ADVERTISEMENT

புர்ஜ் கலிஃபாவின் கண்கவர் புத்தாண்டு கொண்டாட்டத்திற்குப் பின்னால் உள்ள தொழில்நுட்பங்களும் கடின உழைப்பும் பற்றிய சிறுபார்வை…

Published: 2 Jan 2026, 9:26 PM |
Updated: 2 Jan 2026, 9:32 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகம் எப்போதும் ஆரவாரமாகவும், பிரம்மாண்டமாகவும் தான் புத்தாண்டை வரவேற்கிறது. நள்ளிரவில் புத்தாண்டு பிறக்கும் போது, வாணவேடிக்கைகள், சாதனை படைக்கும் ட்ரோன் நிகழ்ச்சிகள் மற்றும் பிரமிக்க வைக்கும் கொண்டாட்டங்களுடன் களைகட்டுகிறது. நாடு முழுவதும் ஏராளமான கொண்டாட்டங்கள் நடைபெற்றாலும், உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா புத்தாண்டு கொண்டாட்டமானது சிறப்பானதாக உள்ளது, இது மில்லியன் கணக்கான குடியிருப்பாளர்களையும் உலகளாவிய பார்வையாளர்களையும் ஈர்க்கிறது.

ADVERTISEMENT

ஒவ்வொரு டிசம்பர் 31 அன்றும், குடியிருப்பாளர்கள் டவுன்டவுன் துபாயில் கூடி அல்லது இணையத்தில் நேரலையாகப் பார்த்து, அந்த அடையாளச் சின்னமான கட்டிடம் ஒரு பிரம்மாண்டமான காட்சியுடன் ஒளிர்வதைக் காண்கின்றனர்.

ஆனால் இந்த பிரமிக்க வைக்கும் காட்சிகளுக்குப் பின்னால் மாதக்கணக்கிலான கடின உழைப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தொழில்நுட்ப வல்லுநர்களும் தொழிலாளர்களும் கட்டிடத்தைத் தயார்படுத்துவதில் நீண்ட நேரம் செலவிடுவதாகத் தெரிவித்துள்ளனர். இறுதி நேரக்கணிப்பின் போது எல்லாம் கச்சிதமாக நடப்பதை உறுதிசெய்ய, அவர்கள் திறமை, துல்லியம் மற்றும் குழுப்பணியைப் பயன்படுத்துவதாகவும் கூறியுள்ளனர்.

ADVERTISEMENT

புர்ஜ் கலிஃபாவை உருவாக்கிய எமார் பிராப்பர்டீஸின் நிறுவனர் முகமது அலப்பார், இதை “world’s most powerful light installation” என்று கூறி வீடியோ ஒன்றினை பகிர்ந்துகொண்டதுடன் தொழில்நுட்பக் குழுக்களின் அர்ப்பணிப்புக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவில், தொழிலாளர்கள் புர்ஜ் கலிஃபாவின் முகப்பில் அதிக உயரத்தில், மிகப்பெரியக் கயிறுகளால் பாதுகாக்கப்பட்ட நிலையில் தொங்கிக்கொண்டு, மேம்பட்ட லேசர்கள் மற்றும் விளக்கு சாதனங்களை நிறுவும் காட்சிகள் காண்போரை மெய்சிலிர்க்கச் செய்கின்றன. மற்ற குழுக்கள் நேரம் மற்றும் விளைவுகளைக் கட்டுப்படுத்தும் சிக்கலான தொழில்நுட்ப அமைப்புகளை நிர்வகிப்பதையும் அந்த வீடியோவில் காண முடிகிறது

ADVERTISEMENT

மேலும், இந்தக் காட்சிக்குத் தயாராவதற்கு அந்தக் குழுவிற்கு ஆறு மாதங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. விளக்கு அமைப்பிற்குப் பொறுப்பான ஜான்சன் டெக்னிக்கல் சர்வீசஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் பைஜு கூறுகையில், “நேரக்கணிப்பு எங்கள் இதயத் துடிப்பை அதிகரிக்கிறது. 11:59:59 மணிக்கு எல்லாம் சரியாக வேலை செய்ய வேண்டும். நாங்கள் ஒரே நேரத்தில் பதட்டமாகவும் உற்சாகமாகவும் உணர்கிறோம்” என்று கூறியுள்ளார்.

அந்தக் கட்டிடத்தில் கிட்டத்தட்ட 250 விளக்கு சாதனங்கள் மற்றும் 70 லேசர்கள் உள்ளன, இவை அனைத்தும் கவனமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 180 நாட்கள் திட்டமிடலுக்குப் பிறகு, புர்ஜ் கலிஃபா டிசம்பர் 31, 2025 அன்று கண்கவர் விளக்குகளின் ஒளிஜாலத்தால் பிரகாசித்தது. தெருக்களிலும் நடைபாதைகளிலும் கூடிய குடியிருப்பாளர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்து, அந்த கட்டிடம் பல வண்ணங்களாக மாறுவதைக் கண்டுகளித்தவாறே புத்தாண்டை வரவேற்றனர். ஆனால் இது நூற்றுக்கணக்கான மக்களின் பல மாத உழைப்பின் பயனாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel