புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய துபாய் இளவரசர்!!
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 7 வயது இந்திய சிறுவனின் விருப்பத்தை நிறைவேற்றினார் துபாயின் மகுட இளவரசரும் துபாய் நிர்வாக சபையின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம்.
துபாயில் உள்ள ஹைதராபாத்தைச் சேர்ந்த அப்துல்லா உசேன் என்ற சிறுவனை ஷேக் ஹம்தான் வெள்ளிக்கிழமை சந்தித்தார்.
தனது ரோல் மாடலாக இருக்கும் ஷேக் ஹம்தானை சந்திக்க விரும்புவதாக சமூக ஊடகங்களில் அப்துல்லா தனது விருப்பத்தை தெரிவித்தார். “ஷேக் ஹம்தான் மிகவும் அன்பானவர், துணிச்சலானவர். மிகவும் கனிவானவர். நான் அவரைப் பார்க்க விரும்புகிறேன்” என்று ஒரு வீடியோவில் அப்துல்லா கூறினார். “நான் உங்கள் ரசிகர் ஷேக் ஹம்தான். நான் உங்களை சந்திக்க விரும்புகிறேன். நான் உங்களை நேசிக்கிறேன். ” என்று எழுதியிருந்த போர்டையும் கையில் பிடித்திருந்தார்.
இதனை அறிந்த இளவரசர் ஷேக் ஹம்தான் வெள்ளிக்கிழமை, தனது தம்பியுடன் சென்று சிறுவனை சந்தித்தார்.
அப்துல்லாவை கட்டிப்பிடிப்பதைப் போன்ற ஒரு படத்தை ஷேக் ஹம்தான் வெளியிட்டு, “இந்த தைரியமான சிறுவனை இன்று நான் சந்தித்தேன்” என்று கூறியிருந்தார்.
7 வயதான இந்திய சிறுவன் ஷேக் ஹம்தானை சந்தித்ததை பற்றி இந்திய துணைத் தூதர் விபுல் மகிழ்ச்சி தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “துபாய் மகுட இளவரசர் ஒரு சிறிய ரசிகரின் விருப்பத்தை நிறைவேற்றுவது உண்மையிலேயே ஒரு பெரிய மற்றும் கருணையுள்ள செயல். இது இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையேயான மக்கள் தொடர்பில் வலுவான இருதரப்பு உறவுகளையும் குறிக்கிறது.” என்று கூறினார்.