ADVERTISEMENT

அமீரகம் ஒரு ‘உடைக்க முடியாத கோட்டை’ என்று கூறிய துணைப் பிரதமர் ஷேக் சைஃப்!!

Published: 6 Feb 2026, 5:28 PM |
Updated: 6 Feb 2026, 5:28 PM |
Posted By: Menaka

குடும்பங்கள், நம்பிக்கை, வணிகங்கள் மற்றும் செல்வம் ஆகியவை முழுமையாகப் பாதுகாக்கப்படும் ஒரு “உடைக்க முடியாத கோட்டையாக” ஐக்கிய அரபு அமீரகம் மாறியுள்ளது என்று நாட்டின் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான லெப்டினன்ட் ஜெனரல் ஷேக் சைஃப் பின் சையத் அல் நஹ்யான் அவர்கள் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

துபாயில் நடைபெற்ற உலக அரசாங்கங்கள் உச்சி மாநாட்டில் (World Governments Summit) உரையாற்றிய ஷேக் சைஃப், “கவலைப்பட வேண்டாம். உங்கள் குடும்பம், உங்கள் நம்பிக்கை, உங்கள் தொழில் மற்றும் உங்கள் செல்வம் பாதுகாப்பாக உள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்தின் உடைக்க முடியாத கோட்டைக்குள் நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள்” என்று அனைவருக்கும் ஒரு நம்பிக்கையூட்டும் உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

மேலும், கடந்த ஆண்டு 9,800 கோடீஸ்வரர்களின் நிகர வரவைப் பதிவுசெய்து, உலகளாவிய செல்வத்திற்கான உலகின் முன்னணி இடமாக ஐக்கிய அரபு அமீரகம் திகழ்கிறது என்று ஷேக் சைஃப் வெளிப்படுத்தியுள்ளார். அவரது கூற்றுப்படி, தற்போது அமீரகம் 240,000-க்கும் மேற்பட்ட கோடீஸ்வரர்களின் தாயகமாக உள்ளது, இவர்களின் மொத்த செல்வம் 785 பில்லியன் டாலருக்கும் அதிகமாகும்.

ADVERTISEMENT

அவர் தொடர்ந்து பேசுகையில், ஜனாதிபதி மாண்புமிகு ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் அவர்களை தேசத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் பாதுகாவலர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும், ஷேக் முகமதுவை “ஞானத்துடனும் தைரியத்துடனும் ஐக்கிய அரபு அமீரகத்தின் மாபெரும் குடும்பத்தை வழிநடத்தும் ஒரு வீரர்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

பலத்தின் மூன்று தூண்கள்

மேலும், மேம்பட்ட தொழில் மற்றும் தொழில்நுட்பம், வலுவான பாதுகாப்பு மற்றும் தடுப்பு சக்தி, மற்றும் குடும்ப மதிப்புகளின் அடிப்படையில் கட்டப்பட்ட ஒரு ஒன்றுபட்ட சமூகம் ஆகியவை ஐக்கிய அரபு அமீரகத்தின் கோட்டையை வலிமையாக்கும் மூன்று தூண்கள் என்று கூறியுள்ளார்.

“ஒரு கோட்டையின் வலிமை அதன் சுவர்களில் மட்டும் இல்லை, மாறாக அதன் தலைமை மற்றும் மக்களிடமும் உள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு, தரவு மற்றும் உலகளாவிய நம்பிக்கை

அதுமட்டுமில்லாமல், செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டில் உலகளவில் முதலிடம் பிடித்து, தரவு மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான உலகின் மிகவும் நம்பகமான மையமாக ஐக்கிய அரபு அமீரகம் தன்னை நிலைநிறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தூய்மையான எரிசக்தி, அணுசக்தி மற்றும் அலுமினிய உற்பத்தியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் தொழில்துறை வலிமையையும் ஷேக் சைஃப் எடுத்துரைத்தார். நாட்டின் எண்ணெய் அல்லாத வெளிநாட்டு வர்த்தகம் 26 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்து, 1 டிரில்லியன் டாலரைக் கடந்துள்ளது, இந்த இலக்கு திட்டமிடப்பட்ட காலத்திற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே எட்டப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகம் இப்போது 180-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது மற்றும் 264 போட்டித்திறன் குறிகாட்டிகளில் உலகளவில் முதல் இடத்தில் உள்ளது. எண்ணெய் அல்லாத வர்த்தகத்தில் இந்த மைல்கல்லை முன்கூட்டியே அடைந்ததற்கு மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூமை அவர் பாராட்டியுள்ளார்.

தொடர்ந்து நாட்டின் பயணத்தைப் பற்றிப் பேசிய ஷேக் சைஃப், ஐக்கிய அரபு அமீரகம் கூடாரங்களில் கல்வி கற்பதிலிருந்து விண்வெளிக்குச் செல்லும் நிலைக்கு முன்னேறியுள்ளது என்றார். நாட்டின் அறிவியல் மற்றும் புதுமையாக அர்ப்பணிப்பின் அடையாளமாக MBZ சாட் திட்டத்தையும் அவர் குறிப்பிட்டார்.

மனிதாபிமானத் தலைவர்

பொருளாதார வளர்ச்சிக்கு இணையாக, ஐக்கிய அரபு அமீரகம் ஒரு உலகளாவிய மனிதாபிமானத் தலைமையாக உருவெடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், 30-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஆதரவளிக்கும் அமீரகம், உலகின் மூன்றாவது பெரிய மனிதாபிமான நன்கொடையாளர் என்று தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட விபரங்களின் படி, காசாவிற்கு மட்டும் வழங்கப்பட்ட உதவி 3 பில்லியன் டாலரைக் கடந்துள்ளது. இது மருத்துவ ஆதரவு, கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகள் மற்றும் அவசரத் தேவைகளுக்கான பொருட்கள் ஆகியவற்றுடன், அந்தப் பகுதிக்கு வழங்கப்படும் அனைத்து உலகளாவிய உதவிகளிலும் கிட்டத்தட்ட பாதியாகும்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் வலிமைக்குக் குடும்பமே அடித்தளமாகத் தொடர்கிறது என்று ஷேக் சைஃப் வலியுறுத்தியுள்ளார்.

இறுதியாக, நாட்டின் உண்மையான வலிமை அதன் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களிடமே உள்ளது என்று மீண்டும் வலியுறுத்தியதுடன், ஐக்கிய அரபு அமீரக மக்களுக்கு நன்றி தெரிவித்து அவர் தனது உரையை முடித்துக் கொண்டார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel