தனி விமானத்தில் ஊழியர்களை இந்தியாவிற்கு சொந்த செலவில் அனுப்பி வைக்கும் ஃபார்ச்சூன் ஹோட்டல் நிறுவனம்..!!
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிற நாடுகளில் உள்ள நிறுவனங்கள் இந்தியாவிற்கு செல்ல முடியாமல் சிக்கி தவிக்கும் தங்களின் ஊழியர்களை சார்ட்டர் விமானங்கள் எனப்படும் தனி விமானங்கள் மூலமாக இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப இந்திய அரசு சமீபத்தில் அனுமதி அளித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்நிலையில், இந்தியாவிற்கு செல்லும் ஒரு சார்ட்டர் விமானம் தென்னிந்தியாவின் கர்நாடகா மாநிலம் மங்களூர் நகருக்கு வரும் ஜூன் மாதம் 1 ம் தேதி ராஸ் அல் கைமா விமான நிலையத்திலிருந்து புறப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபார்ச்சூன் குழுமத்தின் தலைவரும் (Fortune Group of Hotels), கர்நாடக மாநில NRI மன்றத்தின் (Karnataka non-Resident Indian Forum, KNRI) தலைவருமான பிரவீன் ஷெட்டி, ஸ்பைஸ்ஜெட் (Spicejet) சார்ட்டர் விமானம் மூலமாக, விடுமுறையில் இருக்கும் ஹோட்டல் குழுவின் 105 ஊழியர்களை தாயகத்திற்கு திருப்பி அனுப்பவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துபாயில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் அதிகாரி விபுல் இந்த திருப்பி அனுப்பும் நடவடிக்கையை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், இந்த விமானம் மொத்தம் 180 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஜூன் மாதம் 1 ம் தேதி காலை 9.45 மணிக்கு அமீரகத்திலிருந்து இந்தியாவிற்கு புறப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு சர்வதேச துறைகளில் தனியார் நிறுவனங்கள் மற்றும் சமூகக் குழுக்களுக்கு இந்திய அரசால் மே 26 அன்று தனியார் விமானங்களையும் சார்ட்டர் விமான நடவடிக்கைகளையும் அனுமதித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. தனியார் நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சில சார்ட்டர் விமானங்கள் ஏற்கனவே அபு தாபியிலிருந்து இந்தியாவிற்கு புறப்பட்டுள்ளன என்று விபுல் கூறினார். மேலும் கூறுகையில்,”இந்த சூழ்நிலைகளில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து புறப்படும் முதல் விமானமாக ராஸ் அல் கைமாவில் இருந்து புறப்படும் விமானம் இருக்காது” என்று அவர் மேலும் கூறினார். வந்தே பாரத் மிஷனின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட சோதனைகளைப் போலவே, பயணிகள் புறப்படுவதற்கு முன்பு கட்டாய IgG / IgM சோதனைகள் நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஹோட்டல் ஊழியர்களில் 60 சதவீதம் பேர் ஊதியத்துடன் கூடிய விடுமுறையில் இந்தியாவிற்கு அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஏழு ஃபார்ச்சூன் குழும ஹோட்டல்களில் (Fortune Group of Hotels) மூன்று ஹோட்டல்கள் தற்போது செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது பற்றி ஹோட்டல் குழுமத்தின் தலைவர் ஷெட்டி கூறுகையில், “நான் ஒரு ஹோட்டல் கிளையை ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளுக்கு தனிமைப்படுத்தப்பட்ட வசதிக்காக நன்கொடையாக அளித்துள்ளேன். இதனையும் சேர்த்து மொத்தமாக நான்கு ஹோட்டல்கள் தற்பொழுது செயல்படவில்லை” என்று கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், தனது எந்தவொரு ஊழியரின் விசாக்களையும் ரத்து செய்யவில்லை என்றும், தொற்றுநோய் முற்றிலுமாக தணிந்தவுடன் அவர்களை மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கொண்டு வருவதாகவும் ஷெட்டி கூறினார். ஷெட்டி மேலும் கூறுகையில், “நான் அனைத்து ஊழியர்களுக்கும் விமான டிக்கெட்டுகளை செலுத்தியுள்ளேன். அவர்களின் விடுப்பு சம்பளமும் வழங்கப்பட்டுள்ளது. சில ஊழியர்கள் என்னுடன் 17 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர். அவர்களை மீண்டும் அழைத்து வர நான் விரும்புகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு செல்லும் ஊழியர்கள் அனைவரும் கர்நாடகாவில் உள்ள மங்களூர், உடுப்பி, காசர்கோடு மற்றும் குண்டபுரா மாவட்டங்களில் வசிப்பவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. “மற்ற ஹோட்டல் குழுக்களில் இருந்து ஒரு சில ஊழியர்களும் இந்த விமானத்தில் பயணம் செய்கிறார்கள். இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்த ஊழியர்கள் வந்தே பாரத் மிஷன் விமானங்களில் புறப்படுகிறார்கள்” என்று ஷெட்டி கூறினார்.
தூதரக அதிகாரி விபுல் , வந்தே பாரத் மிஷனின் ஒரு பகுதியாக அனைத்து விமானங்களும் சீராக இயங்கி வருவதாக கூறியுள்ளார். வந்தே பாரத் திட்டத்தில், அடுத்த கட்டத்தின் ஒரு பகுதியாக சிறப்பு விமானங்கள் அமீரகத்திலிருந்து கோவா, ஜெய்ப்பூர், அகமதாபாத், திருச்சி, கோவை, மதுரை மற்றும் சென்னை போன்ற நகரங்களுக்கு செல்லும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
source : Khaleej Times