அமீரக செய்திகள்

அமீரகத்தில் 50 ஆண்டுகளை கடந்த லுலு குழுமத் தலைவர் யூசுப் அலி..!! 50 குழந்தைகளுக்கு இலவச இதய அறுவை சிகிச்சை..!!

ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த மிகப்பெரிய இந்திய தொழிலதிபரான யூசுப் அலி எம். ஏ அவர்கள் அமீரகத்தில் சுமார் ஐம்பது வருடங்களாக ஆற்றி வரும் பங்களிப்பை நினைவுகூரும் வகையில், இதய நோய்களுடன் பிறந்த பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த 50 குழந்தைகளுக்கு இலவச உயிர் காக்கும் இதய அறுவை சிகிச்சைகள் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, உலகளவில் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான யூசுபலி, முதன்முதலாக டிசம்பர் 31, 1973 அன்று துபாயின் ரஷித் துறைமுகத்தை வந்தடைந்தார். அவர் ஒரு தாழ்மையான தொடக்கத்திலிருந்து, பெரிய வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கி மிகப்பெரிய தொழிலதிபராக உயர்ந்துள்ளார்.

அந்த வகையில், லுலு குரூப் இன்டர்நேஷனல் தலைவரான யூசுப் அலியின் வாழ்க்கைக்கு மரியாதை செலுத்தும் வகையில், இதய அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளும் தொண்டு முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அவரது மருமகனும் நாட்டின் சுகாதாரத் தலைவருமான டாக்டர் ஷம்ஷீர் வயலில் புத்தாண்டு தினமான திங்கட்கிழமையன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அத்துடன் யூசுப் அலி ஒரு முன்மாதிரியான நபராக நிற்பதாகவும், யூசுபலியின் மனித குலத்திற்கான ஆழ்ந்த இரக்க உணர்வு மற்றும் மரியாதை ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டு, டாக்டர் ஷம்ஷீர் இந்த முயற்சியை முன்னெடுப்பதில் முன்னணியில் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புர்ஜீல் ஹோல்டிங்ஸ் நிறுவனர் மற்றும் தலைவரான டாக்டர் ஷம்ஷீர், யூசுப் அலியின் மூத்த மகளும் VPS ஹெல்த்கேர் நிறுவனத்தின் துணைத் தலைவருமான டாக்டர் ஷபீனா யூசுபலியின் கணவராவார்.

பொதுவாக, பிறப்பிலேயே இதய நோய் உள்ள நபர்களுக்கு தேவைப்படும் அறுவை சிகிச்சைக்கு அதிக பணம் தேவைப்படும் என்பதால், இது பல பெற்றோருக்கு நிதி ரீதியாக சவாலாக உள்ளது. பிறவி இதய நோய்களைக் கொண்ட குழந்தைகளை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படும் 50 இதய அறுவை சிகிச்சைகள், ஐக்கிய அரபு அமீரகம், ஓமான் மற்றும் இந்தியாவில் உள்ள அவரது மருத்துவமனைகளில் உள்ள Burjeel Holdings கீழ் இருக்கும் சிறப்பு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முன்முயற்சியின் பின்னணியில் உள்ள காரணத்தை விளக்கிய டாக்டர் ஷம்ஷீர், யூசுப் அலியை கௌரவிப்பதில், குழந்தைகளை ஆதரிப்பதற்காக நம்மை அர்ப்பணித்து ஒரு தனித்துவமான கொண்டாட்டத்தைக் குறிக்க முயற்சி செய்வதாகவும், 50 இலவச அறுவை சிகிச்சைகள் மூலம், வரம்புகளுக்கு அப்பால் கனவு காணவும் சவால்களை சமாளிக்கவும் குழந்தைகளை ஊக்குவிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

VPS ஹெல்த்கேர் மூலம் இந்தியாவிற்கு அவரது தொண்டு முயற்சிகளை விரிவுபடுத்தும் டாக்டர் ஷம்ஷீர், இந்த இதயப்பூர்வமான முயற்சியின் உலகளாவிய அணுகல் மற்றும் தாக்கம் குறித்து நம்பிக்கையுடன் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!