குவைத்திலிருந்து பொது மன்னிப்பில் இந்தியா செல்லும் பணி தொடக்கம்.. 290 பேரை ஏற்றி சென்ற முதல் விமானம்.. 6000 பேர் இந்தியா செல்ல பதிவு..!!

குவைத் நாட்டில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை பொது மன்னிப்பின் அடிப்படையில் தாய் நாட்டிற்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கை தொடங்கப்பட்டு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் பல நாட்டவர்களும் பொது மன்னிப்பு வழங்கி அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தற்பொழுது, குவைத்தில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்களை தாய் நாட்டிற்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையின் முதல் கட்டமாக செவ்வாய்க்கிழமை இன்று (மே 26,2020) 290 இந்தியர்கள், இந்தியாவிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குவைத் நாட்டின் செய்தி நிறுவனம் அல் ராய் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இந்த பொது மன்னிப்பின் மூலம் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கை குறைந்தது 10 நாட்கள் நடைபெறும் எனவும் அதிகாரிகள் தெரிவித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக, பொது மன்னிப்பின் மூலம் இன்று (மே 26,2020) இந்தியா சென்றவர்கள், ஜசீரா ஏர்வேஸ் விமானத்தில் கொரோனாவிற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என சான்றிதழை பெற்ற பின்னரே தாய் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு குவைத் அரசாங்கம் பொது மன்னிப்பை வழங்கி அவர்கள் தங்களின் சொந்த நாட்டிற்கு செல்லலாம் என கூறியிருந்தது. அதில் இந்தியாவிலிருந்து குவைத் சென்று சட்டவிரோதமாக குடியேறிய 6000 இந்தியர்கள் தங்கள் சொந்த நாடு திரும்புவதற்காக பதிவு செய்திருந்தனர். அவர்கள் அனைவரும் நாடு திரும்புவதையொட்டி அரசாங்கத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குவைத் நாட்டில் மட்டும் ரெசிடென்ஸ் விதிகளை மீறிய வெளிநாட்டவர்களின் சுமார் 42,000 இந்தியர்கள் இருப்பதாக நம்பப்படுவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குவைத் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட இந்த பொதுமன்னிப்பானது சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு சட்ட ரீதியிலான தண்டனை கிடைப்பதில் இருந்து விலக்கு பெறுவதற்கும் மற்றும் அவர்கள் நாடு திரும்புவதற்கான விமான சேவைகளை பெறுவதற்கும் வழிவகை செய்கிறது.
வெளிநாட்டவர்களை சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பும் இந்த திட்டத்தின் கீழ், வரும் புதன்கிழமை முதல் ஒரு நாளைக்கு மூன்று விமானங்கள் என குறைந்தது 10 நாட்களுக்கு குவைத்திலிருந்து இந்தியர்களை சொந்த நாட்டிற்கு அனுப்பும் பணி நீடிக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கபட்டுள்ளது.
பல்வேறு நாடுகளை சேர்ந்த சட்டவிரோத செயல்களில் ஈடுப்பட்டிற்கும் 168,000 வெளிநாட்டவர்களில் கிட்டத்தட்ட 25,000 பேர் குவைத் மன்னிப்புத் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
source : Gulf News