சிறப்பு விமானம் இயக்க வேண்டி பஹ்ரைன் வாழ் தமிழர்கள் முதல்வருக்கு கோரிக்கை..!! நாடு செல்ல முடியாமல் தவிப்பு..!!
இந்திய அரசாங்கம் வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களை தாய்நாட்டிற்கு மீட்டு வரும் நடவடிக்கையை கடந்த மே மாதம் 7 ம் தேதி முதல் செயல்படுத்தி வருகின்றது. பல நாடுகளில் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் தங்கள் வேலைகளை இழந்தும், சொந்த செலவிற்கு பணமில்லாமலும் கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வளைகுடா நாடுகளில் ஒன்றான பஹ்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் பல தமிழர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்புவதற்கு விமானங்களை ஏற்பாடு செய்யுமாறு தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மற்ற வளைகுடா நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, ஓமான் போன்ற நாடுகளுக்கு விமான ஏற்பாடுகள் செய்திருந்தாலும் இதுவரையிலும் பஹ்ரைன் நாட்டிலிருக்கும் தமிழர்களுக்காக ஒரு விமானம் கூட ஏற்பாடு செய்யாதது அங்கிருக்கும் தமிழர்களுக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கக்கூடியதாக இருக்கின்றது.
சமீபத்தில் பஹ்ரைனில் உள்ள பாரதி தமிழ் சங்கம், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு பஹ்ரைனுக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே விமானங்களை ஏற்பாடு செய்யுமாறும் 4,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் பாதுகாப்பாக தங்கள் வீடுகளை அடைய உதவுமாறும் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பஹ்ரைன் நாட்டில் வேலை செய்யும் தஞ்சாவூரைச் சேர்ந்த கார்த்திகேயன் கூறுகையில், “மார்ச் மாதத்திலிருந்து, நான் உட்பட பலர் வேலைகளை இழந்தும் இந்தியாவிற்கு செல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர். எங்களில் பெரும்பாலானோருக்கு அரசாங்கம் உணவு மற்றும் தங்குமிடம் வழங்கி வருகிறது. இருப்பினும், நாங்கள் எங்கள் சொந்த ஊரிற்கு திரும்ப விரும்புகிறோம்” என்று கூறியுள்ளார்.
“மேலும், சில தொழிலாளர்கள் பிரசவ நேரத்தில் தங்கள் மனைவியுடன் இருக்க வீடு திரும்ப விரும்புகிறார்கள். கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், தமிழ்நாட்டிற்கு இதுவரையிலும் பஹ்ரைன் நாட்டிலிருக்கும் தமிழர்களுக்காக விமானங்கள் ஏற்பாடு செய்யப்படவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தங்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டி, தமிழகத்திற்கு செல்லும் விமானங்கள் குறித்த தகவல்களை பெறுவதற்கு பல தமிழர்கள் ஒவ்வொரு நாளும் இந்திய தூதரகத்திற்கு முன் காத்துக்கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்நாட்டில் இருக்கும் பாரதி தமிழ் சங்கத்தின் உதவி பொதுச் செயலாளர் எம். முத்துவேல் கூறுகையில், ”பஹ்ரைனில் சிக்கியுள்ள தமிழர்கள், மாநில அரசு தலையிட்டு விரைவாக தமிழகத்திற்கு விமானங்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விரும்புகின்றனர். தாயகம் செல்ல முடியாமல் கஷ்டப்படும் தமிழர்களில் பலருக்கு நாங்கள் உணவு மற்றும் உலர் ரேஷன் பொருட்களை வழங்கி வருகிறோம். ஆனால் அவர்கள் அனைவருக்கும் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்பதே முக்கிய குறிக்கோளாக இருக்கின்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.