கொரோனா வைரஸால் அமீரகத்தின் இயல்பு நிலையில் ஏற்பட்ட மாற்றங்கள்!!
கொரோனா வைரஸ் பல நாடுகளை பாதித்து வரும் நிலையில், வளைகுடா நாடுகளிலும் வைரஸின் தாக்கம் மிக வேகமாக உயர்ந்துள்ளது. இது வரையிலும் உலகம் முழுவதும் 3000 பேர் வைரஸால் இறந்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் இது வரை 21 நபர்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மேலும் வைரஸ் பரவாமல் தடுக்க அமீரகம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பள்ளிகள்
கொரோனா வைரஸின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து அமீரகத்தில் அனைத்து நர்சரி பள்ளிகளுக்கும் இந்த மாதம் ஒன்றாம் தேதியில் இருந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற அனைத்து பள்ளிகளும் கல்வி சுற்றுலா செல்வதையும், நிறைய மாணவர்கள் ஒன்று கூடும் கூட்டங்களையும் செயல்படுத்த வேண்டாம் என அமீரக அரசு அறிவுறுத்தியுள்ளது.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeவிளையாட்டுகள்
பொதுமக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எடுக்கப்பட்ட உள்ளூர் மற்றும் சர்வதேச நடவடிக்கைகளுக்கு ஏற்ப, அமீரக அரசால் நடத்தப்படும் Gov games 2020 ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று துபாய் மீடியா அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை ட்வீட் செய்தது. மார்ச் 18-21 தேதிகளில் துபாயின் கைட் கடற்கரையில் (Kite beach) நடைபெறவிருந்த இந்த நிகழ்வில் 170 க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பதை உறுதிப்படுத்தியிருந்தன. தற்பொழுது ஒத்திவைக்கப்பட்ட போட்டி எப்போது நடைபெறும் என்று மீடியா அலுவலகம் சொல்லவில்லை.
இதற்கு முன்பாக, கொரோனா வைரஸ் தொற்று இருவருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து துபாய் சைக்கிள் டூர் 2020 இறுதிக்கட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வங்கிகள்
வங்கிகளில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் மாதாந்திர வங்கிக்கடனை அடைப்பதில் தற்காலிக ஒத்திவைப்பு செய்யவும், அவர்களுக்குண்டான கட்டணங்களையும் கமிஷன்களையும் குறைக்குமாறு அமீரகத்தில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.
துபாய் எக்ஸ்போ 2020
வரும் அக்டோபர் மாதம் துபாய் எக்ஸ்போ 2020 துவங்க இருப்பதால், எக்ஸ்போ 2020 ஒருங்கிணைப்பாளர்கள் இந்த கொரோனா வைரஸின் தாக்கத்தை உன்னிப்பாக கவனித்துக்கொண்டு வருகிறார்கள். மில்லியன் கணக்கில் பல நாடுகளில் இருந்து வரும் பார்வையாளர்கள் ஒன்று கூடும் இடமாக எக்ஸ்போ உள்ளதால், அதற்குள் உலகளாவிய முயற்சிகள் வெற்றி பெற்று கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என நம்புவதாக எக்ஸ்போவில் செய்தித்தொடர்பாளர் கூறியிருக்கிறார்.
மேலும் அவர் எக்ஸ்போவிற்கு வருகை தரும் அனைவரின் உடல் நலமும், பாதுகாப்பும் தங்களுக்கு முக்கியமானது என்றும், தற்பொழுது அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகத்தின் வழிகாட்டல் படி, பணியாற்றி வருவதாகவும் கூறியுள்ளார்.
விமான சேவை
கொரோனா வைரஸின் பாதிப்பையொட்டி அமீரகம், வைரஸால் அதிகளவில் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு விமான சேவையை தற்காலிகமாக தடை செய்துள்ளது. இந்த நாடுகளில் ஈரான், ஹாங்காங், சீனா போன்ற நாடுகள் அடங்கும். இதில் ஈரானிற்கான விமான சேவை முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஹாங்காங் மற்றும் சீனாவிற்கு குறிப்பிட்ட சில இடங்களுக்கு மட்டுமே சில விமானங்கள் செல்கின்றன. மேலும் ஈரானிற்கு செல்லும் ஃபெர்ரி (Ferry) சேவையையும் அமீரகம் நிறுத்தியுள்ளது. பஹ்ரைன் நாடானது அந்நாட்டிற்கும் அமீரகத்திற்கும் இடையிலான விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
மேலும் எமிரேட்ஸ் ஏர் லைன் நிறுவனமானது, கொரோனா வைரஸின் அதிகரிப்பினால் விமான சேவை குறைந்ததைத் தொடர்ந்து, ஊழியர்கள் தங்களுக்கு தேவையெனில் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என அறிவிப்பு செய்துள்ளது. விடுமுறை எடுத்துக் கொள்வதும் வேலைக்கு வருவதும், ஊழியர்களின் விருப்பதை பொறுத்தது என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்
வைரஸின் பாதிப்பையொட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க இருக்கும் மிகப்பெரிய நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுகின்றன. இருந்தபோதிலும், அபுதாபியில் நடக்க இருக்கும், அல்ட்ரா மியூசிக் ஃபெஸ்டிவல் (Ultra Music Festival) மற்றும் துபாயில் ஒவ்வொரு வருடமும் நடக்கும், மிடில் ஈஸ்ட் பிலிம் மற்றும் காமிக் கான் (Middle East Film and Comic Con) ஆகியவை திட்டமிட்டபடி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், UMF-க்கு ஒரு ரன்-அப் நிகழ்வான டி.ஜே. மேக் மாநாடு (DJ Mag Middleeast Conference) அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டு அபுதாபி கிரியேட்டிவ் ரீடர் விழாவும் (Abudhabi Creative Reader Festival) நிறுத்தப்பட்டுள்ளது.
மாநாடு நடக்க இருந்த யாஸ் தீவின் ஹோட்டலானது அந்த ஹோட்டலில் இருந்த இரு நபர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது தெரிந்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் அங்கு நிகழ்ச்சி நடைபெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்நிகழ்ச்சிக்காக ஏற்கெனவே எடுக்கப்பட்ட டிக்கெட்களுக்கு உண்டான தொகையை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அதிகளவில் மக்கள் கூடும் இடங்களான குளோபல் வில்லேஜ் மற்றும் கோகோ கோலா அரங்கம் ஆகியவை நிறுத்தப்படுவதற்கான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.