எக்ஸ்போ 2020 : AR ரஹ்மானின் ஆல் வுமன் ஆர்கெஸ்ட்ரா
இந்தியாவின் மிகச்சிறந்த இசையமைப்பாளரும் கோல்டன் க்ளோப், ஆஸ்கார் போன்ற பல விருதுகளை வென்ற இசைக்கலைஞரும் ஆன ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் எக்ஸ்போ 2020 துபாயில், அனைத்து பெண்கள் இசைக்குழு கச்சேரியை (All-women Orchestra) நிகழ்த்த முடிவு செய்துள்ளார். அதனையொட்டி, இசைக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள ரெகார்டிங் ஸ்டுடியோவையும் திறந்து வைக்க உள்ளார்.
எக்ஸ்போ என்றால் என்ன?
எக்ஸ்போ என்பது உலக அளவில் நடைபெறும் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய அளவிலான சர்வதேச நிகழ்வுகளில் ஒன்றாகும். இது ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு முறை நடைபெற்று வருகின்றது. சமீபத்திய காலங்களில் இந்த நிகழ்ச்சியானது 6 மாதங்களுக்கும் மேலாக நடத்தப்படுகின்றது.
இந்த நிகழ்வானது கலாச்சாரம், தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் கற்றல் ஆகியவற்றில் புதுமைகளை வெளிப்படுத்தவும், அவற்றை உலக அரங்கில் பகிர்ந்து கொள்ளவும் பல நாடுகளில் நடத்தப்பட்டு வருகின்றது.
முதன் முதலில் வேர்ல்ட் எக்ஸ்போ 1853 ம் ஆண்டு லண்டனில் நடைபெற்றது. இறுதியாக, 2015 ல் இத்தாலியில் உள்ள மிலனில் நடைபெற்றது. தற்பொழுது ஐந்து ஆண்டுகளுக்குப்பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் நடக்க உள்ளது.
எக்ஸ்போ 2020
துபாயில் திட்டமிடப்பட்டிருக்கும் எக்ஸ்போவில் 25 மில்லியன் அளவில் பார்வையாளர்கள் வருவார்கள் என்றும் அவர்களில் 75 % வெளிநாட்டில் இருந்து வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்குண்டான பல்வேறு முயற்சிகள் எடுத்து வரும் நிலையில், தற்பொழுது அந்நிகழ்வில் ஆஸ்கார் நாயகன் AR ரஹ்மான் அனைத்து மகளிர் இசைக்குழுக் கச்சேரி (All-women Orchestra), ஒன்றை நடத்தவுள்ளார். அதற்காக கலைக்கான ஸ்டூடியோ (Firdaus Studio) ஒன்றினை ரஹ்மான் திறக்கவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
பிரபல இசையமைப்பாளர் எக்ஸ்போ துபாயில் ஒரு ரெக்கார்டிங் ஸ்டுடியோவை அமைத்து வருகிறார். இதற்குண்டான நிலத்தை துபாய் அரசாங்கம் வழங்கியுள்ளது. இது ஏப்ரல் 2021 இல் வேர்ல்ட் எக்ஸ்போ முடிந்த பின்னும் ஒரு நிரந்தர அங்கமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
நேற்று செய்தியாளர்களிடம் இதனை அறிவித்த ரஹ்மான் மேலும் “இது ஒரு சிறந்த வாய்ப்பு என்றும் ஒற்றுமை, முன்னேற்றம், சகவாழ்வு மற்றும் மனிதகுலம் விரும்பும் எல்லாவற்றையும் குறிக்கும் இந்த நாட்டிலிருந்து இது ஒரு சிறந்த அறிக்கை” என்றும்
பிப்ரவரி 27 அன்று ஒரு நேர்காணலில் கூறினார். மேலும் பெண்களைக் கொண்டு மட்டும் ஏன் நடத்தப்படுகின்றது என்று செய்தியாளர் ஒருவர் கேட்டபோது, ரஹ்மான் அவர்கள் உலக அளவில் பெண்களைக் கொண்ட இசைக்குழுக் கச்சேரி ஒன்றை நடத்த ஆர்வமாக இருப்பதாகக் கூறியுள்ளார்.
அனைத்து மகளிர் இசைக்குழுக் கச்சேரிக்கான ஆடிசன், பல தரப்பட்ட பின்னணியில் மற்றும் வெவ்வேறு வயதுடைய பெண்களின் திறமையைக் கண்டறிந்து, அவர்களை ரஹ்மானின் வழிகாட்டலுடன் இசைக்கச்சேரியில் கலந்து கொள்ள ஒரு அரிய வாய்ப்பாக அமையும். மொத்தமாக 100 ஆடிசன்கள் நடத்தப்பட்டு அதில் 50 முதல் 100 உறுப்பினர்களைக் கொண்ட ஃபிர்தவ்ஸ் மகளிர் இசைக்குழுக்கச்சேரிக்கான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
ஆடிசனில் கலந்து கொள்வது எப்படி?
ரஹ்மானால் வழிநடத்தப்படும் இந்த கச்சேரிக்கு மார்ச் 23 வரை விண்ணப்பிக்கலாம். இசைக்கலைஞர்கள் தங்களுடைய வீடியோ மற்றும் ரிஜிஸ்ட்ரேஷனை கீழ்க்கண்ட லிங்கில் அனுப்பி வைக்கலாம்.
https://www.expo2020dubai.com/en/discover/attractions/firdaus-orchestra
ஏ.ஆர்.ரஹ்மானின் ஃபிர்தவுஸ் ஸ்டுடியோ மற்றும் இசைக்குழு ஆகிய இரண்டும் துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தை இசை உருவாக்கம் மற்றும் இசைப்பதிவு செய்வதற்கான சர்வதேச மையமாக மாற்றியமைக்கப்படும் திட்டங்களின் ஒரு பகுதியாகும். இங்கு பல வெளிநாட்டு விருந்தினர்களும் பல்வேறு இசைக்குழுக்களும் இந்த ஸ்டுடியோவை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் அனைத்து தேசிய இன மக்களும் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கும் ஒன்றாக வாழ்வதற்கும் ஒரு கலாச்சார மையமாக இது விளங்கும் என்பதில் சந்தேகமில்லை.