கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த 10 மில்லியன் திர்ஹமை நன்கொடையாக அளித்த அமீரக தொழிலதிபர்..!!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோன வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான நாட்டின் பல்வேறு முயற்சிகளுக்கு ஐக்கிய அரபு அமீரக வணிக சமூகம் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. நாட்டின் தனியார் மற்றும் பொதுத்துறை அளிக்கும் ஆதரவானது, உலகளாவிய தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளுக்கு உதவுவதில் தொழிலதிபர்களின் உறுதிப்பாட்டை நிரூபிக்கின்றன.
முன்னதாக, அமீரகத்தில் இருக்கும் அல் ஹப்தூர் குழுமத்தின் (Al Habtoor Group-AHG) நிறுவனத் தலைவரான கலஃப் அல் ஹப்தூர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட அரசின் சுகாதார அதிகாரிகளுக்கு 50 ஆம்புலன்ஸ்களை நன்கொடையாக அளித்துள்ளார். அத்துடன் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளைத் தனிமைப்படுத்தும் நோக்கத்திற்காக, AHG தலைவர் 100 க்கும் மேற்பட்ட அறைகளைக் கொண்ட ஒரு முழுமையான கட்டடத்தை DHA க்கு ஒதுக்கியுள்ளார்.
இந்நிலையில், அமீரகத்தில் இருக்கும் அல் ஸரூனி குழுமத்தின் (Al Zarooni Group) தலைவரான அமீரக தொழிலதிபர் அப்துல் ரஹீம் அல் ஸரூனி, தற்போதைய முக்கிய காலகட்டத்தில் அனைத்து சுகாதார நிலையங்கள் மற்றும் கிளினிக்குகளுக்கு போதுமான மருத்துவ பொருட்கள் இருப்பதை உறுதி செய்வதற்காக 10 மில்லியன் திர்ஹம் நன்கொடை அளிப்பதாக வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.
மேலும், வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள் பங்களிப்பு செய்வதன் முக்கியத்துவத்தை அல் ஸரூனி வலியுறுத்தியுள்ளார். நாட்டின் பாதுகாப்பு மற்றும் மகிழ்ச்சிக்கு நாடு ஒரு முன்மாதிரியாக இருப்பதை உறுதி செய்வதற்காக அனைத்து மக்களும் ஒன்றிணைந்து பங்காற்றுவது அவர்களின் தேசிய கடமை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் கொரோனா வைரசிற்கு எதிரான அனைத்து முயற்சிகளுக்கும் அத்துடன் அதன் சமூகத்தின் பங்களிப்புகளுக்கும் அல் ஸரூனி பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP), துபாய் சுகாதார ஆணையம் (DHA) மற்றும் கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும் பல்வேறு பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகளையும் அவர் பாராட்டினார். சமூக உறுப்பினர்களின் தனிப்பட்ட முயற்சிகளும் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த முக்கியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இது பற்றி அவர் கூறுகையில், “ஐக்கிய அரபு அமீரகம் உலகின் சிறந்த மருத்துவ திறன்களையும் உள்கட்டமைப்பையும் கொண்டுள்ளது. இது பொது சுகாதாரத்தை திறம்பட பாதுகாக்க உதவும். இன்று, நாம் சோதிக்கப்படுகிறோம், ஐக்கிய அரபு அமீரகம் தனது மக்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் எந்தவொரு விஷயத்திலிருந்தும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் குழுவாக செயல்படும் என்பதை உலகுக்கு நிரூபிக்க வேண்டும்,” என்று கூறினார். தொடர்ந்து, அல் ஸரூனி அவர்கள் மக்கள் பொதுக்கூட்டங்களைத் தவிர்க்கவும், முடிந்தவரை வீட்டில் தங்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
அமீரகம் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சின் பரிந்துரைகள் மற்றும் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களின் ஒரு பகுதியாக அமீரகத்தின் அனைத்து விமானநிலையங்கள் மற்றும் கடல் துறைமுகங்களில் மருத்துவக் குழுக்கள் நியமிக்கப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.