அமீரக செய்திகள்

சாதாரண ஊழியராய் இருந்து முதலாளியான இந்தியர்.. 50 ஆண்டு கால தொழில் பயணம்.. அமீரகத்தின் சிறந்த தையல்காரர் என சிறப்பு பட்டம்… யார் இவர்…??

ஐக்கிய அரபு அமீரகமானது வாழ்க்கையில் நாம் முன்னேறி விடமாட்டோமா என திரைகடல் தாண்டி திரவியம் தேடி வந்ததைப் போன்று பல்வேறு கனவுகளுடன் அமீரகம் வந்த பல்லாயிரக்கணக்கானோருக்கு அவர்களின் வாழ்வில் வெற்றிப்பாதையை உருவாக்கியுள்ளது. பல தசாப்தங்களாக பிழைப்புக்காக அமீரகம் வந்து தற்பொழுது வரை தொழில்புரிந்து வருவோர் பல பேர் உள்ளனர். அவர்களின் வாழ்க்கையில் தாங்கள் கடந்து வந்த பாதையை என்றுமே மறக்காது நினைவில் வைத்திருப்பார்கள்.

பல்வேறுபட்ட மனிதர்களின் நினைவுப் பெட்டகங்களை தன்னகத்தே வைத்திருக்கும் அமீரகத்தில் அந்த நினைவுப் பெட்டகத்தில் இருந்து தனது நினைவுகளையும் பகிர்ந்து கொள்கிறார் 75 வயதான இந்தியர் ஒருவர்.

அமீரகத்தில் வசித்து வரும் குடியிருப்பாளரான கேரளாவைச் சேர்ந்த எம்.வி.சிவராமன், நவம்பர் 1971 இல் ஐக்கிய அரபு அமீரகத்தை வந்தடைந்துள்ளார். ஆரம்ப காலத்தில் தையல் தொழிலில் ஈடுபட்டு வந்த இவர், தன்னை அபுதாபியின் மூத்த தையல்காரர் என்று கூறுகிறார்.

சிவராமன் தையல்காரராக தனது வாழ்வைத் தொடங்கி தற்பொழுது சொந்தமாக தையல் கடையினை வைத்து நடத்திக்கொண்டிருக்கிறார். அவர் இது பற்றி கூறுகையில் “சிறுவயதில் என் வீட்டுக்கு அருகில் தையல் கடை ஒன்று திறக்கப்பட்டது. நான் அப்போது நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். நான் அந்தக் கடையைச் சுற்றி சுற்றித் திரிந்தேன். அப்போது ஒரு தையல் கலைஞரின் கலைப்படைப்பைப் பார்க்கும்போது அதன் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. பின் தையல்காரர் எனக்கு தொழில் கற்றுக் கொடுத்தார், நான் எனது பள்ளி நேரம் முடிந்ததும் அங்கேயே நேரத்தை செலவிடுவேன்”.

“அப்போது சிலோனில் (இலங்கை) வேலை செய்து கொண்டிருந்த என் தந்தைக்கு, முதலில் தனது மகன் தையல் கற்றுக்கொள்வது பிடிக்கவில்லை, ஆனால் என் அம்மா அவரை சமாதானப்படுத்தினார். மேலும் நான் 7 ஆம் வகுப்பு படிக்கும் போது, ​​என் தந்தை எனக்கு ஒரு தையல் இயந்திரம் வாங்கித் தந்தார். நான் 10 ஆம் வகுப்பு படித்து முடித்த பிறகு, நான் ஒரு வருடம் டெய்லரிங் கடையில் வேலை செய்தேன்”.

“அதன்பின் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென நினைத்து சிறந்த வாய்ப்புகளைத் தேடி, 1965 இல், எனது சொந்த திருச்சூர் மாவட்டத்தை விட்டு  மும்பைக்கு சென்றேன். அங்கு வெவ்வேறு கடைகளில் வேலை செய்த நான் சட்டை, பேண்ட் தயாரிப்பதில் நன்கு கற்றுத் தேர்ந்தேன். இருப்பினும் கோட் தயாரிப்பதில் எனக்கு ஆர்வம் இருந்தது. அதனால் நான் இரண்டு ஆண்டுகளாக ஒரு கோட் தயாரிப்பாளருடன் இணைந்து கோட் தயாரிக்க கற்றுக்கொண்டேன்.” என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அபுதாபியில் ஒரு கோட் தயாரிப்பாளருக்கான வேலை இருப்பதாக நண்பர் ஒருவர் அவருக்குத் தெரிவித்ததைத் தொடர்ந்து அப்போது 24 வயதான சிவராமன், 1971 இல் துபாய்க்கு பயணம் செய்தார்.

அமீரகத்தை வந்தடைந்த அவர் அபுதாபியில் இருக்கும் ஹம்தான் ஸ்ட்ரீட்டில் உள்ள ஃப்ரெண்ட்ஸ் டெய்லர்ஸ் நிறுவனத்தில் 650 திர்ஹமிற்கு கோட் மேக்கராக பணிபுரிந்துள்ளார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 1,200 திர்ஹம் சம்பளத்திற்கு வீனஸ் டெய்லர்ஸ் நிறுவனத்திற்கு மாறியுள்ளார்.

பின்னர் அவரது வேலை மற்றும் ஆங்கில ஆடைகளுக்கான தேவை அதிகரித்து வருவதைக் கண்டு, குறிப்பாக ஐரோப்பிய குடியிருப்பாளர்களிடமிருந்து வருவதைக் கண்டு, சிவராமன் தனது சொந்த கடையைத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து அவர் தன் வாழ்வில் முன்னேறத் தொடங்கியுள்ளார். பின்னர் அவர் பழைய சென்ட்ரல் மார்க்கெட்டில் மற்றொரு கடையைத் தொடங்கினார். வியாபாரம் பெரியதாகத் தொடங்கவும் வேலைக்கு ஊழியர்களை நியமித்துள்ளார்.

2005 ஆம் ஆண்டில், WTC மால் கட்டுமானத்திற்காக பழைய மார்க்கெட் அழிக்கப்பட்டதால் அவர் இடமாற்றம் செய்ய வேண்டியிருந்தது. 2011 ம் ஆண்டு சமயத்தில், இப்போது புகழ்பெற்ற மதினத் சயீத் ஷாப்பிங் சென்டருக்கு தனது கடையை மாற்றினார், அங்கு அவர் டாப்ஸ்டர் ஜென்ட்ஸ் டெய்லரிங் மற்றும் டெக்ஸ்டைல்ஸைத் (Dabster Gents Tailoring and Textiles) திறந்தார். இது தற்பொழுது வரை செயல்பட்டு வருகிறது.

இதை பற்றி விவரிக்கையில், “நான் வெவ்வேறு கடைகளை நிர்வகித்தேன். பின்னர் நான் அவற்றை மூடிவிட்டேன். இப்போது நான் நான்கு ஊழியர்களுடன் இந்தக் கடையை நடத்தி வருகிறேன். எனக்கு இன்னும் ஈசா என்ற வாடிக்கையாளர் 1978 முதல் எனது கடைக்கு வருகிறார்.” என கூறியுள்ளார்

2014 ஆம் ஆண்டில், துபாயை தளமாகக் கொண்ட PingingU ஃபேஷன் மற்றும் லைஃப்ஸ்டைல் ​​இதழ் நடத்திய ஆன்லைன் சர்வேயில் பெற்ற பெரும்பாலான வாக்குகளின் அடிப்படையில் சிவராமன் ‘அமீரகத்தின் சிறந்த தையல்காரர்’ என்று பெயரிடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!