விசா கேன்சல் செய்யப்பட்டு அமீரகத்தில் தங்கி இருப்பவர்களின் கவனத்திற்கு..!!
கொரோனா வைரசால் ஏற்பட்ட பாதிப்புகளை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் மார்ச் 1 ஆம் தேதிக்கு பிறகு காலாவதியான அனைத்து வகையான விசாக்களுக்கும் இந்த ஆண்டு இறுதி வரையிலும் விசாவினை நீட்டித்து அமீரக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
அதனை தொடர்ந்து, அமீரகத்தில் தங்கி இருக்கக்கூடிய, மார்ச் 1 ஆம் தேதிக்கு முன்னர் காலாவதியான விசாக்களை வைத்திருக்கும் குடியிருப்பாளர்கள் அனைவருக்கும் விசா காலாவதியானதற்காக செலுத்த வேண்டிய அபராத தொகையை தள்ளுபடி செய்வதாகவும், மேலும் விசா காலாவதியானவர்கள் அமீரகத்தை விட்டு வெளியேற மூன்று மாதங்கள் சலுகை காலமும் அமீரக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், அமீரகத்தில் பணிபுரிந்து கேன்சல் செய்யப்பட்ட விசாவினை வைத்திருப்பவர்கள், இந்த சலுகை திட்டத்திற்குள் சேர்க்கப்படவில்லை என துபாய் அமர் சென்டர் தெரிவித்ததாக அமீரகத்தின் ஆங்கில நாளிதழ் கல்ஃப் நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.
அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளதன் படி, விசா கேன்சல் செய்யப்பட்ட அனைவரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் அல்லது அமீரகத்தில் தொடர்ந்து தங்க நேரிடும் பட்சத்தில் தங்களின் விசா நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும் என அமர் சென்டர் கூறியதாக தெரிகிறது.
மேலும் விசா கேன்சல் செய்யப்பட்டு அமீரகத்தில் தொடர்ந்து தங்கி இருப்பவர்களுக்கு வசூலிக்கப்படும் அபராத தொகை சம்பந்தமான விபரங்களையும் அமர் சென்டர் கூறியுள்ளது. அதன் படி, அமீரகத்தில் ஓவர் ஸ்டேவில் தங்கி இருப்பவர்களுக்கு முதல் நாளிற்கு 221 திர்ஹம்ஸும், இரண்டாவது நாளிலிருந்து நாள் ஒன்றிற்கு 25 திர்ஹம்ஸும் அபராதமாக கணக்கிடப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
விசா தொடர்பான சந்தேகங்கள் மற்றும் விளக்கங்களுக்கு 800-5111 என்ற கால் சென்டர் எண்ணிலோ அல்லது [email protected] என்ற இணையதளத்தின் மூலமாகவோ அமர் சென்டரை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.