‘வந்தே பாரத்’ திட்டத்தில் கத்தாரிலிருந்து தமிழகத்திற்கு செல்லும் முதல் சிறப்பு விமானம்..!!
வெளிநாடுகளில் சிக்கி இருக்கும் இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து வரும் இந்தியாவின் மிகப்பெரிய திட்டமான வந்தே பாரத் எனும் திருப்பி அனுப்பும் நடவடிக்கையானது கடந்த மே மாதம் 7 ம் தேதி முதல் தொடங்கப்பட்டு பல்வேறு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி, இரண்டு கட்டங்களாக நடைபெற்றுவந்த இந்த திருப்பி அனுப்பும் நடவடிக்கையில், தற்பொழுது கூடுதலாக சில விமான சேவைகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, வளைகுடா நாடுகளில் இருந்து தமிழகத்திற்கு விமானங்கள் இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து நான்கு விமானங்கள் தமிழகத்திற்கு செல்லவுள்ளன. அதே போல், மற்ற வளைகுடா நாடுகளான சவூதி அரேபியாவிலிருந்து தமிழகத்திற்கு மூன்று விமானங்களும் மற்றும் ஓமான் நாட்டிலிருந்து தமிழகத்திற்கு ஒரு விமானமும் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவிலிருந்து ஒரு விமானம் தமிழ்நாட்டிலுள்ள சென்னையை சென்றடைய உள்ளது. இதன்படி, ஜூன் 3 ம் தேதி தோஹா சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஒரு விமானம் அங்குள்ள தமிழர்களை ஏற்றிக்கொண்டு சென்னை சர்வதேச விமான நிலையம் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்நாட்டில் தமிழர்கள் பலர் வேலை செய்யும் பட்சத்தில் தமிழகத்திற்கு ஒரு விமானம் மட்டுமே இயக்கப்படுவது அங்கிருக்கும் தமிழர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
ஏற்கெனவே வந்தே பாரத் திட்டத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட நடவடிக்கையில் கத்தார் நாட்டிலிருந்து தமிழகத்திற்கு எந்த ஒரு விமானமும் இயக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், தற்பொழுது அறிவிக்கப்பட்ட விமானத்தில் பயணம் செய்வதற்கு முதியவர்கள், மருத்துவ பிரச்னை உடையவர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் போன்றவர்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Additional list of flights from Doha for the ongoing Phase-2 from 29 May to 4 June 2020: @MEAIndia , @DrSJaishankar @HardeepSPuri , #VandeBharatMission pic.twitter.com/XoC3D3lJJb
— India in Qatar (@IndEmbDoha) May 25, 2020