ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலைத் தொடர்ந்து பிராந்திய வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதில் ஐக்கிய அரபு அமீரக விமான நிலையங்களில் சிக்கி தவித்த பயணிகளுக்கு சிறப்பு விமான சேவைகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் திட்டமிடப்பட்ட பயணிகளுக்கான விமான சேவை இன்னும் துவங்கவில்லை.
இந்நிலையில் ஷார்ஜாவை தளமாக கொண்டு இயங்கும் ஏர் அரபியா நிறுவனம் வரும் மார்ச் 9 மதியம் 3 மணி வரை தற்காலிகமாக விமான சேவைகள் நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளது. அதாவது மார்ச் 9 வரை அமீரகத்திற்கு உள் வரும் மற்றும் வெளி செல்லும் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக ஏர் அரேபியா நிறுவனம் பயணிகளுக்கு வெளியிட்ட அறிவிப்பில் விமான சேவை பாதிப்பை எதிர்கொள்ளும் பயணிகள் பாதிக்கப்பட்ட விமானத்தை ரத்துசெய்த, தொகையை கிரெடிட்டாக வைத்திருக்கலாம் அல்லது புதிய பயண தேதிக்கு மாற்றியமைக்கலாம் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதே போல எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனமும் மார்ச் 5 வரை விமான சேவையை ரத்து செய்வதாக அறிவித்திருக்கிறது. இதற்கிடையில் அமீரக அரசானது பயணிகளுக்கு ஆலோசனைகளையும் வெளியிட்டுள்ளது.
பயணிகளுக்கான அறிவுரை
- புதுப்பிப்புகளுக்கு அதிகாரப்பூர்வ விமான நிறுவனம் மற்றும் அரசாங்க சேனல்களை மட்டுமே நம்பவும்.
- உறுதிப்படுத்தப்பட்ட விமான விவரங்கள் இல்லாமல் விமான நிலையங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும்.
- விமானம் முன்பு உறுதிப்படுத்தப்பட்டிருந்தாலும், மாற்றங்கள் குறித்து அவ்வப்போது எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.