு நிறுவனம் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க திட்டமிட்டுள்ளதாக ஆட்சேர்ப்பு நிறுவனமான கூப்பர் ஃபிட்ச் (Cooper Fitch) நடத்திய புதிய கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இரு நாடுகளிலும் நடந்து வரும் பொருளாதார வளர்ச்சியால் உந்தப்படும் நேர்மறையான பணியமர்த்தல் எதிர்பார்ப்புகளை இந்த அறிக்கை காட்டுகிறது என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, ஐக்கிய அரபு அமீரகத்தில், பொருளாதாரம் வலுவடையும் போது நிறுவனங்கள் விரிவடையத் தயாராகி வருகின்றன, இது வலுவான எண்ணெய் அல்லாத செயல்பாடு மற்றும் ஹைட்ரோகார்பன் உற்பத்தியில் எதிர்பார்க்கப்படும் உயர்வு ஆகியவற்றால் ஆதரிக்கப்படுகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் மத்திய வங்கி 2025 இல் 4.9% மற்றும் 2026 இல் 5.3% என்ற மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியைக் கணித்துள்ளது. எண்ணெய் அல்லாத துறை 2025 இல் 4.5% மற்றும் 2026 இல் 4.8% வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹைட்ரோகார்பன் துறையும் 2025 இல் 5.8% மற்றும் 2026 இல் 6.5% என்ற விகிதங்களுடன் வலுவாக விரிவடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கூப்பர் ஃபிட்சின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ட்ரெஃபோர் மர்பி, அடுத்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளுக்கு, குறிப்பாக துபாயில், முக்கிய உள்கட்டமைப்பு மேம்பாடுகளால் உந்தப்பட்டு, ஐக்கிய அரபு அமீரகத்தின் வேலைவாய்ப்பு சந்தை மிகவும் நம்பிக்கைக்குரியதாக இருப்பதாகக் கூறியுள்ளார்.

“மக்கள்தொகை வளர்ச்சி தொடர்ந்து வருவதால், துபாயில் அதிக சாலைகள், மெட்ரோ விரிவாக்கம் மற்றும் ஒரு புதிய விமான நிலையம் என மிகப் பெரிய உள்கட்டமைப்பு வகை திட்டங்களை நாம் காண்போம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

அத்துடன் கணக்கெடுக்கப்பட்ட நிறுவனங்களில் 48% பணியமர்த்தலை அதிகரிக்க திட்டமிட்டுள்ள நிலையில், 29% செலவுக் கட்டுப்பாட்டு உத்திகள் மற்றும் நிறுவன மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக வேலைகளைக் குறைக்க எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளன. மற்றொரு 23% தங்கள் பணியாளர்களில் பெரிய மாற்றங்கள் செய்ய போவதில்லை என்று கணித்துள்ளது.

இந்த கணக்கெடுப்பு வளைகுடா பிராந்தியத்தில் உள்ள 1,000க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பதில்களை பகுப்பாய்வு செய்து, முடிவுகள் ஆட்சேர்ப்புத் திட்டங்கள், பணியாளர் நியமன முன்னறிவிப்புகள் மற்றும் 2025–2026க்கான சம்பளப் போக்குகளை உள்ளடக்கியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகமானவர்களை பணியமர்த்த எதிர்பார்க்கப்படும் துறைகள்

பல தொழில்கள் விரிவாக்கத்திற்கான வலுவான அறிகுறிகளைக் காட்டுகின்றன. அதில் குறிப்பாக விமானப் போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் விண்வெளி, பொதுத்துறை, ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான துறை போன்றவை அடங்கும் என கூறப்படுகின்றது.

2020 ஆம் ஆண்டில் 9.44 மில்லியனிலிருந்து 2025 ஆம் ஆண்டில் 11.48 மில்லியனாக மக்கள் தொகை அதிகரித்ததால் ஐக்கிய அரபு அமீரகத்தின் வேலைவாய்ப்பு சந்தை மிகவும் போட்டித்தன்மை வாய்ந்ததாக மாறியுள்ளது என்று வேர்ல்டோமீட்டர்ஸ் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel