துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), இப்போது Uber செயலி மூலம் ‘WeRide Robotaxis’ சேவையை முன்பதிவு செய்ய முடியும் என்று அறிவித்துள்ளது, இது நகரத்தின் தானியங்கி போக்குவரத்தை நோக்கிய நகர்வில் ஒரு முக்கிய படியாகும்.
இந்த சேவை துபாயின் பொது கடற்கரைகளுக்கு அருகிலுள்ள இரண்டு பிரபலமான பகுதிகளான உம் சுகீம் மற்றும் ஜுமேரா ஆகிய இடங்களில் கிடைக்கும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள விபரங்களின் படி, ‘WeRide Robotaxi’ ஐ முன்பதிவு செய்ய பயனர்கள் Uber செயலியில் ‘Autonomous’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.
இருப்பினும் இந்த சேவை காலை 9 மணியில் இருந்து மலை 4 மணி வரை மட்டுமே கிடைக்கும் என கூறப்படுகின்றது. மேலும் முக்கிய அம்சமாக ஜனவரி 2026 இறுதி வரை இயங்கும் uber -ன் ப்ரோமோஷன் சலுகையின்படி, பயணம் 500 திர்ஹம்சிற்கும் குறைவான மதிப்புடையதாக இருந்தால், முதல் 50 சவாரிகள் முற்றிலும் இலவசம்.
இருப்பினும், குறிப்பிட்ட இரண்டு பகுதிகளுக்குள் மட்டுமே சவாரிகள் கிடைக்கும் என்பதுதான் முக்கிய அம்சம். உதாரணமாக, ஜுமைரா மசூதியிலிருந்து கைட் கடற்கரைக்கு பயணிக்க ஒரு சவாரிக்கு, பொதுவாக UberX இல் மதியம் 1 மணிக்கு சுமார் 45 திர்ஹம்ஸ் அல்லது அதற்கு மேல் செலவாகும், இப்போது ‘autonomous’ விருப்பத்தைப் பயன்படுத்தி இலவசமாகப் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
தானியங்கி வாகனம் என்றாலும், அவை சோதனைக் கட்டத்தில் இருப்பதால், ஒவ்வொரு வாகனத்திலும் இன்னும் சிறப்பு பாதுகாப்பு ஓட்டுநர் இருப்பார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முழு ஓட்டுநர் இல்லாத சேவைக்கு மாறுவதற்கு முன்பு ஒரு மென்மையான மற்றும் பாதுகாப்பான அனுபவத்தை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக RTA தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து RTAவின் பொதுப் போக்குவரத்து நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அகமது பஹ்ரோஸ்யான் கூறுகையில், இந்த அறிமுகம் ‘RTA’ மற்றும் ‘WeRide’ ஆகிய இரு இருவனங்களும் ஏப்ரல் 2025 இல் தங்கள் கூட்டாண்மையைத் தொடங்கியதிலிருந்து மேற்கொள்ளப்பட்ட விரிவான சோதனைகளை அடிப்படையாகக் கொண்டது. இந்த முயற்சி துபாயின் சுய-ஓட்டுநர் போக்குவரத்து உத்தியை ஆதரிக்கிறது, இது 2030 ஆம் ஆண்டுக்குள் அனைத்து பயணங்களிலும் 25% தானியங்கி பெற்றதாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
WeRide தற்போது மத்திய கிழக்கு முழுவதும் சுமார் 150 தானியங்கி வாகனங்களை இயக்குகிறது. அதுமட்டுமல்லாமல், உலகளவில் சோதிக்கப்பட்ட தானியங்கி ஓட்டுநர் தொழில்நுட்பத்தின் ஆதரவுடன், 2030 ஆம் ஆண்டுக்குள் பல்லாயிரக்கணக்கான ரோபோடாக்சிகளை பயன்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
துபாயின் வளர்ந்து வரும் மக்கள்தொகை மற்றும் பகிரப்பட்ட இயக்கத்திற்கான அதிகரித்து வரும் தேவை ஆகியவை நகரத்தின் ஸ்மார்ட் போக்குவரத்து தீர்வுகளை நோக்கிய மாற்றத்தை உந்துகின்றன. 2024 ஆம் ஆண்டில், துபாய் பொது போக்குவரத்து, டாக்சிகள் மற்றும் பகிரப்பட்ட இயக்க சேவைகளில் 153 மில்லியனுக்கும் அதிகமான பயணங்களை பதிவு செய்தது, இது முந்தைய ஆண்டை விட 28% அதிகரிப்பு எனக் கூறப்படுகிறது. இந்த வளர்ச்சி தானியங்கி வாகன செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்கான வலுவான அடித்தளத்தை உருவாக்குகிறது என்று RTA கூறியுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel