பாஸ்போர்ட் தகவல் மூலம் அமீரக விசாக்களின் தற்போதய நிலையை எப்படி தெரிந்துகொள்வது..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கக்கூடிய குடியிருப்பாளர்களில் விசா காலாவதியானவர்கள் மற்றும் அமீரக நிறுவனத்தில் பணிபுரிந்து விசா கேன்சல் செய்யப்பட்டு தொடர்ந்து அமீரகத்தில் தங்கி இருப்பவர்கள் உள்ளிட்டோருக்கு அமீரக அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
மார்ச் 1 க்கு முன்னர் விசா காலாவதியானவர்கள் அபராதம் ஏதும் செலுத்தாமல் தங்களின் சொந்த நாட்டிற்கு திரும்பலாம் என்றும், மார்ச் 1 க்கு பின்னர் காலாவதியானவர்கள் இந்த ஆண்டு இறுதி வரையில் அமீரகத்தில் தங்கிக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று அமீரகத்தில் பணிபுரிந்தவர்களில் விசா கேன்சல் செய்யப்பட்டு நாடு திரும்ப முடியாமல் அமீரகத்திலேயே தொடர்ந்து தங்கி இருப்பவர்கள், ஓவர் ஸ்டே அபாரதத்திலிருந்து விலக்கு பெற தங்களின் விசா நிலையை மாற்றி கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற பல்வேறு அறிவிப்புகள் அமீரக அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அமீரகத்தில் இருக்கக்கூடிய குடியிருப்பாளர்கள் தங்கள் விசாவின் தற்போதய நிலை குறித்த சந்தேகங்களை தங்களின் பாஸ்போர்ட் தகவல்களை கொண்டே தெரிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
விசா நிலையை அறிந்து கொள்ள https://smartservices.ica.gov.ae/echannels/web/client/default.html? எனும் இந்த லிங்கில் சென்று முதலாவதாக தங்களின் விசா எந்த வகையை சார்ந்தது என்பதை குறிப்பிட வேண்டும். பின்பு பாஸ்போர்ட் நம்பர், பெயர் மற்றும் பிறந்த தேதி குறித்த விபரங்களை தெரியப்படுத்துவதன் மூலம் விசாவின் தற்போதைய நிலையை தெரிந்து கொள்ளலாம்.