அமீரக செய்திகள்

UAE: கோடைகாலத்தில் வாகனங்களில் எரிபொருளை முழுவதுமாக நிரப்புவது ஆபத்து என பரவும் செய்தி..! – நிபுணர்கள் கூறுவது என்ன.?

ஐக்கிய அரபு அமீரகத்தில் கோடை வெப்பம் உச்சத்தை எட்டி வருவதால், ஹீட் ஸ்ட்ரோக் உள்ளிட்ட அபாயகரமான தாக்குதல்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், இந்த கடுமையான வெப்பத்தினால் டயர் வெடிப்பு போன்ற வாகனங்களுக்கு ஏற்படக் கூடிய ஆபத்துக்கள் பற்றியும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், கடுமையான வெயிலில் கொதிக்கும் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள், வாகனத்தின் பெட்ரோல் டேங்க்கை முழுவதுமாக நிரப்புவது மிகவும் ஆபத்தானது என்று சமூக ஊடகங்களில் சிலர் தெரிவித்துள்ளனர். அத்துடன் டேங்க்கில் உள்ள சூடான காற்று ஆவியாவதற்கு தினமும் ஒரு முறையாவது டேங்க்கை திறக்க வேண்டும் என்றும் தகவல்கள் பரப்பப்படுகின்றன.

இதுபோன்ற தகவல்கள் குறித்து துறை சார்ந்த வல்லுநர்களிடம் கேட்கையில், இதுபோன்ற அச்சுறுத்தும் எச்சரிக்கைகளுக்குப் பின்னால் எந்த உண்மையும் இல்லை என்றும், இவை பெரும்பாலும், கோடைகாலங்களில் சமூக ஊடகங்களில் பகிரப்படும் கட்டுக்கதைகள் என்றும் சாலை பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சாலை பாதுகாப்பு நிபுணர் ஒருவர் கூறுகையில், பொதுவாக வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் நிபுணர்கள் வாகனங்களை வடிவமைக்கும் போது, வெப்பம் மற்றும் குளிர் உட்பட அனைத்து காலநிலை நிலைகளிலும் செயல்படும் வகையில் கார்கள் மற்றும் பெட்ரோல் டேங்க் போன்ற அனைத்து பாகங்களையும் உருவாக்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, ஒரு பெட்ரோல் டேங்க்கில் வெளிப்புற வெப்பநிலை ஆபத்தை ஏற்படுத்த வேண்டுமெனில், வெப்பம் 250°C க்கும் அதிகமாக இருக்க வேண்டும். அதாவது தண்ணீரின் கொதிநிலையான 100 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை விட 2.5 மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்று கார் வடிவமைப்பாளர்கள் தெரிவிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இவ்வாறு உருவாக்கப்பட்ட வாகனங்களை வெப்பம் மற்றும் குளிர் போன்ற தீவிர வானிலையில் சோதிக்கும்போது, பெட்ரோலில் இருந்து வரும் நீராவி போன்ற எரிபொருளின் எந்தவொரு விரிவாக்கத்தையும் சமாளிக்கும் விதமாகவே அதன் எரிபொருள் அமைப்புகள் வடிவமைக்கப்பட்டிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், அமீரகத்தில் கடுமையான கோடைகாலங்களில் போதுமான பெட்ரோல் இல்லாமல் திடீரென நின்று விடும் காரில் சிக்கித் தவிப்பது ஆபத்தானது என்பதால், எப்போதும் வாகனத்தில் போதுமான பெட்ரோல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

ஆகவே, வாகன ஓட்டிகள் பெட்ரோல் முனையில் (fuel nozzle) உள்ள சென்சார் மூலம் கண்டறியப்படும் தானியங்கி கட்-ஆஃப் வரை தங்கள் பெட்ரோல் டேங்கை நிரப்பலாம்.  குறிப்பாக, மோட்டார் சைக்கிள்களில் டேங்க்கை நிரப்பும் போது, குறைந்த ஆவியாதல் காரணமாக பெட்ரோலின் மைலேஜ் மறைமுகமாக அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!