ADVERTISEMENT

அமீரகத்தில் நடைபெறும் 77வது மாபெரும் குடியரசு தின கொண்டாட்டங்கள்.. தூதரகம் அறிவிப்பு..!!

Published: 24 Jan 2026, 8:55 PM |
Updated: 24 Jan 2026, 8:56 PM |
Posted By: Menaka

இந்தியா வருகின்ற திங்கட்கிழமை (ஜனவரி 26) தனது 77வது குடியரசு தினத்தைக் கொண்டாடும் நிலையில், 4.3 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்களைக் கொண்ட ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய சமூகம், பிரம்மாண்டமான கொண்டாட்டங்களுக்குத் தயாராகி வருகிறது. இது இந்தியாவிற்கு வெளியே நடைபெறும் மிகப்பெரிய குடியரசு தின நிகழ்வுகளில் ஒன்றாக அமையும் என்று அறிக்கைகள் கூறுகின்றன. சமீபத்தில் அமீரக அதிபர் மாண்புமிகு ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் அவர்கள் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திய நிலையில், இந்த ஆண்டு கொண்டாட்டங்கள் கூடுதல் முக்கியத்துவம் பெறுகின்றன.

ADVERTISEMENT

அதிகாரப்பூர்வ கொண்டாட்டங்கள்
அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் ஆகியவை அதிகாரப்பூர்வ கொடியேற்றும் விழாக்களுக்கு ஏற்பாடு செய்துள்ளன. இந்திய தூதர் தீபக் மிட்டல் அவர்கள் காலை 8 மணிக்கு தூதரகத்தில் தேசியக் கொடியை ஏற்றுவார், அதே நேரத்தில் துணைத் தூதர் சதீஷ் குமார் சிவன் துபாய் துணைத் தூதரகத்தில் காலை 7 மணிக்கு மூவர்ணக் கொடியை ஏற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாக்களில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் குடியரசு தினச் செய்தி வாசிக்கப்படும், அதைத் தொடர்ந்து சமூக உறுப்பினர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், துணைத் தூதரகம் ஞாயிற்றுக்கிழமை அல் ஜடாஃபில் உள்ள DHA இரத்த தான மையத்தில் ஒரு மாபெரும் இரத்த தான முகாமுக்கும் ஏற்பாடு செய்துள்ளது. அதுமட்டுமில்லாமல், தூதரக அதிகாரிகள், வடக்கு அமீரகங்களில் உள்ள இந்திய சங்கங்களால் ஏற்பாடு செய்யப்படும் குடியரசு தின நிகழ்வுகளிலும் கலந்துகொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஒரு முக்கிய சிறப்பம்சமாக, ஓத் மேத்தாவில் உள்ள இந்தியன் உயர்நிலைப் பள்ளியில் (indian high school) நடைபெறும் கொண்டாட்டங்கள் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு 7,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள், 15,000-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள், ஊழியர்கள் மற்றும் விருந்தினர்கள் முன்னிலையில் நிகழ்ச்சிகளை வழங்க உள்ளனர். இந்த நிகழ்ச்சி, ‘ஆத்மநிர்பர் பாரத்’ மற்றும் ‘வந்தே மாதரம்’ பாடலின் 150வது ஆண்டு விழா உள்ளிட்ட இந்தியாவின் தேசிய கருப்பொருள்களை வெளிப்படுத்தும். கூடுதலாக, புது டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பால் ஈர்க்கப்பட்ட வண்ணமயமான அலங்கார ஊர்திகள் மற்றும் தேசபக்தி நிகழ்ச்சிகளும் இதில் இடம்பெறும் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கலாச்சாரம் மற்றும் உறவுகளைக் கொண்டாடுதல்
விழா மனப்பான்மையை மேலும் அதிகரிக்கும் வகையில், சில்லறை வர்த்தக நிறுவனமான லூலு, ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் உள்ள தனது கடைகளில் ஆண்டுதோறும் நடைபெறும் ‘இந்தியா உத்சவ்’ நிகழ்ச்சியைத் தொடங்கியுள்ளது. இதில் இந்தியப் பொருட்கள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் காட்சிப்படுத்தப்படுகின்றன. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் ஆண்டுதோறும் 1 பில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளதாக லுலு அதிகாரிகள் தெரிவித்தனர், இது இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான பொருளாதார உறவுகளை பிரதிபலிக்கிறது.

ADVERTISEMENT

மேலும் குடியரசு தினத்திற்கு முன்னதாக, தூதர் தீபக் மிட்டல் அபுதாபியில் இந்தியத் தொழிலாளர்களைச் சந்தித்து, அமீரகத்தின் வளர்ச்சிக்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி, நலத்திட்ட முயற்சிகளையும் பற்றியும் விவாதித்துள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel