ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் உள்ள 15-க்கும் மேற்பட்ட முக்கிய இடங்களில் AI அடிப்படையிலான ஸ்மார்ட் பார்க்கிங் அமைப்பானது பார்க்கோனிக்குடன் இணைந்து செயல்படுத்தப்பட்டுள்ளது. இது பயனர்களின் சாலிக் அக்கவுண்ட்டில் இருந்து பார்க்கிங் கட்டணத்தை தானாகவே கழித்துக்கொள்ளும் வசதியை வழங்குகிறது.
இந்த அமைப்பு தற்போது ஷேக் சையத் பெஸ்டிவல், ஷேக் ஷக்பூத் மெடிக்கல் சிட்டி, டல்மா மால், யாஸ் மால், அல் வஹ்தா மால், அல் பதீன் மெரினா, நேஷன் டவர்ஸ் – யுனைடெட் ஸ்கொயர், WTC மால், ரீம் பார்க், சாதியாத் பீச், அல் பந்தர் பீச், அல் முனீரா பீச், அஜ்வான் டவர்ஸ் மற்றும் யுனைடெட் ஸ்கொயர் உள்ளிட்ட அதிக போக்குவரத்து உள்ள இடங்களில் செயல்பாட்டில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அல்தார் பிராப்பர்டீஸ் (Aldar Properties) மற்றும் பார்க்கோனிக் (Parkonic) ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு கூட்டு ஒப்பந்தத்தின் விளைவாக இந்த ஸ்மார்ட் பார்க்கிங் அமைப்பு சமூக குடியிருப்பு இடங்களிலும் உருவாக்கப்பட்டுள்ளது. இது அபுதாபி மற்றும் அல் அய்னில் உள்ள அல் தாரின் குடியிருப்பு, வணிக பயன்பாட்டுத் திட்டங்களில் ஒருங்கிணைந்த, AI சார்ந்த பார்க்கிங் சேவைகளை வழங்குவதற்காக ஒரு புதிய கூட்டு முயற்சியை உருவாக்கியுள்ளது.
தானியங்கி நம்பர் பிளேட் அங்கீகார (ANPR) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இந்த அமைப்பு தடையில்லா நுழைவு மற்றும் வெளியேறும் அனுபவத்தை வழங்குகிறது. பார்க்கிங் கட்டணங்கள் சாலிக், TAMM அல்லது DARB செயலிகள் மூலம் தானாகவே கழிக்கப்படுகின்றன. இதனால் டிக்கெட்டுகள், பணப் பரிவர்த்தனைகள் அல்லது SMS பார்க்கிங் தேவையில்லை.
அதுமட்டுமல்லாமல், இந்த முயற்சி பின்வரும் நோக்கங்களைக் கொண்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்:
- போக்குவரத்து நெரிசலைக் குறைத்தல்
- பார்க்கிங் செயல்திறனை மேம்படுத்துதல்
- சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துதல்
- அபுதாபியின் நிலைத்தன்மை நிகழ்ச்சி நிரல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் எதிர்கால போக்குவரத்து உத்திக்கு ஆதரவளித்தல்
இந்தத் தளம், ஸ்மார்ட் மற்றும் தானியங்கி வாகனங்களை ஆதரிக்கும் திறன் கொண்ட எதிர்காலத்திற்குத் தயாரான உள்கட்டமைப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அல் தார் பிராப்பர்டீஸின் தலைமைச் செயல் அதிகாரி காலித் அல் ரஜி அவர்கள் பேசுகையில், இந்த கூட்டாண்மை அல் தார் நிர்வகிக்கும் சமூகங்களில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய படியை பிரதிபலிக்கிறது என்றும், இந்த மைல்கல், நவீன வாழ்க்கையின் எதிர்கால லட்சியங்களுக்கு ஏற்ப மேம்பட்ட நகர்ப்புற அனுபவங்களை வழங்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து பார்க்கோனிக்கின் தலைமைச் செயல் அதிகாரி இமாத் அல்-ஆலம் எல்-தின் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், இந்தத் தொழில்நுட்பம் தடையற்ற, பாதுகாப்பான மற்றும் நம்பகமான அணுகலை உறுதிசெய்து, சமூகங்கள் முழுவதும் பயனர்களின் வசதியை மேம்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.
முக்கிய நன்மைகள் பின்வருமாறு:
- விரைவான நுழைவு மற்றும் வெளியேற்றம்
- டிக்கெட்டுகள் அல்லது ரொக்கப் பணம் தேவையில்லை
- தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் இலவச பார்க்கிங் நேரங்கள்
- பார்க்கிங் விதிமீறல்கள் குறைப்பு
தானியங்கி கட்டணத்தை எவ்வாறு செயல்படுத்துவது
வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தின் பதிவு எண்ணை தங்கள் சாலிக் கணக்குடன் பின்வரும் வழிகளில் இணைப்பதன் மூலம் தானியங்கி பார்க்கிங் கட்டணத்தைச் செயல்படுத்தலாம்:
- சாலிக் செயலி அல்லது இணையதளம்
- TAMM தளம்
- மவாகிஃப் செயலி
- SMS (தேர்ந்தெடுக்கப்பட்ட சேவைகளுக்கு)
இது செயல்படுத்தப்பட்டதும், சாலிக் அக்கவுண்டில் போதுமான இருப்பு இருந்தால், பார்க்கிங் கட்டணங்கள் தானாகவே கழிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel