தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது, ஒவ்வொரு கிராமும் முன்னெப்போதையும் விட அதிக மதிப்புமிக்கதாகிவிட்டது. இந்தத் தங்க உயர்வுக்கு மத்தியில், பல தசாப்தங்களாகச் சேமித்து வைக்கப்பட்ட, சுமார் 50,000 திர்ஹம்ஸ் மதிப்புள்ள தங்க நாணயங்கள் தவறுதலாகக் குப்பைத்தொட்டியில் வீசப்பட்டுவிட்டன என்பதை உணரும்போது ஏற்படும் பதட்டத்தை கற்பனை செய்து பாருங்கள்.
உண்மையில், துபாயில் வசிக்கும் ஒரு இந்தியப் பெண், சுமார் 50,000 திர்ஹாம் மதிப்புள்ள தங்க நாணயங்களைத் தற்செயலாகக் குப்பைத்தொட்டியில் வீசிய சம்பவம் சமீபத்தில் நிகழ்ந்துள்ளது.
சுமார் 23 ஆண்டுகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வந்த துபாயின் முன்னாள் குடியிருப்பாளரான காமினி கண்ணன் என்பவர், சமீபத்தில் ஒரு திருமணத்தில் கலந்துகொள்வதற்காக இந்தியாவிலிருந்து புறப்பட்டு மீண்டும் நகரத்திற்கு வந்திருந்தார். ஜனவரி மாத இறுதியில் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்தபோது, 22 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு 600 திர்ஹமைக் கடந்த நிலையில், பல ஆண்டுகளாகத் தான் எவ்வளவு தங்கத்தை சேமித்து வைத்திருக்கிறோம் என்பதை மறுமதிப்பீடு செய்ய அவர் முடிவு செய்தார்.
தன்னுடைய தங்கத்தை சேமித்து வைத்திருந்த பழைய பை கிழிந்துபோவதைக் கவனித்த காமினி, தற்காலிகமாக அந்தப் பொருட்களை மற்றொரு பைக்கு மாற்றி, அதைச் சாப்பாட்டு மேஜையின் மீது வைத்துள்ளார். அந்தப் பொருட்களில் தலா 8 கிராம் எடையுள்ள நான்கு 22 காரட் தங்க நாணயங்களும், ஒரு 50 கிராம் 24 காரட் தங்கக் கட்டியும் அடங்கும். இதையடுத்து அன்றைய தினம் பிற்பகல், வீட்டைச் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது, அந்தப் பை தவறுதலாகக் குப்பையில் வீசப்பட்டிருக்கிறது.
மறுநாள் காலை, காமினி இந்தியாவுக்குத் திரும்புவதற்கு ஒரு நாள் முன்பு பிப்ரவரி 1 அன்று தான் அந்தப் பை காணாமல் போனதை அவர் உணர்ந்திருக்கிறார். பதற்றத்துடன் தேடிய பிறகு, அது தவறுதலாகக் குப்பையில் வீசப்பட்டதை குடும்பத்தினர் கண்டுபிடித்தனர். காமினி உடனடியாக கட்டிடத்தின் செக்யூரிட்டியிடம் தெரிவித்ததாகவும், ஆனால் அது மீட்கப்படும் என்ற நம்பிக்கை அவருக்குக் குறைவாகவே இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பொருட்களின் இன்றைய மதிப்பு சுமார் 50,000 திர்ஹம் என்பதையும் காமினி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை என்று கூறிய காமினி, “அது குப்பையில் இருந்தால், அது போய்விட்டது என்றுதான் அர்த்தம்” என்று அந்த நேரத்தில் தான் அடைந்த விரக்தியையும் நினைவு கூர்ந்தார்.
அதையடுத்து, சரியாக மூன்று நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி 4 அன்று, காமினியின் மகன் அபிமன்யுவுக்கு கட்டிடத்தின் பாதுகாவலரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. காமினி இது பற்றி கூறுகையில் “நாங்கள் தொலைத்த தங்கத்தைப் பற்றி யாரோ விசாரிப்பதாக அவர் கூறினார், அது காவல்துறை என்று பின்னர் தெரியவந்தது.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு குப்பை சேகரிப்பாளர் அந்தத் தங்கத்தைக் கண்டுபிடித்து, அதைத் தங்கச் சந்தைக்குக் கொண்டு சென்றதாகவும், இது குறித்து காவல்துறை அந்தத் தொழிலாளியிடம் விசாரித்தபோது, குப்பை சேகரிக்கும்போது அந்தப் பொருட்களைக் கண்டுபிடித்ததாக கூறியதாகவும் அதிகாரிகள் விவரித்துள்ளனர். அதன்பிறகு, கழிவு கண்காணிப்பு அமைப்புகளைப் பயன்படுத்தி, குப்பைகள் கொட்டப்பட்ட கட்டிடத்தைக் கண்டுபிடித்தததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அன்றைய தினம் பிற்பகல் புகைப்படங்கள், கொள்முதல் ரசீதுகள் மற்றும் தங்கம் தனது தாய்க்குச் சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களுடன் நைஃப் காவல் நிலையத்திற்கு வருமாறு அபிமன்யு கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார். சரிபார்ப்பு செயல்முறைக்கு சில மணிநேரங்கள் ஆனாலும், அது சுமூகமாகவும் கவனத்துடனும் கையாளப்பட்டதாக அபிமன்யு கூறியுள்ளார்.
இவ்வாறு தொலைந்துபோன உடைமைகளை மீட்க குடியிருப்பாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் உதவுவதில் துபாய் நீண்ட காலமாக புகழ்பெற்றுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், விமான நிலையங்களில் தவறவிடப்பட்ட பெரும் தொகைப் பணம் முதல், டாக்ஸிகளிலும் கடலிலும் தொலைந்துபோன விலைமதிப்பற்ற பொருட்கள் வரை அனைத்தையும் காவல்துறை மீட்டுத் தந்துள்ளது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து மனம் நெகிழ்ந்து பேசிய காமினி, “துபாய் எவ்வளவு அற்புதமானது என்பதை நான் உண்மையிலேயே உணர்கிறேன், இது போன்ற ஒரு நகரம் வேறு எங்கும் இல்லை.” என்று துபாயைப் பற்றிய தனது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel