துபாய் கடல் பகுதியில் நங்கூரமிட்டிருந்த குவைத் கச்சா எண்ணெய் கப்பலான அல் சல்மியில் ஈரானிய ட்ரோனால் தீ விபத்து ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது அந்த தீ வெற்றிகரமாக அணைக்கப்பட்டதாக துபாய் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அதிகாலை உறுதிப்படுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து மீட்புக் குழுக்கள் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் துபாய் அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. அத்துடன் கப்பலில் இருந்த 24 பணியாளர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர் என்றும், மேலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
முழுமையாக எண்ணெய் ஏற்றப்பட்டிருந்த அல் சல்மி கப்பல், திங்களன்று துபாய் துறைமுகத்தில் (நங்கூரமிடும் பகுதி “E”) நங்கூரமிட்டிருந்தபோது தீப்பிடித்ததில், அதன் மேல்தளம் சேதமடைந்தது. ஈரானிய ஆளில்லா விமானங்கள் மூலம் கப்பல் குறிவைக்கப்பட்டதாகவும், அதனால் பொருள் சேதம் ஏற்பட்டதாகவும் குவைத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (KPC) தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் இந்த தீ விபத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்று இங்கிலாந்து கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் (UKMTO) தெரிவித்துள்ளது. ட்ரோன் கப்பலின் வலது பக்கத்தில் தாக்கியதால் தீ ஏற்பட்டதாகவும், பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்ததாக அது கூறியது.
எண்ணெய்க் கப்பலுக்கு ஏற்பட்ட சேதத்தை மதிப்பிடும் பணிகள் நடைபெற்று வருவதாக தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது. லாயிட்ஸ் மற்றும் டேங்கர் டிராக்கர்ஸ் (Lloyd’s and TankerTrackers) தரவுகளின்படி, அந்த எண்ணெய்க் கப்பலில் குவைத் மற்றும் சவுதி அரேபியாவிலிருந்து இரண்டு மில்லியன் பீப்பாய் எண்ணெய் ஏற்றப்பட்டிருந்ததாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஹோர்முஸ் வளைகுடா மற்றும் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களில் இது சமீபத்திய தாக்குதலாகும். பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானைத் தாக்கியதிலிருந்து, ஏவுகணைகள் மற்றும் வெடிக்கும் ட்ரோன்கள் கப்பல்களைக் குறிவைத்துத் தாக்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.