துபாய் : அலுவலங்களில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை 30 லிருந்து 50 சதவீதமாக உயர்வு..!!
கொரோனாவின் பாதிப்பையொட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் பல துறைகளில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை போலவே அலுவலகங்களில் பணிபுரிவதற்கும் பலவிதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன் படி, அலுவலகங்களில் பணிபுரிபவர்களின் மொத்த எண்ணிக்கையில் 30 சதவிகிதத்தினர் மட்டுமே அலுவலகங்களில் இருந்து வேலை செய்ய வேண்டும் என்றும் மற்ற ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஈத் விடுமுறை நாட்கள் முடிந்ததையொட்டி, துபாயில் பல்வேறு துறைகளில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் படிப்படியாக தளர்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
துபாய் பொருளாதார மேம்பாட்டு துறை வெளியிட்டுள்ள சமீபத்திய நெறிமுறைகளின் படி, நாளை முதல் துபாயில் உள்ள அலுவலகங்களில் வழக்கமான நேரப்படி காலை முதல் மாலை வரை பணிபுரியலாம் என்றும், அலுவலக ஊழியர்களின் மொத்த எண்ணிக்கையில் 50 சதவீதத்தினர் அலுவலகத்தில் இருந்தே வேலை செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமீரகத்தில் கொரோனாவின் தாக்கத்தையொட்டி, கடந்த மார்ச் 29 முதல், அமீரகத்தின் மனிதவள மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகம் (MoHRE) தனியார் நிறுவனங்களில் அதிகபட்சமாக 30 சதவீத ஊழியர்கள் மட்டுமே அலுவலகத்தில் இருந்து வேலை செய்ய அனுமதிக்கப்படும் என்று உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு துறைகள் மீண்டும் திறக்கப்படுவதை முன்னிட்டு, அலுவலக்கங்களில் இருந்து வேலை செய்யும் ஊழியர்களின் சதவீதமானது 30 லிருந்து 50 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அலுவலக கட்டிடங்களில் இருக்கும் அனைத்து லிஃப்ட்களிலும் சமூக இடைவெளியை குறிக்கும் வகையில், தரையில் அடையாள ஸ்டிக்கர் ஒட்டிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான சமூக இடைவெளியை கடைபிடித்தல், கருவிகள் மற்றும் உபகரணங்களை அடிக்கடி சுத்திகரிப்பு செய்தல் போன்றவற்றை அனைத்து அலுவலகங்களிலும் தவறாமல் மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.