அமீரகத்தின் சுப்ரீம் கவுன்சில் உறுப்பினர் மற்றும் அஜ்மானின் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் ஹுமைத் பின் ரஷீத் அல் நுஐமி (Sheikh Humaid bin Rashid Al Nuaimi) அவர்கள், ஷார்ஜாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் துயரமான முறையில் உயிரிழந்த 22 வயது கல்லூரி மாணவர் செலுத்திய பல்கலைக்கழகக் கல்விக் கட்டணத்தை முழுமையாகத் திருப்பித் தர உத்தரவிட்டுள்ளார். இது துயரத்தில் இருக்கும் குடும்பத்திற்கு இரக்கத்தையும் ஆதரவையும் காட்டும் ஒரு நடவடிக்கை என்று கூறப்படுகின்றது.
அலி மாக்டி ஓம்ரான் முஹ்செயின் (Ali Magdy Omran Muhssein) என்ற மாணவர், பிப்ரவரி 5 ஆம் தேதி அஜ்மான் பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருந்த தனது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்குச் சில நாட்களுக்கு முன்பு, கடந்த பிப்ரவரி 1, ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
அன்றைய தினம் அலி தனது பைக்கில் தொழில்துறைப் பகுதியிலிருந்து அல் மஜாஸ் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, மாலை 4 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் பைக்கில் சென்று கொண்டிருந்த போது, ஒரு பாலத்தில் வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து தடுப்பில் மோதியதாகக் கூறப்படுகிறது. மிகவும் கடுமையாக மோதியதால், அவரது பைக் சாலையின் எதிர் திசைக்குத் தூக்கி வீசப்பட்டுள்ளது. கடும் விபத்தில் சிக்கிய அலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், பின்னர் அவரது உடல் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் துயரமான நிகழ்வு இருந்தபோதிலும், வியாழக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அஜ்மான் பல்கலைக்கழகம் அலியின் கல்விச் சாதனையை கௌரவித்தது. அவரது தந்தை மாக்டி ஓம்ரான் முஹ்செயின், தனது மகனின் சார்பாகப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். இது விழாவில் கலந்துகொண்டவர்களிடையே நெகிழ்ச்சியான உணர்வுகளை ஏற்படுத்தியது.
இந்த விழாவில் கலந்து கொண்ட அஜ்மான் ஆட்சியாளர், மறைந்த பட்டதாரி மாணவர் தனது பல்கலைக்கழகப் படிப்பின் போது செலுத்திய அனைத்து கல்விக் கட்டணங்களையும் அவரது குடும்பத்தினருக்கு முழுமையாகத் திருப்பித் தருமாறு உத்தரவிட்டார். இந்த நடவடிக்கை, மாணவர்களின் முயற்சிகளை அங்கீகரிப்பதிலும், இழப்புக் காலங்களில் குறியீட்டு மற்றும் நடைமுறை ஆதரவின் மூலம் குடும்பங்களுக்குத் துணை நிற்பதிலும் தலைமைத்துவத்தின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிப்பதாகக் கூறப்படுகின்றது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel