ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி “StayHome” விழிப்புணர்வை மேற்கொள்ளும் துபாய் காவல்துறை..!!! விதிகளை மீறுபவர்கள் மீது கடும் எச்சரிக்கை..!!!
ஐக்கிய அரசு அமீரகத்தில் உள்ள துபாய் காவல்துறை கொரோனா வைரஸிற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சமீப காலமாக பொதுமக்கள் கூட்டமாக ஒன்றுகூடுவதை தவிர்க்கவும், “Stay Home” என்பதை வலியுறுத்தி துபாய் முழுவதும் பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியே வரவும் தடை விதித்துள்ளது. மேலும், அத்தியாவசிய தேவைக்காக மட்டும் துபாய் காவல்துறை அறிவித்த இணையதளத்தில் அனுமதி பெற்றுக்கொண்ட பின்னரே வெளியே வர வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
கூடுதலாக, வெளியில் நடமாடும் நபர்களை கண்டறிந்து அவர்கள் வெளியே வர அனுமதி பெற்றுள்ளனரா என்பதை சரிபார்க்கவும் துபாய் சாலைகளில் உள்ள ரேடார்கள் AI (Artificial Intelligence) உடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், கொரோனா வைரஸிற்கான தடுப்பு நடவடிக்கைகளை மீறுபவர்களை மக்கள் பரவலாகப் பேசக்கூடிய மொழிகளிலும், தொழில்நுட்பங்களை பயன்படுத்தியும் துபாய் காவல்துறை எச்சரிக்கை செய்து வருகிறது.
இந்நிலையில், இது போன்ற பல புதுமையான நடவடிக்கைகளை தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வரும் துபாய் காவல்துறை தற்பொழுது ஹெலிகாப்டர் மூலமாக பொதுமக்கள் வீட்டினுள்ளேயே இருக்குமாறு விழிப்புணர்வு செய்தியை துபாயில் இருக்கும் மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. அவ்வாறு ரோந்து ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி இந்தி மொழியில் விழிப்புணர்வு செய்திகளை கூறி வந்த துபாய் காவல்துறை, துபாயின் ஒரு குடியிருப்புப்பகுதியில் உள்ள வீட்டின் மொட்டை மாடியில் சில நபர்கள் கூட்டமாக இருப்பதை கண்டறிந்து அந்த மொட்டை மாடிக்கு அருகில் சென்று எச்சரிக்கை செய்யவும் அங்கு கூட்டமாகக் கூடியிருந்த நபர்கள் கலைந்துள்ளனர். இதனை பதிவு செய்து வீடியோ ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க உதவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுக்கூட்டங்களைத் தவிர்த்து இடத்தை காலி செய்யுமாறு கூறப்பட்ட ஆடியோ செய்தி அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.
இவ்வாறு தொடர்ந்து காவல்துறை எச்சரிக்கை செய்வதின் நோக்கம் அனைத்து தனிநபர்களின் பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவது, தனிநபர்கள் சமூக தூரத்தை (social distance) கடைப்பிடிப்பதை உறுதி செய்வது மற்றும் நோய் பரவாமல் தடுப்பதற்காக ஒன்றுகூடுவதைத் தவிர்ப்பது போன்ற காரணங்களுக்காக என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் அறிவித்த “Stay Home” போன்ற கொரோனாவிற்கு எதிரான நடவடிக்கைகளை பின்பற்றாது விதி மீறுபவர்களை துபாய் காவல்துறை கடும் எச்சரிக்கை செய்துள்ளது. அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. காவல்துறை ஏற்கெனவே வெளியிட்ட முந்தைய அறிக்கையின்படி, கொரோனாவிற்காக மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாமல் மீறுபவர்களை காவல்துறை கைது செய்வதுடன், அவர்களின் பெயர் மற்றும் புகைப்படத்தை ஊடகங்களில் வெளியிடும் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இவ்வாறு கைது செய்யப்படுபவர்களுக்கு அபராதம் மற்றும் சிறைதண்டனை அளிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.