அமீரகத்தில் உயிரிழந்த 4 வயது இந்திய சிறுவன்..!! சிறப்பு விமானத்தில் இந்தியாவிற்கு கொண்டு செல்ல பெற்றோர்கள் தவிப்பு..!!

கேரளாவை சேர்ந்த நான்கு வயது வைஷ்ணவ் கிருஷ்ணாதாஸ் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததை தொடர்ந்து, சிறுவனின் இறுதி சடங்கை கேரளாவில் நடத்துவதற்கு சிறுவனின் பெற்றோர்கள் பெரிதும் போராடி வருகின்றனர். 15 நாட்களுக்கு முன்பு, இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக கண்டறியப்பட்ட சிறுவன் வைஷ்ணவ், கடந்த வெள்ளிக்கிழமை அல் அய்னில் உள்ள அல் தவாம் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளான். புற்றுநோய் கண்டறியப்படுவதற்கு முன்னர் வரையிலும், ஆரோக்கியமாகவே இருந்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், உயிரிழந்த சிறுவனின் பெற்றோர்கள் கிருஷ்ணதாஸ் மற்றும் அவரது மனைவி திவ்யா இருவரும், தங்கள் மகனின் இறுதிச்சடங்கை தங்களின் சொந்த ஊரான கேரளாவின் பாலக்காடு பகுதியில் நடத்துவதற்காக தன் மகனின் உடலை விமானம் மூலம் இந்தியாவிற்கு கொண்டு செல்வதற்குண்டான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து உயிரிழந்த சிறுவனின் மாமா சிவதாஸ் கூறியதாவது, “ஒரு சிறப்பு விமானத்தில் சிறுவனின் உடலை கேரளாவிற்கு திருப்பி அனுப்ப நாங்கள் எல்லா வழிகளிலும் முயற்சித்து வருகிறோம். வைஷ்ணவின் பெற்றோரும் மூத்த சகோதரியும் சிறுவனின் உடலுடன் சேர்ந்து இந்தியாவிற்கு செல்ல விரும்புகிறார்கள். வைஷ்ணவின் உடலை மத சடங்குகளுடன் சொந்த ஊரில் தகனம் செய்ய விரும்புகிறார்கள்” என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, “இரத்த புற்றுநோய் கண்டறியப்பட்டு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட கீமோதெரபி சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைக்கவில்லை. மகனின் திடீர் மரணத்தால் சிறுவனின் பெற்றோர் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இப்போது அவர்களின் ஒரே ஆசை தங்கள் சொந்த ஊரிற்கு சென்று முறைப்படி சிறுவனின் உடலுக்கு இறுதி காரியங்கள் செய்ய வேண்டும் என்பதே. ஆனால் இதுவரை அவர்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை” என்றும் கூறியுள்ளார்.
source : Khaleej Times