ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வெளியிட்டுள்ள சமீபத்திய வானிலை அறிக்கையில், டிசம்பர் 25 முதல் 29 வரை பொதுவாக மிதமான வானிலை நிலவும் என்றும், இரவில் வெப்பநிலை குறைவாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
நாட்டைப் பாதிக்கும் ஒரு பலவீனமான குறைந்த காற்றழுத்த அமைப்பின் நீட்டிப்பு காரணமாக இந்த வானிலை மாற்றம் ஏற்படுவதாகவும், இதனால் அவ்வப்போது மேகமூட்டம், அதிகரித்த ஈரப்பதம் மற்றும் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் (புதன்கிழமை, டிசம்பர் 24) வானம் தெளிவாகவோ அல்லது ஓரளவு மேகமூட்டத்துடனோ காணப்படும் என்றும், தீவுகள் மற்றும் மேற்கு கடல் பகுதிகளில் மேகங்கள் உருவாகும் என்று மையம் கூறியுள்ளது. மேலும், இன்று இரவு நேரத்தில் அதிகரிக்கும் ஈரப்பதம் காரணமாக, வியாழக்கிழமை அதிகாலையில் சில உட்பகுதிகளில் மூடுபனி அல்லது பனிமூட்டம் ஏற்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினத்திற்கான (வியாழக்கிழமை, டிசம்பர் 25) முன்னறிவிப்பின் படி, கடலோரப் பகுதிகள், தீவு மற்றும் வடக்கு பிராந்தியங்களில் அவ்வப்போது மேகமூட்டம் அதிகரிக்கும் என்றும், லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஈரப்பதமான நிலைமைகள் இரவு முழுவதும் வெள்ளிக்கிழமை வரை தொடரும், குறிப்பாக உள் பகுதிகளில் மூடுபனி அல்லது பனிமூட்டத்திற்கான வாய்ப்பை அதிகரிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
வார இறுதிக்கான வானிலை முன்னறிவிப்பு
அதன் பின்னர், வெள்ளிக்கிழமை, டிசம்பர் 26 அன்று, வானம் தெளிவாகவோ அல்லது ஓரளவு மேகமூட்டத்துடனோ காணப்படும் என்றும், வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அவ்வப்போது மேகமூட்டமும், லேசான மழைக்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்று இரவு நேர ஈரப்பதம் காரணமாக சனிக்கிழமை அதிகாலையில் மீண்டும் மூடுபனி அல்லது பனிமூட்டம் ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, சனிக்கிழமை, டிசம்பர் 27 அன்று, பகல் நேரங்களில் வானிலை தெளிவாகவோ அல்லது ஓரளவு மேகமூட்டத்துடனோ இருக்கும் என்றும், இரவில் தீவுகள் மற்றும் மேற்குப் பகுதிகளில் மேகமூட்டம் அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இரவு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை வரை ஈரப்பதம் அதிகரிக்கும், கடலோர மற்றும் உள்நாட்டுப் பகுதிகளில் பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது எனவும் NCM கூறியுள்ளது.
இந்தக் காலகட்டம் முழுவதும் காற்று பெரும்பாலும் லேசானது முதல் மிதமான வேகத்தில் வீசும், குறிப்பாக வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அவ்வப்போது வேகம் அதிகரிக்கும். அதேசமயம், வடமேற்கு காற்று வலுப்பெறுவதால், அரபிக்கடலில் கடல் நிலைமைகள் லேசானது முதல் மிதமான வேகத்திலும், அவ்வப்போது சீற்றமாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, வானிலை மாற்றங்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், நிலைமைகளுக்கு ஏற்ப தொடர்ந்து புதுப்பிப்புகளை வெளியிடும் என்றும் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel