கொரோனா வைரஸ் : அபுதாபியில் திருமண நிகழ்ச்சிகளுக்கு தடை…!!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் தடுப்பு நடவடிக்கையாக, அனைத்து திருமண உபசரிப்பு நிகழ்ச்சிகளும் ஞாயிற்றுக்கிழமை முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக அபுதாபியின் கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை (Department of Culture and Tourism in Abu Dhabi) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
இது வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா வைரஸிற்கான (COVID-19) முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஏற்ப, அமீரகத்தில் உள்ள அனைத்து திருமண விருந்துகளையும் தடை செய்யுமாறு அறிவுறுத்துகிறது.” என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இந்தத்தடை வரும் மார்ச் 15 ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் இந்த மாதம் இறுதி வரை தடை நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கொரோனா வைரஸிற்கான தடுப்பு நடவடிக்கையாக அபுதாபியில் ஹோட்டல்கள் மற்றும் கஃபேக்களில் வழங்கப்படும் ஷிஷாவிற்கு (Shisha) தடை விதிக்கப்பட்டது. மேலும், அபுதாபியில் உள்ள பெரும்பாலான மால்களில் தெர்மல் ஸ்கேனர் நிறுவப்பட்டு மால்களுக்கு வரும் அனைவருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா வைரஸ் இருக்கிறதா என உறுதி செய்ய சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்பொழுது திருமண விருந்துகளுக்கும் அபுதாபி அரசாங்கம் தடை விதித்துள்ளது.