அமீரக செய்திகள்

கொரோனா தாக்கத்தால் ஊழியர்களின் சம்பளத்தைக் குறைக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கும் புதிய ஆணை..!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸிற்கான தடுப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட தனியார் துறை வணிகநிறுவனங்கள் ஊழியர்களுடனான ஒப்பந்த உறவை மறுசீரமைக்க மனிதவள மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகம் (Human Resources and Emiratisation) அனுமதித்துள்ளது. மனிதவள மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சர் நாசர் தானி அல் ஹம்லி அவர்கள் ஒப்புதல் அளித்த முடிவின் கீழ், கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள வணிகநிறுவனங்கள், அவற்றின் வணிக கட்டமைப்பை மறுசீரமைப்பு செய்ய பின்வரும் வழிமுறைகளை செயல்படுத்தலாம் என தெரிவித்துள்ளது. அவை

  • தொலைநிலை பணி முறையை (remote work system) செயல்படுத்துதல்
  • ஊழியர்களுக்கு ஊதிய விடுப்பு வழங்குதல்
  • ஊழியர்களுக்கு ஊதியம் இல்லாத விடுப்பு வழங்குதல்
  • சம்பளத்தை தற்காலிகமாகக் குறைத்தல்
  • சம்பளத்தை நிரந்தரமாக குறைத்தல்

 

கூடுதல் ஊழியர்களை கையாள்வது

மார்ச் 26 முதல் நடைமுறைக்கு வந்த முடிவின் படி, கொரோனா வைரஸின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட வணிக நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான அளவை விட அதிகமான ஊழியர்களைக் கொண்டிருந்தால் கூடுதல் ஊழியர்களை விர்ச்சுவல் ஜாப் மார்க்கெட்டில் (virtual job market) கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். இதனால் அவர்கள் மற்ற வணிக நிறுவனங்களால் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள்.

இதற்கிடையில், இந்த வணிக நிறுவனங்கள் இந்த ஊழியர்களுக்கு நாட்டில் இருக்கும் வரை அல்லது பிற வணிக நிறுவனங்களால் பணியமர்த்தப்படும் வரை சம்பளத்தைத் தவிர்த்து தங்குமிடம் (accommodation) மற்றும் பிற நிலுவைத் தொகையை (other dues) தொடர்ந்து வழங்க வேண்டும்.

புதிய பணியமர்த்தல்

நடவடிக்கையின் 4 வது பிரிவின் கீழ், வெளிநாட்டவர்கள் அமீரகத்திற்கு வருவது இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள வேளையில், வணிக நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஊழியர்களை பின்வரும் முறையில் தேர்ந்தெடுக்கலாம்.

– விர்ச்சுவல் ஜாப் மார்க்கெட்டில் (virtual job market) வணிக நிறுவனங்களுக்குத் தேவையான காலியிடங்களை (vacancy) பதிவிட்டு, அதில் கிடைக்கக்கூடிய தகவல்களின் அடிப்படையில், தங்களுக்குத் தேவையான ஊழியர்களை தேர்வு செய்யலாம்.

– மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியருக்கான பணி அனுமதிப்பத்திரத்தை (work permit) ஆன்லைன் சேவைகளின் மூலம் அமைச்சகத்திடம் இருந்து பெற்று, தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியர்களை வேலைக்கு நியமிக்கலாம்.

சம்பளத்தை தற்காலிகமாகக் குறைத்தல்

பிரிவு 5 ன் படி, குறிப்பிட்ட காலகட்டத்திற்கு ஒரு ஊழியரின் சம்பளத்தை தற்காலிகமாகக் குறைக்க விரும்பும் வணிக நிறுவனங்கள் கூடுதலான இணைப்புப்பத்திரத்தில் (additional annexure) கையெழுத்திட்டு செயல்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த தற்காலிக இணைப்பானது (annexure) ஒப்புக்கொள்ளப்பட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும்.

சம்பளத்தை நிரந்தரமாக குறைத்தல்

பிரிவு 6 இன் கீழ், ஒரு ஊழியரின் சம்பளத்தை நிரந்தரமாக குறைக்க விரும்பும் வணிக நிறுவனங்கள், முதலில் ‘வேலை ஒப்பந்தத்தின் தரவை மாற்றுவதற்கு’ அமைச்சின் ஒப்புதலைப் பெற வேண்டும். அதன் பின்னரே இந்த முடிவை செயல்படுத்த முடியும்.

வேலை தேடுபவர்கள்

பிரிவு 7 இன் படி, நாட்டில் வேலை தேடும் ஊழியர்கள் விர்ச்சுவல் ஜாப் மார்க்கெட்டில் (virtual job market) பதிவு செய்து, அவர்களின் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் அதில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களால் பட்டியலிடப்பட்ட வேலைகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த புதிய தீர்மானத்தின் விதிகள் ஊழியர்களுக்கு மேற்கூறிய கொரோனா வைரஸிற்கான முன்னெச்சரிக்கை நடைமுறைகளைப் பின்பற்றும் காலத்திற்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!